இந்து டாக்கீஸ்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: காவிரிக் கரையின் தோட்டத்திலே!

எஸ்.எஸ்.வாசன்

இந்தித் திரைப்படப் பாடல்களின் மெட்டுக்கு ஏற்ற வரிகளில் அமைந்த அக்காலத் தமிழ்ப் பாடல்களும் வெற்றியடைந்த தமிழ்ப் பாடல்களின் மெட்டுகளில் அமையும் இக்கால இந்திப் படப் பாடல்களும் ஒரே சூழலின் இரண்டு பார்வைகளாக ஒரு போதும் விளங்காது. இந்தப் பொது விதிக்கு விதிவிலக்காக இந்திக் கவிஞர் ஃபரூக் கைசர் எழுதிய ஒரு பாடலும் கண்ணதாசனின் ஒரு பாடலும் விளங்குகின்றன. நாயகி வெளிப்படுத்தும் முதல் காதல் உணர்வைச் சொல்லும் இந்திப் பாடலின் இன்னொரு பார்வையாக மட்டுமின்றி, அதைவிட நளினமாகவும் மென்மையாகவும் பெண் மன உணர்வுகளைத் தென்றலாக வீசச் செய்யும் செப்படி வித்தகன் கண்ணதாசன் செதுக்கிய தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.

இந்திப் பாடல்:

படம்: பாரஸ்மணி, பாடலாசிரியர்: ஃபரூக் கைசர். இசை: லட்சுமி காந்த் பியாரிலால்.

பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

உய் மா உய் மா யே க்யா ஹோகயா

உன் கீ கலி மே தில் கோ கயா

பிந்தியா ஹோதோ தூண்ட் பீ லூம் மே

தில் நா தூண்டா ஜாயே

பொருள்:

அய்யோ அய்யோ என்ன ஆயிற்று

அவனிடத்தில் என் இதயம் தொலைந்துவிட்டது

நெற்றிப் பொட்டு எனில் தேடி எடுத்துவிடுவேன்

(தொலைந்த) நெஞ்சங்கள் தேடினால் கிடைக்காது

ஒரு நாள் நடந்த அந்த நதிக் கரை சந்திப்பில்

தெரியாமல் அவனுடன் செய்தேன் (காதல்) சமிக்ஞை

(அப்போது) சத்தியம் செய்துகொண்டேன் நான்

காதலில் விழ மாட்டேன் காதலுக்கு ஒப்ப மாட்டேன்

இப்போது அவ்விஷயம் என் நினைவுக்கு வருகிறதே

அதனால் பழி வரக்கூடாது எனப் பயப்படுகிறேன் நான்

கண்ணாடி எனில் உடைத்துக் கடாசிவிடுவேன்

என்ன செய்வது இதயமாயிற்றே

காதல் பாதை ஏற்ற இறக்கங்கள் கொண்டது கண்ணே

ஒடி வருவேன் எப்படி அதில் உன் பின்னே

ஏதாவது முட்டி எனது முக்காடு விழுந்துவிட்டால்

பட்டென என் (உண்மை) சொரூபம் பளிச்செனத் தெரியுமே

இக்கட்டில் இருக்கிறது என் நிலை

உனக்கு என்ன தெரியும் அந்த நிலை

உலகம் என்றாலும் உதறிவிடுவேன்

உள்ளத்தின் காதலை விடுவது கடினம்

அய்யோ அய்யோ என்ன ஆயிற்று

அவனிடத்தில் என் இதயம் தொலைந்துவிட்டது

இத்திரைப்படத்தில் நடித்த ஹெலன் காட்டிய அவரது 24 வயது இளமை நடன முத்திரை பாரம்பரிய வகை சார்ந்தது. அதற்கு இணையாக இருந்தது தமிழ்ப் படத்தில் லெக்கிங்ஸ் அணிந்து ஆடிய எல். விஜயலக்ஷ்மியின் நவீன நடனம்

தமிழ்ப் பாடல்:

திரைப் படம்: இரு வல்லவர்கள் (1966)

பாடல்: கவியரசர் கண்ணதாசன்

பாடியவர்கள்: பி.சுசீலா மற்றும் குழுவினர்

இசை: வேதா

பெண்: காவிரிக் கரையின் தோட்டத்திலே

கானம் வந்தது தோழியரே

கானம் வந்த வழியினிலே

கண்ணன் வந்தான் தோழியரே

குழுவினர்: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே

பெண்: இசை ஒன்று பாடினான்

இளம் பெண்ணை நாடி

மெதுவாகப் பேசினான்

பொருளென்ன தோழி

என் சின்ன உடல் ஆட

என் கன்னி இடை ஆட

பின் மன்னவனும் கூட

நான் என்ன சொல்ல தோழி

அடடா மன்னன் கண்ணனடி

ஆயிரம் கலையில் மன்னனடி

பருவம் கவரும் கள்ளனடி

பள்ளியில் பாடும் கவிஞனடி

குழுவினர்: காவிரிக் கரையின் தோட்டத்திலே

கானம் வந்தது தோழியரே

சுசீலா: கானம் வந்த வழியினிலே

குழுவினர்: கண்ணன் வந்தான் தோழியரே

பெண்: ஓஹோ கண்ணன் வந்தான் தோழியரே

பெண்: அறியாத பெண்ணிடம் அவன்

சொன்ன வார்த்தை

விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி

ஹோ என்னை அவன் மெல்ல

தன் கையிரண்டில் அள்ள

நான் மெல்ல மெல்லத் துள்ள

ஓ என்னவென்று சொல்ல

அவனைக் கண்டால் வரச் சொல்லடி

அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி

தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி

தனியே நிற்பேன் எனச் சொல்லடி

குழுவினர்: காவிரிக் கரையின் தோட்டத்திலே

கானம் வந்தது தோழியரே

பெண்: கானம் வந்த வழியினிலே

கண்ணன் வந்தான் தோழியரே

SCROLL FOR NEXT