ஷங்கரின் மகள்!
‘எந்திரன்’, ‘2.0’ படங்களின் மூலம் உலக வெகுஜன சினிமா அரங்கைச் சென்றடைந்தவர் இயக்குநர் ஷங்கர். அவர் தன்னுடைய மகள் அதிதியை கதாநாயகியாக நடிக்க அனுமதித்திருப்பதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், அவருடைய தம்பி கார்த்தி நடிக்கும் ‘விருமன்' என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆறு மாதம் நடிப்புப் பயிற்சி எடுத்துவிட்டு வந்திருக்கிறார். கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ என்கிற படத்தை இயக்கி வெற்றி கொடுத்த முத்தையா இயக்கும் படம். தனது படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரத் தவறாத முத்தையா, அதிதிக்கு நிச்சயமாகச் சத்தான கதாபாத்திரம் கொடுத்திருப்பார்!
தவறவிட்ட விஜய்சேதுபதி!
இன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘லாபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, அப்படத்தின் இயக்குநர், மறைந்த
எஸ்.பி.ஜனநாதனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் போலவே நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி உரை உணர்ச்சிக் காவியமாக இருந்தது. “ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக வாய்ப்பு தேடியக் காலகட்டத்தில் அவரைச் சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்த காலகட்டம் வரை மறக்க முடியாது. அவருடைய மறைவிற்குப் பிறகே அவரைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொண்டேன். எனக்கும் அவருக்குமான உறவு தந்தை - மகன் போன்றது. அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது. காலம் இவ்வளவு படு பாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் பற்றி இப்போது தெரிவது அப்போதே தெரிந்திருந்தால், புரிந்து கொண்டிருந்தால்.. அவருடன் நிறைய காலம் செலவிட்டிருப்பேன். பெரும்பாலும் மனிதர்கள் மீது அன்பு செலுத்த தவறிவிடுகிறோம். நானும் அதைத் தவற விட்டிருக்கிறேன். யாராவது உங்கள் மீது அன்பு பாராட்டினால், அவர்களை நீங்கள் புரிந்து கொண்டால். அவருடன் நிறைய நேரத்தை செலவிடுங்கள் அன்பைப் பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள்.” என்று பேசினார். மேடைப் பேச்சிலும் விஜய்சேதுபதி வீச்சுதான்!
தோல்விக்குப் பாராட்டு!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வாள் சண்டைப் பிரிவில் வெற்றிகரமாக முன்னேறி பதக்கம் இழந்தவர் தமிழ்ப் பெண்ணான பவானி தேவி. அவரை வீடு தேடிச் சென்று சந்தித்து, தங்கச் சங்கிலி பரிசளித்து, “விடாமுயற்சியுடன் போராடுங்கள் அடுத்த முறை வெல்லலாம்” என நம்பிக்கை கொடுத்து திரும்பியிருக்கிறார் நடிகர் சசிகுமார். தோல்வி, வெற்றிக்கான படிக்கட்டு என பாராட்ட தனி உள்ளம் வேண்டும்.
விடாது கிரிக்கெட்!
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது மட்டையைத் தூக்கி வீசிவிட்டு சினிமாவில் ட்வெண்டி - ட்வெண்டி ஆட வந்துவிட்டார். தமிழ், பஞ்சாபி படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கும் ஹர்பஜன், தமிழில் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் முதல் படம் ‘ஃபிரெண்ட்ஷிப்'. இதில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சக கிரிக்கெட் வீரர்கள் ‘ட்வீட்’களைப் போட்டு ஹர்பஜனைப் பாராட்டி வருகிறார்கள். அண்ணாருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா மரியநேசன் அறிமுகமாகிறார். படத்தில் பாட்டு, ஃபைட்டு மட்டுமல்ல, வில்லனை கிரிக்கெட் விளையாடி ஜெயிக்கும்விதமாக காட்சிகள் வைத்திருக்கிறார்களாம். விடாது கிரிக்கெட் !
சினிமாவில் புதிது!
புதிய முயற்சி என்று தெரிந்தால் அதற்கு ஓடோடி வந்து கைகொடுக்கும் தயாரிப்பாளர் என்று பெயர் பெற்றிருப்பவர், தற்போது ‘கொற்றவை’ படத்தை இயக்கிவரும் தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார். அவருடைய தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘ஜாங்கோ’. “தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் அடிப்படையில் சில படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், டைம் லூப் அடிப்படையிலான முதல் திரைப்படமாக ‘ஜாங்கோ’ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும். மேலும், அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் இருந்தால் மட்டுமே ரசிகர்களை ஈர்க்கும். அதைச் சாதித்திருக்கிறோம்,” என்கிறார், ‘ஈரம்’ அறிவழகன், ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றித் தேறி வந்திருக்கும் இவர். சதீஷ்குமார் என்கிற புதுமுகம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக விறுவிறு மிருணாளினி ரவி. இந்த டீமுக்கு டைம் நல்லா இருக்கு!