‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...!’ என்கிற சூர்யாவின் சமீபத்திய ட்வீட் ட்ரென்டானது.. இதுவொருபுறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். அன்று, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அவருடைய 40-வது படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையில் காரைக்குடியில் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. காரைக்குடி படப்பிடிப்பில் கதாநாயகி ப்ரியங்கா மோகனும் பங்கேற்கிறார்.ப்ரியங்கா மோகன்
அமுங்கிப்போன கோரிக்கை!
புதிய ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. இணையவழிக் கூட்டங்கள், எதிர்ப்பு அறிக்கைகள், அலசல் கட்டுரைகள் என கமல், சூர்யா தொடங்கி பாரதிராஜா, அமீர் என கோலிவுட்டின் பல தரப்பினரும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள். இதற்கிடையில் ‘கேரள மாநில அரசு, தரமான சிறு, நடுத்தர முதலீட்டுப் படங்களுக்காக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கிவருகிறது. அதைப் போல், தமிழக அரசும் ஓடிடி தளம் தொடங்கி உதவிட வேண்டும்' என்று இயக்குநர் சேரன் விடுத்திருந்த கோரிக்கை ஒளிப்பதிவு திருத்தச் சட்ட எதிர்ப்பலையில் அமுங்கிப் போய்விட்டது.
விஜய்சேதுபதிக்கு பதிலாக...
‘இந்தியன் 2’ விவகாரம் நீதிமன்றத்தில் முடியாத நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ‘விக்ரம்’ படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் கமல். இதில் ஃபகத் ஃபாஸில், விஜய்சேதுபதி நடிக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நரேன் இணைந்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதி அதிக அளவில் தெலுங்குப் படங்களில் வில்லனாக நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் கமல் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்குப் பதிலாகவே நரேன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ராஜ் கமல் வட்டாரத்திலிருந்து தகவல். ஏற்கெனவே லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தில் அட்டகாசமான காவல் அதிகாரி வேடத்தில் நரேன் நடித்திருந்தார்.