இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: லைகா ரகசியம்

செய்திப்பிரிவு

தாப்ஸியின் தமிழ்ப் படம்!

இந்தியில் அதிக கவனம் செலுத்திவரும் தாப்ஸி, தமிழில் நடிக்க வேண்டும் என்றால் தன்னைச் சுற்றிக் கதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து வருகிறார். அவரிடம் கதை சொல்லி அசத்தியிருக்கிறார், மூத்த இயக்குநர், நடிகர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக். அவருடைய இயக்கத்தில் தாப்ஸி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் ட்ரைலரை சுமார் 2 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த நகைச்சுவை திகில் படத்தில், விஜய் சேதுபதி கொஞ்சமாக வந்து செல்கிறாராம். டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகும் இப்படம், தமிழில் தயாராகியிருந்தாலும் தெலுங்கு, இந்தி உட்படப் பல மொழிகளில் வெளியிடுகிறார்கள். எல்லா மொழிகளுக்கும் ஏற்ற கதை என்பதால், தெலுங்கு, இந்தியில் மார்கெட் கொண்ட தாப்ஸிக்கு, விஜய்சேதுபதியைவிட அதிகம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!

லைகா ரகசியம்!

ஒரு வழியாக ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி - 2’ படத்தின் சிக்கலிருந்து வெளியே வந்துவிட்டார் வைகைப் புயல் வடிவேலு. ‘ரெட் கார்டு’ தடையைச் சந்தித்தபோதும் கடந்த பல ஆண்டுகளில் வெகுசில படங்களில் மட்டுமே நடித்தார். எதுவும் ஓடவில்லை. ‘மீம்களின் நாயகன்’ என்ற செல்வாக்கு மட்டும் குறைந்துவிடவில்லை. தற்போது, தயாரிப்பாளர்கள் முரளி, மன்னன் ஆகியோர் பஞ்சாயத்துப் பேசி, வடிவேலு - இயக்குநர் ஷங்கர் பிரச்சினையை சுமுகமாக முடித்துவைத்துவிட்டார்களாம். இதனால், வடிவேலுவை வைத்து அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்க முன்வந்துவிட்டது லைகா நிறுவனம். அதில் முதல் கட்டமாக, சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதை அமர்க்களமாக அறிவித்திருக்கிறார்கள். வடிவேலுவால் இயக்குநர் ஷங்கருக்கு ஏற்பட்ட இழப்பை லைகா ஈடுசெய்திருப்பதாகத் தகவல்.

மண்ணின் நகைச்சுவை!

சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள புதிய படமான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' வரும் 24-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. குன்னிமுத்து - வீராயி இருவரும் கிராமத்துத் தம்பதி. கன்றுகளாகப் பிறந்தது முதல், கருப்பன் - வெள்ளையன் எனப் பெயர் சூட்டி, பிள்ளைகளைப்போல் வளர்த்த இரண்டு காளை மாடுகள் தொலைந்துவிடுகின்றன. அவற்றைத் தேடி திசைக்கொருவராக அலைகின்றனர். காவல் துறையினர், கட்சிக்காரர்கள், ஊடகத்துறையினர், சக மனிதர்கள் இவர்களை எப்படிப் பார்த்தனர். தொலைத்த காளைகளைக் கண்டுபிடித்தார்களா என்பது கதை. கிராமியப் பின்னணியில் விரியும் அவல நகைச்சுவைப் படமான இதில், ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் என வளரும் நடிகர்களை நம்பிக் களமிறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி. நேற்று வெளியான ட்ரைலருக்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

யோகி பாபுவின் நன்றி!

சினிமா விழாக்களில் காமெடியனுக்கு கதாநாயகன் நன்றி சொல்வது அபூர்வம். சாந்தனு பக்யராஜ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மொத்த கோலிவுட்டும் கூடியிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தருக்கு முதலில் நன்றி சொன்ன சாந்தனு, அடுத்து ‘இவ்வளவு பிஸியான நடிகராக இருந்தும் எனக்காக வந்து நடித்துக் கொடுத்தார்’ என்று ‘யோகி பாபு’வுக்கு குறிப்பிட்டு நன்றி சொன்னார். யோகி பாபு பேசும்போது “15 வருடங்களுக்கு முன்பு, பாக்யராஜ் சார் அலுவலகத்தின் முன்னால் வாய்ப்புக்காக நின்றிருப்பேன், அப்போது என்னை கவனித்து, ‘சித்து பிளஸ் 2’ படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்புத் தந்தார் பாக்யராஜ் சார். இப்போது பிஸியாக இருக்கிறேன் என்பதால் சாந்தனு படத்தை தவிர்ப்பது நான் செலுத்தும் நன்றியாக இருக்காது. சாந்தனு எப்போது கூப்பிட்டாலும் வந்து நடிப்பேன்” என்று ப்ளாஷ் - பேக் பகிர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது.

ஷாருக் கானின் ‘லயன்’

விஜய் நடித்த ‘பிகில்’ படத்துக்குப் பிறகு, பாலிவுட் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் இயக்குநர் அட்லீ. ஷாருக்கான் - நயன்தாரா இணையும் இந்திப் படத்தை இயக்கவிருக்கும் அவர், அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அனுமதி கேட்டுள்ள கடிதம் வெளியே கசிந்துவிட்டது. அதில், ‘லயன்’ என்கிற ‘ஒர்க்கிங் டைட்டில்’ குறிப்பிடப்பட்டிருப்பதை அட்லீ அபிமானிகளும், ஷாருக்கான் ரசிகர்களும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT