இந்து டாக்கீஸ்

சிவாஜியால் மட்டுமே அது முடியும்

செய்திப்பிரிவு

நடிகர் திலகம் பற்றி நான் நினைக்காத நாளே இல்லை என்று சொல்லுவேன். சென்னையில் உள்ள ‘செவாலியே சிவாஜி கணேசன் சாலை’ வழியாகச் சென்று வரும்போதெல்லாம் என் உள்ளம் பெருமிதத்தால் நிறையும். நானும் எனது சகோதரர் எடிட்டர், இயக்குநர் பி.லெனினும் அவரை அப்பா என்றுதான் அழைப்போம்.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று தன்னுடைய சொந்த ஊரான தஞ்சையின் சூரக்கோட்டைக்குச் சென்றுவிடுவார் சிவாஜி. அதனால் நான் போகிப் பண்டிகை நாளில், அன்னை இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவருடனான ஒவ்வொரு சந்திப்பிலும் அன்பும் பாசமும் வழிந்தோடும். ‘நீ என்னுடைய பீம்பாயின் பிள்ளையல்லவா?’ என்று மோவாய் தொட்டு பாசம் காட்டுவார். அவர் உடல்நலம் குன்றியிருந்த வருடம் அது. வழக்கம்போல் போகிப் பண்டிகையன்று அவருடைய வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அப்போது நடிகர் திலகம் சொன்ன வார்த்தைகள் அவர் உள்ளத்தால் எத்தனை உயர்ந்த மனிதர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

உணர்வுபொங்க அந்தச் சந்திப்பில் அவர் சொன்னார், “வாழ்வில் முழுமை பெற்ற கலைஞனாக, இந்த அன்னை இல்லத்தில் நான் இன்று மனநிறைவுடன் வாழ்வதற்கு மூன்று பேர் காரணம். ஒருவர், ‘பராசக்தி’ படத்தின் மூலம் என்னைத் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய பி.ஏ.பெருமாள். இரண்டாவது அந்தப் படத்தை இயக்கிய உன்னுடைய தாய் மாமன்கள் கிருஷ்ணன் -பஞ்சு. மூன்றாவதாக யாரைச் சொல்லப்போகிறேன் என்று இந்நேரம் உனக்கே தெரிந்திருக்கும். ஆம்! என்னுடைய பீம்பாய் தான். அவனுக்கு மகனாகப் பிறந்ததற்காகக் காலமெல்லாம் நீ கர்வம் கொள். அவன், எனக்கு எத்தனை சிறந்த கதாபாத்திரங்களைக் கொடுத்திருக்கிறான்…! அவன் மட்டும் இந்தக் கலையுலகில் எனக்கு நண்பனாகக் கிடைத்திருக்காவிட்டால், நான் மக்களின் நடிகனாக, அவர்களுடைய அன்பு, பாசம் போன்ற உணர்வுகளுக்கு சினிமாவில் வடிவம் கொடுப்பவனாக ஆகியிருக்க முடியுமா? ” என்று கேட்டு என் கையைப் பிடித்துக்கொண்டார்.

அந்த மூன்று பேர்

உண்மைதான்! நடிகர் திலகம் உயிரோடு இருந்த வரையிலும் சரி, அதன் பின்னர் அவருடைய வாரிசுகளான ராம்குமார், பிரபு இருவரும் தங்களுடைய குடும்பத்தாருடன் பெருமாள் வீட்டுக்குச் சென்று பொங்கல் சீர் கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நடிகர் திலகம் இன்னொரு முக்கியமான தகவலையும் மகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்தார். “உனது தாய் மாமன்கள் கிருஷ்ணன் - பஞ்சு, முதல் படத்தை மட்டுமல்ல, என்னுடைய 125-வது படமான ‘உயர்ந்த மனித’னையும் டைரக்ட் செய்தார்கள்.” என்று சொன்னார். அது கிருஷ்ணன் - பஞ்சுவுக்கு அமைந்த அபூர்வமான வாய்ப்புதான்! அவர்கள் இருவரும் எத்தனையோ புதுமுகங்களை அந்தக் காலத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நல்ல பெயரும் புகழும் பெற்றார்கள். ஆனால், ‘நடிகர் திலகம்’ மட்டும்தான் சுயம்புக் கலைஞனாக, இந்தியத் துணைக் கண்டம் தாண்டிச் சென்று ஹாலிவுட் வரையிலும் பேசப்படுகிறார்.. இன்று இந்தியாவின் கலைஞன் என்பதைத் தாண்டி உலகம் முழுமைக்கும் சொந்தமானக் கலைஞனாக மாறிவிட்டார்.

ஒரே டேக்!

எனது சகோதரர் லெனின் சிவாஜி நடித்த பல படங்களில் இணை, இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். எனது தந்தையார் இயக்கத்தில் சிவாஜி முதன் முதலில் நடித்த படம் ‘ராஜா ராணி’. அந்தப் படத்தில், சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகம் இடம்பெற்றது. அந்த வரலாற்று நாயகன் வேடத்தில், 15 நிமிடம் ஓடக்கூடிய ஒரே காட்சியில் கலைஞரின் அற்புதமான நீண்ட நெடிய வசனத்தைப் பேசி ஒரே டேக்கில் ஓகே செய்தார். சிறு உச்சரிப்புப் பிழையும் இல்லாமல் அந்த சிங்கிள் டேக் காட்சியைச் சிறப்பித்த ‘நடிப்பு ஜீனியஸ்’ அவர். ஆனால், அன்றைக்குத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘லைவ்’ வசன ஒலிப்பதிவு பதிவாகவில்லை. இது பின்னர்தான் தெரிய வந்தது. இந்த விஷயத்தை சிவாஜியிடம் அப்பா சொல்ல, ‘அதனாலென்ன.. ஒலிப்பதிவுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் அழையுங்கள்.. நான் வந்து பேசிக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். இது எப்படி சாத்தியம் என்று எனக்கும் லெனினுக்கும் பெரிய சந்தேகம் வந்துவிட்டது.

நடிகர் திலகம் வந்தார்.அன்று சேரன் செங்குட்டுவனாக மேடையில் தோன்றி, சிம்மக் குரலில் எப்படி ஜாலம் செய்தாரோ, அதிலிருந்து துளியும் விலகவில்லை. மைக்குகள் பொருத்தப்பட்ட இடங்களுக்கு ஏற்ப, அப்படியே ஏற்ற இறக்கங்களோடு 15 நிமிட வசனத்தைப் பேசி முடித்தார். ஆனால், அவர் பேசிய வசனம் காட்சியுடன் லிப் சிங்க் ஆகவேண்டுமே அது நடக்குமா எனச் சந்தேகப்பட்டோம். ஆனால், இம்மியும் பிசகவில்லை. பிரமித்துப்போனோம். அதுதான் நடிகர் திலகம். அவர் நடிக்க, என் சகோதரன் லெனின் இயக்க, வேதம் புதிது கண்ணன் எழுதி நடத்திவந்த ‘சுப முகூர்த்த பத்திரிகை’ என்கிற நாடகத்தை நான் திரைப்படமாக தயாரிப்பதாக இருந்தது. நடிகர் திலகம், எனக்காக அந்த நாடகத்தைப் பார்த்து,வியந்து, நடிக்கவும் தயாராக இருந்தார். ஏனோ, அது நடக்காமல் போய்விட்டது. அதனால் என்ன.. அவரும் பீம்பாயும் சேர்ந்து செய்த சாதனைகள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும்.

கட்டுரையாளர், முதுபெரும் இயக்குநர் பீம்சிங்கின் மகன், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் தயாரிப்பாளர்.

தொடர்புக்கு: a.bhimsingh15@gmail.com

SCROLL FOR NEXT