ஹாங்காங்கில் தற்போது ‘தீபன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. மே 2015-ல் நடந்த கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பனை விருதை வென்ற படம் இது. அப்போது ஹாங்காங் நாட்டின் நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட், தீபனாக நடித்த அந்தோணிதாசன் ஹாங்காங்கில் ஆறு மாதங்கள் அகதியாக வாழ்ந்தவர் என்று எழுதியிருந்தது. அது 1988-ம் ஆண்டு.
முன்னாள் போராளியான அவருக்கு அப்போது வயது 19. பிரான்ஸில் 1993-ல் தஞ்சம் புகுந்த அந்தோணிதாசனின் புனைபெயர் ஷோபாசக்தி என்றும், அவர் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதிவருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தது நாளிதழ். இப்போது வாசகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுவருகிற அவரது ‘Box- கதைப் புத்தகம்’ என்ற நாவல் அப்போது வெளியாகவில்லை. ‘தீபன்’ படத்தின் இயக்குநர் ஜாக் ஒதியார் சர்வதேசத் திரையுலகில் அறியப்பட்டவர். இவரது முந்தைய படங்களான ‘A Prophet’, ‘Rust and Bone’ ஆகியவையும் விருதுகளைக் குவித்தவை.
போராளியின் கதை
சிவதாசன் ஒரு முன்னாள் போராளி. அவனது புதிய பெயர்தான் தீபன். அவனுக்குக் கிடைக்கிற கடவுச் சீட்டிலுள்ள பெயர். இளம் பெண்ணான யாழினியும் (காளீஸ்வரி), 9 வயதுச் சிறுமியான இளையாளும் (குளோடின்) படத்தின் பிற பிரதான பாத்திரங்கள்; அந்தப் பெயர்களும்கூட அவர்களது சொந்தப் பெயர்களல்ல. கள்ளக் கடவுச்சீட்டில் உள்ள பெயர்கள். மூவரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். மூவரும் தத்தமது குடும்பங்களை யுத்தத்தில் இழந்தவர்கள். இப்போது ஒரே குடும்பமாக அபிநயிக்கிறார்கள்.
அகதிக் கோரிக்கையோடு பிரான்ஸில் தஞ்சம் அடைகிறார்கள். கொஞ்ச நாட்களில் தீபனுக்குப் புறநகர் ஒன்றின் தொகுதி வீட்டில் பராமரிப்பாளானாக வேலை கிடைக்கிறது. இளையாள் முதன்முதலாகப் பள்ளிக்குப் போகிறாள். யாழினிக்கும் ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை கிடைக்கிறது. மெல்ல மெல்ல ஒரு குடும்பமாக வாழத் தலைப்படுகிறார்கள். அப்போது அந்தக் கட்டிடத் தொகுதியில் இயங்கிவரும் போதைப்பொருள் மாபியாக்களிடையே மோதல் ஏற்படுகிறது. தீபன் அதற்குள் இழுபடுகிறான். அவன் அடக்கி வைத்திருந்த, அவனுள் கனன்றுகொண்டிருந்த வன்முறை வெளிப்படுகிறது. அகதிகள் சமாதானத்தையே நேசிக்கிறார்கள் என்றுதான் படம் முடிகிறது. உயிர் தரித்திருப்பதற்கும் பிழைத்திருப்பதற்கும்தானே அவர்கள் இத்தனை பாடு படுகிறார்கள்?
புலம்பெயர்வும் அலைந்துழல்வும்
1983 கலவரத்துக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலரும் திரவியம் தேடிப் போனவர்களில்லை. புதிய மண்ணில் கால் பதிக்கும்போது அவர்கள் கையிருப்பிலுள்ள காசு குறைவு;
அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களும் குறைவு. போதிய கம்பளியாடை இல்லாத அவர்களைக் குளிரும் பனியும் வாட்டும். புதிய கலாச்சாரமும், புரியாத மொழியும் அவர்களைச் சுற்றிக் காற்றில் கலந்திருக்கும் கசப்புணர்வும் மேலதிகமாக வாட்டும். இவர்களின் அலைதல் எழுத்தில்கூட அதிகம் பதிவாகவில்லை. திரைப்படங்களில் அபூர்வம். ஆதலால், இந்தப் படம் வாராது போல் வந்த மாமணி.
சர்வதேசத் தமிழ்ப் படம்
படத்தில் பிரெஞ்சுப் பாத்திரங்கள் பிரெஞ்சிலும் தமிழ்ப் பாத்திரங்கள் தமிழிலும் பேசுகிறார்கள். படத்தில் மிகுதியும் தமிழ்தான் கேட்கிறது. ஹாங்காங்கில் ஆங்கில, சீன மொழி சப்டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. படம் உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களை மனதில் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழ் அறிந்தவர்களால் பல காட்சிகளை நெருக்கமாக உணர முடியும். ‘பாலும் தெளிதேனும்’, ‘நிலா அது வானத்து மேலே’ போன்ற பாடல்களைப் பாத்திரங்கள் பாடுகிறபோது, அவை ஒரு தமிழ்ப் பார்வையாளருக்கு, அவற்றின் மீது படிந்திருக்கும் காலத்தின் தூசியோடு வந்து சேர்கின்றன. தமிழ் தெரியாத இயக்குநர் - கதாசிரியரின் நுண்ணுணர்வு வியப்பூட்டுகிறது.
படத்தில் பேசாத தருணங்களும் ஏராளமுண்டு. ஒரு காட்சியில் தீபன் முள்ளிவாய்க்காலில் படுகாயமுற்றவர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பான். எவ்விதமான முகபாவமும் இல்லை. எந்த வசனமும் இல்லை. படத்தில் அரசியல் காட்சிகள் குறைவுதான். அகதிகளின் அலைச்சல்தான் படத்தின் மையம்.
தீபன் தற்போது ஹாங்காங்கில் வெளியாகி இரண்டு திரையரங்குகளில் ஓடுகிறது. படத்துக்கு ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ எழுதிய விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: ‘மூன்று அகதிகளும் புதிய உலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் படுகிற அல்லல்கள், அவர்கள் கைவிட்டுவிட்டு வந்த பூமியில் அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல’.
படம் இங்கிலாந்தில் இவ்வாண்டு ஏப்ரலில் வெளியாகும். அமெரிக்காவிலும் கனடாவிலும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவிலும் விரைவில் வெளிவரலாம்.
- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com