முதல்வர் செல்லும் பாதை உட்பட, சாலைகளில் பெண் காவலர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இதற்குப் பெண் காவலர்கள் நெகிழ்ந்து நன்றி கூறியிருக்கிறார்கள். கடந்த 2019 நவம்பரில் வெளியான ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்காக நன்றி கூறியிருக்கிறார்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் காவலர் ஒருவரின் வலியை மிக நேர்மையாகச் சித்தரித்த அந்தப் படம், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. ஆட்சியாளர்கள் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுக்க,, சமூக நோக்கத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்களும் தூண்டுகோலாக இருக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு ‘மிக மிக அவசரம்’. அது பற்றியும், அவரது தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படம் குறித்தும், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான ‘தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க’த்தின் இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவரும் சுரேஷ் காமாட்சியிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
பெண் காவலர்களின் பிரச்சினையைப் படமாக எடுக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்?
போலீஸ் திரைப்படங்கள் என்றாலே காக்கி அணிந்த நாயகனின் மிடுக்கையும் சாகசத்தையும் சொல்வதாகவே இருந்து வந்திருக்கின்றன. சாலையில், பொது இடங்களில் பெண் போலீஸார் பணியில் இருக்கும்போது அவர்களைப் பார்த்தபடி கடந்துபோயிருப்போம். ஆனால், பணி நடைமுறைகளையொட்டி அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி நாம் எண்ணிப் பார்த்ததில்லை. அதை இந்தப் படத்தில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். 28 நாட்களில் எடுத்த படம். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு ஊடகம் என்பதை மறுக்கவில்லை.
ஆனால், அதைத் தாண்டி அது சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பதும் மிக முக்கியம். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்படாததால் எவ்வளவு பிஞ்சு உயிர்களை இழந்தோம்.. அதைத் தீர்க்க நம்மிடம் இருக்கும் செயல்திட்டமும் தொழில்நுட்பமும் என்ன என்கிற கேள்வியை எழுப்பியது ‘அறம்’. மிகச் சிறந்த விழிப்புணர்வுப் படம். அது எழுப்பிய கேள்வி இன்னும் சமூகத்தின் முன்னால் அப்படியே இருக்கிறது. ஆனால், ‘மிக மிக அவசரம்’ எழுப்பிய கேள்விக்குத் தீர்வு கிடைத்துவிட்டது. அதற்குக் காரணமான தமிழக முதல்வர், தமிழகக் காவல்துறை, பட உருவாக்கத்தில் பங்களித்தவர்கள் என அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
‘மிக மிக அவசரம்’ வெளியாகி 2 வருடங்கள் ஓடிவிட்டன. தொலைக்காட்சி அல்லது ஓடிடி வழியாக இன்னும் அதிக பார்வையாளர்களிடம் அதைக் கொண்டுசேர்க்காதது ஏன்?
இந்தப் படத்தை என்னிடமிருந்து அவுட் ரேட்டுக்கு வாங்கி வெளியிட்டவர் லிப்ரா புரொடெக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர். தொலைக்காட்சி, ஒடிடி ஆகியவற்றில் சிறிய படங்களைத் தனியாக வாங்குவதில்லை. பெரிய படங்களுடன் சேர்த்து ‘பேக்கேஜ்’ ஆகத்தான் வாங்குகிறார்கள். அதற்காகத்தான் அவர் காத்திருக்கிறார். விரைவில் அது தொலைக்காட்சியிலும் ஓடிடியிலும் மக்கள் பார்வைக்கு வந்துவிடும்.
உங்களுடைய தயாரிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. சிம்பு கதாநாயகன், வெங்கட்பிரபு இயக்கம், யுவன் சங்கர் ராஜா இசை என்கிற இந்த அணி எப்படி உருவானது?
எனது அனுபவத்தில் ஒரு நல்ல திரைக்கதை, தனக்கான படைப்பாளியை, நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை தானே தேர்வு செய்துகொள்ளும். ‘மாநாடு’ படத்துக்கும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. முதலில் இயக்குநர் வெங்கட்பிரபுவைத்தான் தேர்வுசெய்தேன். அதன் பிறகு படம் தொடங்கக் கொஞ்சம் தாமதமானாலும் இத்தனை பிரம்மாண்டமான அணி அமைந்துவிட்டது படத்துக்குப் பெரும் வலிமையைக் கொடுத்துவிட்டது. சிம்பு, வெங்கட் பிரபுக்கு மட்டுமல்ல; ஒரு தயாரிப்பாளராக எனக்கும் பெரிய திருப்புமுனையை ‘மாநாடு’ தரும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஜூன் 21-ஆம் தேதி படத்திலிருந்து முதல் பாடலை வெளியிடவிருக்கிறோம்.
பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் அலுவலகத்தி லிருந்து பணியைக் கவனிப்பார்கள். ஆனால், நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவில் ஒருவராக வளைய வருவது ஏன்?
அடிப்படையில் நான் ஓர் உதவி இயக்குநர். பிறகு தயாரிப்பு நிர்வாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர். ஒரு தயாரிப்பாளராக, போட்ட முதலீட்டை நஷ்டமில்லாமல் எப்படித் திரும்ப எடுப்பது என்பதைப் பற்றித்தான் யோசிப்பேன். அலுவலக அறையில் உட்கார்ந்துகொண்டு நிர்வாகத்தைக் கவனித்திருந்தால் இத்தனை வேகமாக ‘மாநாடு’ படத்தை முடித்திருக்க முடியாது. ஒரு தயாரிப்பாளர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தால்தான் என்ன நடக்கிறது என்று தெரியும்.
பாரதிராஜா தலைமையிலான ‘தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ உருவான பிறகு, தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வர்களின் பிரச்சினைகளை இந்தப் புதிய சங்கம் தீர்த்துள்ளதா?
தயாரிப்பாளர், சினிமா தொழிலாளர், விநியோகஸ்தர், திரையரங்கை நடத்துபவர், டிஜிட்டல் சினிமா சேவை வழங்கும் நிறுவனம், தணிக்கைக் குழு, அரசாங்கம் ஆகிய தரப்புகள் இணைந்தே திரையுலகம் இயங்குகிறது. இதில் ஒரு படம் உருவாகி பார்வையாளர்களைச் சென்று அடைவது வரை, எல்லாக் கட்டங்களையும் தாண்டி, ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய முதலீட்டை இழக்காமல் இருந்தால்தான் அவர் தொடர்ந்து படம் தயாரிக்க முடியும். இந்த இடத்தில்தான் சினிமா வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது சங்கத்தின் மிக முக்கியக் கடமையாகிறது. தயாரிப்பாளர்களுக்குப் பல தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம்.
அதையெல்லாம் தீர்ப்பதற்காக சதா பஞ்சாயத்துப் பேசிக்கொண்டும் நிதி வழங்குவதற்காகவும் செயல்படுவதல்ல சங்கம். அது வியாபாரத்தை ஒழுங்குபடுத்திச் சீராக்கும் பணியை மட்டுமே கவனிக்க வேண்டும். தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ‘ஆக்டிவ்’ தயாரிப்பாளர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டதுதான் ‘தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்’. தற்போது தணிக்கைத் துறையால் இச்சங்கம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இனி மற்ற சங்கங்களுக்கு இருப்பதைப்போல், எடுத்துமுடித்த படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்பெற ஒப்புதல் கடிதம் கொடுக்கும் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அதேபோல், திரைப்படத் தலைப்பு அனுமதி, விளம்பரம் செய்துகொள்ள அனுமதி ஆகியவற்றை வழங்கவும் சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் கொடுத்துவிட்டது.
முதல் அலை கரோனாவுக்கு முன்னர் ‘க்யூப்’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, விலையில் 50% தள்ளுபடி கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. சினிமா தொழிலாளர் அமைப்புகளுடன் சுமூகமான உறவைப் பேணிட பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியுடன் நல்ல புரிதலில் இருக்கிறோம். அதேபோல், திரையரங்குகளை நடத்துபவர்களின் ஒத்துழைப்பைப் பெற திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் நல்லுறவைக் கடைபிடிக்கிறோம்.
தற்போது, தயாரிப்பாளர்களுக்கு மேலும் ஒரு பெரிய அடி. மார்ச் 2020 வரை தயாரிப்பாளர்களின் ஆதாய உரிமையில் (Royalty) வருமானவரி (TDS) பிடித்தம் 2% ஆக இருந்த சூழலில், கரோனா பெருந்தொற்றினால் அது 1.5% ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் 2021-22 நிதியாண்டில் அது 10% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் நிதி அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.