விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சிமலை’. நடப்பாண்டின் தேசிய விருது போட்டித் தேர்வுக்கு அனுப்பட்டிருக்கிறது. கூடவே கான் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களுக்குப் படத்தை அனுப்புவதிலும் மும்முரமாக இருந்த அறிமுக இயக்குநரை ‘தி இந்து’வுக்காகச் சந்தித்தோம்.
‘மேற்குத் தொடர்ச்சிமலை’ என்ன சொல்ல வருகிறது?
நிலம் சார்ந்த அரசியல் பேசும் படும் இது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் நடக்கும் வாழ்க்கைப் பதிவு. படத்தின் தயாரிப்பாளர் விஜய்சேதுபதி நன்கு அறிமுகமானவர். மற்ற எல்லோரும் புதுமுகங்கள். முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் ஆன்டனி. கதையின் நாயகி காயத்ரி கிருஷ்ணா பெங்களூரு பொண்ணு. நம் வாழ்க்கையைத்தான் படமாக்குகிறார்கள் என்று புரிந்துகொண்டு ஓடோடி வந்தனர் அந்தப் பகுதி மக்கள்.. அதிக ஈடுபாட்டோடு அவர்கள், அவர்களாகவே நடித்தனர். இரண்டு ஆண்டுகள் தேனியில் தங்கி மலைவாழ் மக்களைப் பற்றி கள ஆய்வு மேற்கொண்டதால் 48 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. இயற்கைதான் கதைக் களம். வெளிச்சம் தேவைப்படும் இடத்தில் தீப் பந்தம், தெரு விளக்கு ஒளியில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் உழைப்பு மிகப்பெரிய பலம். நிலவியல் சார்ந்த வாழ்க்கையை முப்பது முதல் நாற்பது அடி தூரத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பெரும்பான்மையான காட்சிகள் விரியும். எல்லாக் காட்சிகளிலும் விரவிக்கிடக்கும் மிகப் பெரிய கதாபாத்திரமே நிலம்தான்.
நில அரசியலைப் பற்றி இப்போது பேச என்ன காரணம்?
இதைப் பற்றி இப்போதுதானே பேச முடியும். உலகெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இப்படத்தைச் சமர்ப்பணம் செய்திருக்கிறோம். நிலம் சார்ந்த அரசியலைத் தவிர்த்துவிட்டு இங்கே எதையும் பார்க்க முடியாது. காரணம் நிலம் சார்ந்துதான் நாம் எல்லா வகையிலும் இயங்குகிறோம். நிலமற்றவர்கள், நிலத்தை இழந்தவர்கள் ஆகிய பூர்வகுடிகளின் அவல நிலையும் அவர்கள் எப்படி உற்பத்தி செய்யும் கருவிகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதையும் இந்தப் படம் அவர்களது அன்றாட வாழ்க்கை வழியே பேசும். படம் பார்க்கும் அனைவரும் இதைத்தானே நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று உள்ளம் கொதிக்கும்.
விஜய்சேதுபதி இந்தக் கதைக்குள் எப்படி வந்தார்?
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடித்தபோதே அவர் எனக்கு நண்பர். அதில் வேலை பார்த்த நான் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கதையை எழுதிக் கொடுத்ததோடு படம் இயக்கும் வேலையில் இறங்கினேன். நான் என்ன மாதிரி படம் எடுப்பேன் என்பதைப் புரிந்தவர். கதையைக் கேட்டுவிட்டு இதை “நானே தயாரிக்கிறேன்” என்றார். படம் முடிந்ததும் அவர் பார்க்க வேண்டும் என்றேன். “இது உங்க படம். எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றார். என்மீதும், கதையின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை இது.
படத்துக்கு இளையராஜாவின் இசை எப்படி அமைந்திருக்கிறது?
இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். இளையராஜாவைத் தவிர்த்து பின்னணி இசையை நினைக்கவே முடியாது. காட்சிகள் பெரும்பாலும் தேனி அருகில் உள்ள கோம்பை என்ற கிராமத்து பின்னணியில் உருவானதுதான். இளையராஜா அந்த மண் சார்ந்தவர். ராஜா சாரும், என் அப்பாவும் வகுப்புத் தோழர்கள். இப்படி மண், மனிதம் சார்ந்த உணர்வுகளால்தான் அவர் இந்தப்படத்துக்குள் வந்தார்.
வெளியீட்டுக்கு முன்பே திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப என்ன காரணம்?
இங்கே மக்களைக் குறை சொல்ல எதுவுமே இல்லை. இன்றைக்கு அவர்களைத் திரையரங்கு வர வைக்கும் சூழல் மாறிவிட்டது. இந்த மாதிரியான படங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே முடங்கிவிடக் கூடாது என்று எனக்கும் தெரியும். பொதுவாகத் திரைப்பட விழாக்களுக்கு வருபவர்களுக்குப் படத்தில் சொல்லியிருக்கும் அரசியலும், அதன் விளைவுகளும் தெரியும். விழா இடங்களுக்குச் செல்லும்போது இது போன்ற படங்களுக்கு மேன்மையான உரிய அடையாளம் கிடைக்கும். அது அப்படியே பரவிச் சென்றால் ரசிகர்களின் காதுகளையும் கவனத்தையும் எட்டும். திரையரங்குக்குத் தயங்காமல் வருவார்கள். யாருக்காக இந்த சினிமா எடுத்தோமோ அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான் இது போன்ற விழாக்களுக்கு எடுத்துக்கொண்டு போகிறோம்.
லெனின்பாரதி