இந்து டாக்கீஸ்

ஓடிடி உலகம்: பெண் எனும் ஜீவ நதி

எஸ்.எஸ்.லெனின்

எக்காலத்திலும் பேசித் தீராதவை ஆண்-பெண் இடையிலான உணர்வுச் சிக்கல்கள். இதில் பெண்ணியப் பார்வையில் காதல் தொடங்கி காமம் வரையிலான உணர்வோட்டங்களை அலசும் மூன்று குறும்படங்களுடன் வெளியாகியிருக்கிறது சிறுகதைகளைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘ஆணும் பெண்ணும்’ என்கிற மலையாள ஆந்தாலஜி திரைப்படம். மூன்று தலைமுறை இடைவெளிகளில் உலவும் மூன்று பெண்களை மையமாகக் கொண்ட குறும்படங்கள் இவை.

சாவித்திரி: தேசம் அப்போதுதான் விடுதலை பெற்றிருந்தது. வளர்ச்சித் திட்டங்கள் சென்று சேராத கேரள மண்ணில், கம்யூனிச சித்தாந்தம் வேர் பிடித்திருக்கிறது. பெருந்தன முதலாளிகளுக்கு ஆதரவாக, காவல்துறை சகாவுகளை வேட்டையாடுகிறது. இதிலிருந்து தப்பிக்க ஊரைவிட்டே ஓடுகிறாள் பெண் சகாவு சாவித்திரி. தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு, செல்வந்தர் குடும்பமொன்றில் பணிப் பெண்ணாக அடைக்கலமாகிறாள்.

அந்த வீட்டின் இரு மகன்களில் மூத்தவன் காமமும் இளையவன் காதலுமாக அவள் மீது கண் கொள்கிறார்கள். கதகளியில் கீசக வதம் விவரிக்கப்படும் இரவொன்றில் அதே வதத்தை நிகழ்த்தி தன் பொதுவாழ்வின் அடுத்தப் பாய்ச்சலை மேற்கொள்கிறாள் சாவித்திரி. சாவித்திரியாகத் தோன்றும் சம்யுக்தா மேனன் குறைசொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆணாதிக்க திமிரும் காமமும் தெறிக்கும் உடல்மொழியுடன் ஜோஜூ ஜார்ஜ் அவரை மிஞ்சுகிறார். மின்சாரம் தீண்டாத ஊரின் கலையமைப்பைக் கொண்டுவந்ததில் குறும்படம் ஈர்க்கிறது. ஆனால் சொல்ல வந்த கதையை அழுத்தமின்றி கடத்தியிருப்பதால், ஆந்தாலஜியில் ஏமாற்றமளிக்கும் குறும்படமாகிறது சாவித்திரி.

ராச்சியம்மா: அறுபதுகளில் நகரும் கதை ராச்சியம்மா. தேயிலைத் தோட்டம் ஒன்றில் அலுவலராக பணிபுரிய அந்த மலைக் கிராமத்துக்குள் பிரவேசிக்கும் குட்டிகிருஷ்ணனுக்கும் அக்கிராமத்து வீடுகளுக்கு எருமைப் பால் விநியோகம் செய்யும் ராச்சியம்மா என்கிற பெண்ணுக்கும் இடையே முகிழும் நெகிழ்வான உறவை குறும்படம் பேசுகிறது. ஏற்கும் கதாபாத்திரம் எதுவென்றாலும் அதில் கரைந்துபோகும் பார்வதி திருவோத்து, ராச்சியம்மாவிலும் அதை ரகளையாய் நிகழ்த்தி இருக்கிறார். மும்மொழி கலப்பிலான உச்சரிப்பு, பால் மனதுடன் அன்பையே அதிகம் பரிமாறுவது, காதல் தேர்வில் முடிவெடுக்க மறுகுவது என ராச்சியம்மாவை ரசிக்க வைக்கிறார் பார்வதி. உரூப் எழுதிய சிறுகதையின் பாதிப்பு முழுமையாக எட்டாத சொதப்பலுடன் குறும்படம் சற்றே சறுக்கவும் செய்திருக்கிறது.

ராணி: தற்காலத்தின் நவயுக காதல் ஜோடி ஒன்றின் காமமும் காதலும் எதிரெதிர் திசைகளில் கிளைக்கும் உணர்வுச் சிக்கல்களை அலசுகிறது ராணி. விரகத்தின் தகிப்பில் காதலன் தவிக்கிறான். அவன் மீதான காதலின் பெயரால் அத்தனையையும் அவளும் ரசிக்கவே செய்கிறாள். பெரும் தயக்கத்துக்குப் பின்னர் காதலனின் சரசக் கோரிக்கைக்கு இணங்கி அவன் அழைக்கும் வனாந்தரத்துக்கு பயணப்படுகிறாள். அங்கேயும் அவளது ஊசலாட்டம் தொடரவே செய்கிறது.

எதிர்பாராத திருப்பமொன்றில் சுயத்தை அம்பலப்படுத்தும் ஆணும், அதற்கு எதிர்மாறாகத் திடத்துடன் கிளம்பும் பெண்ணும் வெளிப்படுகிறார்கள். ரோஷன் மேத்யூ - தர்ஷனா ராஜேந்திரன் ஜோடியில் வழக்கம்போல் தர்ஷனா தனித்துவம் காட்டுகிறார். வயோதிக ஜோடியாக வரும் நெடுமுடி வேணு - கவியூர் பொன்னம்மா ஜோடியின் உரையாடலில் விரியும் விகசிப்புகள் இந்த ஆந்தாலஜியின் ஆகச்சிறந்த படைப்பாக ராணியை முன்னிறுத்துகின்றன.

பெண் எனும் பெரு நதி ஆணை அரவணைத்தும் அவசியமெனில் புறக்கணித்தும் வெளிக்காட்டும் அன்பு, ஆவேசம் ஆகிய உணர்ச்சிகளை, மலையாளத்தின் தனித்துவமான திரை மொழியில் பதிவு செய்திருக்கிறது இந்த ஆந்தாலஜி. சந்தோஷ், உரூப், உன்னி.ஆர் ஆகியோர் எழுதிய கதைகளை முறையே ஜெய், வேணு, ஆஷிக் அபு ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ‘ஆணும் பெண்ணும்’ மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தை Koode, NeaStream ஆகிய மலையாள ஓடிடி தளங்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிலும் காணலாம்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT