இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: உறுதி செய்த கீர்த்தி!

செய்திப்பிரிவு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் ‘தெறி’. அடுத்து ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் இயக்குநர் பரதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவலை இந்து டாக்கீஸ் முந்தித் தந்தது. தற்போது அந்தத் தகவலை கீர்த்தி சுரேஷ் தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். தற்போது தெலுங்குப் பட உலகிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

முடிந்தது கபாலி!

ரஜினி நடிப்பில் மலேசியாவில் நடந்துவந்த ‘கபாலி’ படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. ‘கலைப் புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை வரும் கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல். கபாலி படத்துக்கு டப்பிங் பணிகளை முடித்துவிட்டு ‘எந்திரன் 2’-ல் ரஜினி தனது முழு கவனத்தையும் செலுத்தத் திட்டமிட்டு இருக்கிறார்.

எதிர்பாராக் கூட்டணி!

பீட்சா, ஜிகர்தண்டா போன்ற மாறுபட்ட படங்களைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டில் தற்போதைய சூடான செய்தி. வித்தியாசமான இந்தக் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள்.

‘எமனி’ல் இணைகிறார்கள்!

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘நான்'. தற்போது அதே கூட்டணி இப்போது மீண்டும் 'எமன்' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் புதியப் படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார் விஜய் ஆண்டனி.

SCROLL FOR NEXT