இந்து டாக்கீஸ்

குடிக்க மறுத்துவிட்டேன்! - நடிகர் ஜீவா பேட்டி

கா.இசக்கி முத்து

பரபரப்பாக இருக்கிறார் ஜீவா. ‘போக்கிரி ராஜா' படத்தை முடித்துவிட்டு, அட்லீ தயாரிக்கும் படத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...

‘போக்கிரி ராஜா' படத்தின் கதைக்களம் என்ன?

நடுத்தரக் குடும்பத்தில் ஐ.டி. துறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவனாக நடித்திருக்கிறேன். படத்தில் ஒரு பேண்டஸி விஷயம் இருக்கிறது. அதை வெளியே சொல்லாமல் வைத்திருக்கிறோம். அது தெரிந்தால் மொத்தக் கதையும் தெரிந்த மாதிரிதான். இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கதை சொல்ல ஆரம்பித்த முதல் காட்சியிலேயே சிரிக்க ஆரம்பித்து விட்டேன். முழுக்கதையும் கேட்டு முடித்தவுடன் ஃப்ரஷ்ஷாக இருந்தது.

ரஜினி படத்தின் தலைப்பில் நடிப்பது தற்போது ஃபேஷனாகி விட்டது. நீங்களும் அதில் இணைந்துவிட்டீர்களே?

தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் எடுத்த முடிவு அது. ‘போக்கிரி ராஜா' என்ற தலைப்பு, கதைக்கும் சரி, கமர்ஷியலாகவும் சரியாக இருக்கும் என்பதால் வைத்தோம். தலைப்பைக் கொடுத்ததற்கு ஏவி.எம். நிறுவனத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

‘யான்' படம் சரியாக போகாததால்தான் இவ்வளவு காலம் அமைதியாகி விட்டீர்களா?

‘யான்' படம் சரியாக போகாதது என்னை மிகவும் பாதித்தது. ஏனென்றால் நான் ‘சிவா மனசுல சக்தி' மாதிரியான படங்கள் மட்டுமே பண்ணுவேன் என்பதுபோலப் பேச்சு இருந்தது. ‘யான்' என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். 3 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டோம். ஆனால் முடிக்க 2 வருடங்களாகி அப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு கூடிவிட்டது.

அப்படம் சரியாகப் போகாதது அடுத்து என்ன பண்ணுவது என்று என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டது. எல்லாருமே வித்தியாசமான களத்தில் பயணிக்க ஆரம்பித்தபோது, நாமும் புது இயக்குநர்களிடம் கதை கேட்க ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. ஒரு வருடம் நிறைய கதைகள் கேட்டேன். அப்போதுதான் ‘திருநாள்', ‘போக்கிரி ராஜா' கதைகளைத் தேர்வு செய்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழித்து எனது புதிய வீட்டைத் தயார் செய்தேன்.

‘யான்' படத்துக்குப் பிறகு ட்விட்டர் பக்கம் வருவதையும் குறைத்துவிட்டீர்களே. கலாய்ப்புதான் காரணமா?

என்னுடைய பெர்சனல் விஷயங் களை நான் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதில்லை. நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை ஏன் உலகிற்கு அறிவிக்க வேண்டும்? ட்விட்டர் மட்டுமே எனது வாழ்க்கை அல்ல. எனது படங்களை விளம்பரப்படுத்த மட்டுமே சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துகிறேன். படங்களே பண்ணாதபோது எதை விளம்பரப்படுத்துவது? சமூக வலைதளத்தில் என் படங்களைப் பாராட்டியும் இருக்கிறார்கள், கலாய்த்தும் இருக்கிறார்கள். அதெல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்.

இயக்குநர் ராஜேஷுடன் மீண்டும் இணையப் போவதாகச் செய்திகள் வெளியானதே?

‘சிவா மனசுல சக்தி' படம் வெளிவந்து 8 வருடங்கள் ஆகின்றன. இப்போது நானும் படங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறேன், அவரும் பண்ணிக்கொண்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து படம் பண்ண சரியான நேரம் அமைய வேண்டும். ஆனால், ‘சிவா மனசுல சக்தி' மாதிரி இன்னொரு படம் பண்ண வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

‘கற்றது தமிழ்' படத்துக்குப் பிறகு ஏன் மிகவும் சீரியஸான கதைகளைத் தேர்வு செய்வதில்லை?

‘கற்றது தமிழ்' பார்த்துவிட்டு கே.வி. ஆனந்த் சார் ‘அயன்' பண்ணலாம் என்று கேட்டார். அச்சமயத்தில் பொருட்செலவு உள்ளிட்ட விஷயங்கள் சரிவர அமையவில்லை. பிறகு ‘கோ’ படத்தில் இணைந்தோம். ‘கற்றது தமிழ்' பாத்திரம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. சிலரை அழவைப்பதைவிட நிறைய பேரை சிரிக்க வைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ‘கற்றது தமிழ்' பார்த்துவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்தார்கள். இந்த மாதிரியான படம் பண்ண வேண்டுமா என்று ஒரு எண்ணம் வந்தது. நீங்கள் திரையரங்கில் ஒரு காட்சியைப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசும்போது அமைதியாகத்தான் பார்ப்பார்கள். அதே நேரத்தில் காமெடி காட்சி என்றால் வாய்விட்டுச் சிரித்துவிடுவார்கள். அப்படியானால் படம் ஹிட். நாம் மக்களைச் சிரிக்க வைக்கிறோம் என்பது நல்ல விஷயம்தானே.

உங்களது பிரபலமான வசனமே “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” என்பதுதான். திரைப்படங்களில் மது குடிப்பதுபோன்ற காட்சிகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் எச்சரிக்கை செய்தி போடுகிறோம். அனைத்தும் கற்பனையே என சொல்லிவிடுகிறோம். மது குடிக்க வேண்டும் என விளம்பரப்படுத்தவில்லை. ஒரு கதாபாத்திரம், அப்படி இருக்கிறது எனக் காண்பிக்கிறோம். அவ்வளவுதான். திருடன் கதாபத்திரத்தில் நடிக்கும்போது நான் நிஜ வாழ்க்கையில் திருடுவதில்லை. அதுபோலத்தான் குடிப்பழக்கம் உள்ள கதாபாத்திரங்களும். ‘சிவா மனசுல சக்தி’ படத்துக்குப் பிறகு அந்த மாதிரியான பாத்திரத்தில் நான் நடிக்கவில்லை.

வின்ஸ்டன் சர்ச்சில் பாத்திரத்தில் நடித்தால் சுருட்டு பிடித்தாக வேண்டும் இல்லையா? நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் நான் குடிப்பழக்கத்தை ஆதரிப்பவன் அல்ல. படப்பிடிப்பு நடக்கும்போது வேடிக்கை பார்க்க வருபவர்களில் யாராவது குடித்துவிட்டு வந்தால்கூட எனக்குப் பிடிக்காது. ‘கற்றது தமிழ்’ படத்தில் நடிக்கும்போது நடிப்பு அசலாகத் தெரிய வேண்டும் என்று குடிக்கச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.

தற்போது எத்தனைப் படங்களில் நடித்து வருகிறீர்கள்?

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘திருநாள்' ஏப்ரலில் வெளியாகிவிடும். அடுத்ததாக ‘கவலை வேண்டாம்'. அதனைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு ஒரு படம், ‘ஜெமினி கணேசன்’ என்றொரு படம் பண்றேன். இந்த வருடம் முழுவதும் படப்பிடிப்புதான். நான் படங்கள் பண்ண வேண்டுமே என்று அவசர அவசரமாகப் பண்ணுவதில்லை. பிறகு எதற்கு நான் கவலைப்பட வேண்டும்? நான் எந்த ஒரு போட்டியிலும் இல்லை.

சி.சி.எல் போட்டி பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்றனவே?

படப்பிடிப்பு இருந்ததால் என்னால் போக முடியவில்லை. சென்னை வெள்ளத்தால் தண்ணீரில் ஊறிய நிறைய மைதானங்கள் காய்வதற்கு நேரமாகிவிட்டது. அதனால் இந்த வருடம் சி.சி.எல்.லில் சரியாக விளையாட முடியாமல் போய்விட்டது. அடுத்த வருடம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். ஆர்யாவிடம் பேசியிருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சியை தொடங்க இருக்கிறோம்.

SCROLL FOR NEXT