குடும்ப அமைப்பின் மேன்மையைத் திறம்பட எடுத்துக்காட்டியவர் இயக்குநர் விசு. ‘டாக் ஷோ’ என்ற வடிவத்துக்குத் தொலைக்காட்சியுலகில் அர்த்தபூர்வமான மேடை அமைத்துக் கொடுத்தவர். தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்குத் தலைவராகப் பொறுப்பு வகித்து, பல கதைத் திருட்டு புகார்களுக்குத் தீர்வு கண்டவர். தற்போது மீண்டும் அச்சங்கத்தின் தேர்தலில் போட்டியிடாமல் விலகிய அவர், ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார். அவரைச் சந்தித்தபோது…
எழுத்தாளர் சங்கத் தேர்தலில் இந்த முறை ஏன் நீங்க போட்டியிடல?
கொஞ்சம் உடல்நலமின்மைதான் காரணம். தவிர என்னோட வீடு இப்போ சோழிங்கநல்லூர்ல இருக்கு. அங்கிருந்து இங்க வந்துட்டுப்போக முடியல. சங்கத்துல இருக்கவங்க போஸ்டிங் தரோம்னுதான் சொன்னாங்க. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இயக்குநர்களே கதை எழுதிடுறாங்க, அப்படி இருக்கும்போது எழுத்தாளர் சங்கத்துக்கான தேவை இருக்கா?
அம்மாதான் குழந்தைய பெத்துக்குறா, அதுக்குனு அப்பா எதுக்கு தேவைனு சொல்லிட முடியுமா? எல்லாரும் எடுத்தவுடனே இயக்குநராக முடியாது. கே.எஸ்.ரவிக்குமர், ஷங்கர் மாதிரி பெரிய இயக்குநர்கள் எதுக்காக எழுத்தாளரை வெச்சுக்கறாங்க? ஆல் டைரக்டர்ஸ் ஆர் நாட் ரைட்டர்ஸ். என்னதான் அம்மா அப்பா மாதிரி செயல்பட்டாலும் எழுத்தை காட்சியா வடிக்கும்போது எழுத்தாளர்கள் வர்க்கம் தனி, இயக்குநர் வர்க்கம் தனின்னு புரிஞ்சுபோயிடும். இவங்க ரெண்டு பேரும் படத்துக்கு வேணும்.
இயக்குநர் சங்கத்து நிர்வாகிகள் எழுத்தாளர் சங்கத்துல போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்காங்க. அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
அவங்களுக்கு இயக்குநர் சங்கம் தனி, எழுத்தாளர் சங்கம் தனியென்ற எண்ணம் இருக்கனும், நான் இயக்குநரா இருந்தாலும் எழுத்தாளர் சங்க தலைவரா இருந்தப்போ எழுத்தாளர் சங்கத் தலைவரா மட்டும்தான் இருந்தேன். விக்ரமனும் அப்படி பணியாற்றுவாருன்னு நான் நம்புறேன்.
நீங்க ஏன் மணல் கயிறு இரண்டாம் பாகம் படத்தை இயக்கவில்லை?
இப்போ இருக்கிற வொர்க்கிங் செட் அப்பை வெச்சிட்டு என்னால் ஒரு முழு படம் இயக்க முடியும்னு தோணல. எல்லாமே நான் டிமாண்ட் பண்ணணும். ஒரு கால்ஷீட் மேல போக மாட்டேன், போக வேண்டிய அவசியமும் எனக்கில்ல. இப்போ அது முடியுமானு தெரியல. பாப்போம், ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைச்சா கண்டிப்பா படம் இயக்குவேன்.
ஒரு வெற்றிகரமான டாக் ஷோவுக்கு என்ன தேவைன்னு உங்க அனுபவத்துலேர்ந்து சொல்ல முடியுமா?
ஷோவோட தொகுப்பாளரா இருக்கவங்கதான் முக்கியம். அவங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் இருக்கணும், ஒரு இயக்குநர் இருக்கணும், ஒரு தயாரிப்பாளர் இருக்கணும், ஒரு நடிகர் இருக்கணும். இந்த நாலும் அவங்களுக்குள்ள இருந்தாதான் அந்த ஷோ வெற்றிபெறும். இதுல ஒண்ணு இல்லேன்னாலும் வெற்றி பெறுவது கடினம்.
குடும்பக் கதைகள் மீதே நீங்க அதிக கவனம் குவிக்க என்ன காரணம்?
நான் மிடில் கிளாஸ்தான். நான் பார்த்த குடும்பங்கள், நான் பார்த்த பெண்கள், அவங்களுக்குப் பின்னால் இருக்கும் பிரச்சனைகள் இதுதான் கதை எழுதும்போது என் நினைவுக்கு வரும். அதனால்தான் என் கதைகள் யதார்த்தமாக இருக்கும். நமக்கு முன்னால உயிரோட இருக்கிற யதார்த்தத்தை விட்டுட்டு வேற கதைகளுக்குத் தாவறது கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருந்தது.
பா.ஜ.க.வில் சேர்ந்ததற்கான காரணம்?
எனக்கென்று சில சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி இருந்தது. அதை நிறைவேத்துறதுக்காக அ.தி.மு.க.வில் இனைந்தேன், ஆனால் அது எனக்கு மனநிறைவைத் தரவில்லை. காரணம் அவர்கள் என்னை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதானாலதான் இப்ப பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறேன்.