இந்து டாக்கீஸ்

ஓடிடி உலகம்: வல்லின கதைகள்!

எஸ்.எஸ்.லெனின்

தற்காலத்தின் ஆந்தாலஜி படைப்புகள் என்பவை ஓடிடி தயவில் பிரபலமானவை. அவற்றிலிருந்து வேறுபட்டதாக, ‘ஹைப்பர்லிங்க்’ என்கிற பாணியில் வெளியாகி இருக்கிறது ‘கசடதபற’ திரைப்படம்.

குவென்டின் டரண்டினோ இயக்கிய ‘பல்ப் பிக்சன்’ திரைப்படம் ‘ஹைப்பர்லிங்க்’ படைப்புக்கு சிறந்த உதாரணம். ‘கசடதபற’க்கு முன்பாக தமிழிலும் அப்படியான அறிவிப்பின்றி ‘திருவிளையாடல்’ காலத்தில் தொடங்கி அண்மை வருடங்களில், ’மாநகரம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற திரைப்படங்கள் வரை கணிசமான உதாரணங்கள் உண்டு. ஆனால் இது ‘ஹைப்பர்லிங்க்’ படைப்பு என்கிற அறிவிப்புடன் ‘கசடதபற’ படத்தைத் தந்திருப்பதுடன் அதற்கான நியாயத்தையும் செய்திருக்கிறார், திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கும் சிம்புதேவன்.

அடுத்தடுத்து விரியும் ஆறு கதைகள். ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று முற்றிலும் வேறான கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒன்றில் விழுந்த முடிச்சு, மற்றொன்றில் அவிழ்கிறது அல்லது முடிச்சை மேலும் இறுக்குகிறது. கதாபாத்திரங்கள் வெவ்வேறு தளங்களில் இருந்தபடி அடுத்தடுத்த கதைகளில் தொடரவும் செய்கிறார்கள். இத்தனையும் ‘வான்டேஜ் பாயிண்ட்’, ’பட்டாம்பூச்சி விளைவு’ என இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையில் அமையுமென முன் கூட்டியே அறிவித்தும் விடுகிறார்கள். ஆனால் இந்த விவரணைகளில் எல்லாம் விழி பிதுங்காமல் திரைப்படத்தை ரசிப்பவர்களுக்கு அருமையான திரை அனுபவத்தைத் தருகிறார் சிம்புதேவன்.

‘கவசம்’ கதையில் ரெஜினாவை காதலிக்கும் பிரேம்ஜி, இறுதியில் எவரும் எதிர்பார்த்திராத முடிவை எடுக்கிறார். அந்த முடிவின் பின்னணியில் முளைக்கும் தாதா சம்பத், அவரது மகன் சாந்தனு இடையிலான திருப்பங்கள் நிறைந்த ஒன்றாக ‘சதியாடல்’ என்கிற கதை தொடர்கிறது. இந்த சம்பத்தை என்கவுன்டருக்காக எதிர்கொள்ளும் சந்தீப் கிஷண், அதே என்கவுன்டரின் இருவேறு முனைகளில் நெருக்கும் மனைவி பிரியா பவானி சங்கர், மேலதிகாரி சுப்பு பஞ்சுவால் ‘தப்பாட்டம்’ கதையில் தடுமாறுகிறார். சந்தீப் வழியில் குறுக்கிடும் ஹரிஷ் கல்யாண், குறுக்கு வழியில் கோடிகளை குவிக்கும் பின்னணியை ‘பந்தயம்’ கதை விவரிக்கிறது. அவருடைய உயிரை ஒரு கட்டத்தில் காப்பாற்றும் விஜயலட்சுமி, ‘அறம்பற்ற’ கதையில் தன் மகனின் உயிர்காக்கும் போராட்டத்தில் தடம்புரள்கிறார்.அவர், வெங்கட் பிரபுக்கு எதிரான வழக்காக விரியும் ‘அக்கற’ கதையில் பொய்சாட்சியாகிறார். வெங்கட் பிரபு தனது விசுவாசத்துக்கான பரிசாகத் தூக்கு கயிறை எதிர்கொள்கிறார். இவர்கள் அனைவரும் ஏதோவொரு புள்ளியில் முன்பின் அறியாத அடுத்தவருடன் ஊடாடும் விநோதகங்கள், மற்றொரு கோணத்தில் விசித்திர முடிவுகளுக்கு இட்டுச் செல்வதை அசத்தலான திரைக்கதையில் பிணைத்திருக்கிறார்கள்.

இரண்டே கால் மணி நேரத்தில் கச்சிதமாக விரியும் திரைப்படம், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பார்ப்புகளை கூட்டவும் செய்கிறது. ஏகப்பட்டக் கதாபாத்திரங்கள், முடிச்சுகள், திருப்பங்கள் என சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை. மெல்லிய நகைச்சுவை, திரில்லர் ரசம் பூசிய கதையோட்டம், அதன் மாறுபட்ட பின்னணிகளால் ஈர்க்கிறது. அதே சமயம் சிம்புதேவனின் தனித்துவ நகைச்சுவையை எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றமும் காத்திருக்கிறது. அவரது ‘அறை எண்..’ திரைப்படத்தை நினைவூட்டினாலும் வாழ்க்கை தத்துவம், காதல் என ‘கவசம்’ இனிய தொடக்கம் தருகிறது.

தொடக்கம் போலவே, நிறைவாக வரும் ‘அக்கற’யும் நெஞ்சில் நிற்கிறது. இதில் திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் பிரபு, தனது விசுவாசத்துக்கு கிடைத்த பரிசாக பெற்ற குழந்தைகளை நிரந்தரமாக பிரிய நேரிடும் நிர்க்கதியில், அப்பாவி அப்பாவாக நெகிழச் செய்கிறார். மீனவ கிராமத்தின் சத்துணவு சமையலராக வரும் விஜயலட்சுமிக்கும் சவாலான வேடம். ‘அக்கற’ வெங்கட் பிரபு போலன்றி ‘சதியாடல்’ சாந்தனு, ‘பந்தயம்’ ஹரிஷ் கல்யாண் கதைகளின் முடிவுகள் அந்தரத்தில் தொக்கி நிற்கின்றன.

வசனங்கள் திரைப்படத்தின் பெரும்பலமாக இருப்பினும் அதன் மூலமாகவே நிறைய இடங்களில் கதை நகர்வது திரைமொழியை சோர்வடைய செய்கிறது. சில இடங்களில் வசனத்தை ஒலிக்கலவை மூழ்கடித்திருப்பதையும் சரி செய்திருக்கலாம்.

ஓடிடி தளங்களில் வித்தியாசமான படைப் பனுபவத்தைத் தேடி நுகரவிரும்பும் ரசிகர்களுக்கு ’கசடதபற’ மூலம் விருந்து வைத்திருக்கிறார் சிம்புதேவன்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT