இந்து டாக்கீஸ்

தற்செயலாக அமைந்த கதாபாத்திரம்! - நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்டி

ஆர்.சி.ஜெயந்தன்

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகிப் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘பொறியாளன்’ படத்தில் கவனிக்க வைத்தார் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘வில் அம்பு’ படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை ருசித்திருக்கிறார். மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கத் திரையரங்கங்களுக்கு ரவுண்ட் அடித்துக்கொண்டிருந்தவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

சினிமா குடும்பப் பின்னணி இருந்தும் முதல் வெற்றிக்கு ஏன் இத்தனை தாமதம்?

பதினேழு வயதில் நடிக்க வந்தேன். அப்போது சினிமா பற்றி சுயமாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. இப்போது அப்படியில்லை. தோல்விகள் கற்றுக்கொள்ள வைத்துவிட்டன. எங்கள் வீடு ஒரு சினிமா படப்பிடிப்புத் தளம். இயக்குநர் சிகரம் பாலசந்தர் முதற்கொண்டு பெரிய இயக்குநர்கள் பலரும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பத்து வயதில் படப்பிடிப்பின் இடையே விளையாடுவேன்.

அப்போது நடிகர்களையோ இயக்குநர்களையோ கவனித்திருந்ததால்கூட முன்பே தெளிவு வந்திருக்கலாம். விலைமதிப்புள்ள ஒரு பொருள் கைவசம் இருந்தாலும் அதன் மதிப்பு நமக்குத் தெரியாமல் போய்விடுவதுதானே இயற்கை. இப்போதுதான் அதன் மதிப்பை உணர்ந்திருக்கிறேன்.

‘வில் அம்பு’ படத்துக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?

மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். சென்னையில் பெரிய ஹீரோக்களின் படங்களுக்குத்தான் திங்கள்கிழமையும் தியேட்டரில் கூட்டம் இருக்கும். ‘வில் அம்பு’ படத்துக்கும் அது கிடைத்திருக்கிறது. ‘வில்அம்பு’ இன்னொரு வகையிலும் எனக்கு ஸ்பெஷல். படத்தின் திரைக்கதையில் அதிகமாகத் தற்செயலாக நிகழும் சம்பவங்கள் இருக்கின்றன என்றார்கள்.

அந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் அருள் என்ற கதாபாத்திரமும்கூடத் தற்செயலாக என் நிஜ வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்துவிட்டது. சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று அப்பா என்னை பி.இ. படிப்பில் சேர்த்தார். ஆனால், எனக்குப் பிடித்தது சினிமா என்பதால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு நடிப்புப் பயிற்சி எடுக்கப் போய்விட்டேன். படத்திலும் இதுதான் எனது கதாபாத்திரம். அதைவிட எதிர்பாராமல் அமைந்த ஆச்சரியம், படத்தில் எனது அப்பாவாக எனது தந்தை கல்யாணசுந்தரமே நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் தனது விருப்பத்தை அப்பா என் மீது திணிப்பார். ஆனால், நிஜ வாழ்க்கையில் ‘நீ விரும்பியதைச் செய்’ என்று சொல்லிவிட்டார்.

அமலா பாலிடம் கேட்டால் ‘சிந்து சமவெளி’ படத்தை மறக்க விரும்புவதாகச் சொல்வார். நீங்களும் அப்படித்தானா?

அமலா பால் திறமையான நடிகை. அப்படியொரு சர்ச்சைக்குரிய கதையில் துணிச்சலாக நடித்ததற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். ‘சிந்து சமவெளி’ படத்துக்கு உருவான எதிர்ப்பு, நமது கலாச்சாரம் இன்னும் அப்படியே பத்திரமாக இருக்கிறது என்பதைத்தான் காட்டியது. எனினும், எனது அறிமுகப் படத்தை நான் மறுக்க விரும்பவில்லை.

திரைக்கதைப் பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து உங்களைப் பார்க்க முடிகிறதே? கதை விவகாரங்களில் தலையிடுவீர்களோ?

எனது சொந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் திரைக்கதையைச் சரியாகத் தெரிந்துகொள்ள முயல்கிறேன். ஆனால், இயக்குநரின் திரைக்கதையிலோ அவரது முடிவிலோ நான் தலையிட விரும்புவதில்லை. ‘வில் அம்பு’ படத்தில் சிவா கதாபாத்திரம் என்னை அடித்துத் துவைத்து எடுக்கும். அந்த இடத்தில் நான் ஹீரோயிசம் காட்டியிருந்தால் என் கேரக்டர் விழுந்திருக்கும். அதுதான் இயக்குநரின் பலம். இந்த வெற்றி தனி ஹீரோவாக நடிக்கும் தைரியத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது. அதே நேரம் பொருத்தமில்லாத கேரக்டர்கள் செய்துவிடக் கூடாது என்ற பொறுப்பையும் எனக்கு உணர்த்துகிறது. இனி வரும் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பேன். ஆக்‌ஷன் அவதாரமெல்லாம் இப்போதைக்கு இல்லை.

ஆடியோ நிறுவன அதிபரின் மகன் என்ற முறையில் தற்போதைய ஆடியோ மார்க்கெட் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

இப்போது சி.டி. வாங்கிக் கேட்கும் பழக்கம் சுத்தமாக அழிந்துவிட்டது. அதற்கு மாறாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆடியோ மூலம் வரும் வருமானம் பெருகியிருக்கிறது. எங்களது ஃபைவ் ஸ்டார் ஆடியோ நிறுவனம் மூலம் இசை உரிமை வாங்குவதை நிறுத்துவிட்டோம். சோனி போல ஒருசில பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஆடியோ மார்க்கெட்டில் இருக்கிறார்கள். சின்ன ஆடியோ நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சினிமாவுக்கு வெளியே வேறு எதில் ஆர்வம்?

சிறு வயது முதல் கீபோர்ட் கற்றுக்கொண்டிருக்கிறேன். இசை மீது தணியாத தாகம் உண்டு. நிறைய சிங்கிள்களுக்கு இசையமைத்து வைத்திருக்கிறேன். பாடல்களைப் பாட வேண்டும் என்பதிலும் ஆர்வம் இருக்கிறது. சரியான வாய்ப்பு அமையும்போது என் இசைக்குக் கவுரவம் செய்ய விரும்புகிறேன்.

SCROLL FOR NEXT