அருள்நிதி நடிப்பில் அடுத்து உருவாகிவரும் படம் 'தேஜாவு'. மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். படம் தொடர்பாக அவரிடம் கேட்ட போது, "பல்வேறு த்ரில்லர் கதைகளில் அருள்நிதி நடித்திருந்தாலும் இது அவருக்கு முற்றிலும் வித்தியாசமான கதைக்களம். இதில் புதிய தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துவருகிறார்.
படத்தின் அடுத்த காட்சி என்ன என்பதைப் பார்வையாளர்கள் யூகிக்க முடியாத அளவுக்குத் திரைக்கதை அமைத்துள்ளேன். இந்தக் கதைக்களத்துக்குப் பாடல்கள் தேவைப்படாததால் வைக்கவில்லை. பின்னணி இசையை ஜிப்ரான் தனித்துவமாக வடிவமைத்து வருகிறார். மதுபாலா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட் கதாபாத்திரத்தைச் சுற்றித் தான் கதை நகரும். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கியுள்ளேன். தமிழில் அருள்நிதியும், தெலுங்கில் நவீன் சந்திராவும் நடித்துள்ளனர்" என்று கூறுகிறார்.
மூன்றாம் முறை கூட்டணி
கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் பிளாக் பஸ்டர் வெற்றியை ஈட்டிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா'. அதன் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்த 'அச்சம் என்பது மடமையடா' அவ்வளவாக சோபிக்கவில்லை. தற்போது 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி முடிக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாமரை பாடல்களை எழுதும் இந்தப் படத்தில் கதாநாயகி, வில்லன் கதாபாத்திரங்களில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதை கௌதம் மேனன் இன்னும் அறிவிக்கவில்லை.
வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா
விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் 'விடுதலை' படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ படத்துக்குத் தயாராகிவருகிறார். இன்னொரு பக்கம் படங்கள் தயாரிப்பிலும் அவர் பிஸி. லாரன்ஸ் நடிக்கவுள்ள 'அதிகாரம்' என்கிற படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் அவர், தன்னுடைய உதவியாளர் ஆனந்த் என்பவர் இயக்கி வரும் படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா பெண் மையக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். ’ஆடுகளம்’ படத்தில் கதாநாயகி தாப்ஸிக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.
ரஞ்சித்துடன் இணையும் அசோக் செல்வன்!
வடசென்னையின் அறியப்படாத களங்களில் ஒன்றான குத்துச்சண்டையை மையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘சார்பட்டா பரம்பரை' ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதேநேரம், ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’, துருவ் விக்ரம் நடிக்கும் தலைப்பு சூட்டப்படாத படம் உட்பட பல படங்களையும் பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார். இதற்கிடையில் ‘நட்சத்திரம் நகர்கிறது' என்கிற தலைப்பில் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கிவிட்டார் ரஞ்சித். அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இதனை ஒரு முழு நீள காதல் படமாக இயக்கிவருவதாகக் கூறியிருக்கிறார்.