இந்து டாக்கீஸ்

மும்பை மசாலா: ‘ரேகா என் ஸ்டைல் ஐகான்’

கனி

நடிகை சோனாக்ஷி சின்ஹா, பாலிவுட்டின் ‘எவர்கிரீன் பியூட்டி’ ரேகாதான் தன்னுடைய ஸ்டைல் ஐகான் என்று சொல்லியிருக்கிறார். “எனக்கு எப்போதுமே ரேகாதான் ஸ்டைல் ஐகான். அவர், பல ஆண்டுகளாக எந்தவித பெரிய மெனக்கெடலும் இல்லாமல் தன் ஸ்டைலைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஸ்டைலை வைத்து அவரை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும்” என்று ரேகா புகழ் பாடியிருக்கிறார் சோனாக்ஷி.

“ஸ்டைலுக்கும், ஃபேஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஸ்டைலை உங்களுடைய ஆளுமையின் வெளிப்பாடாகப் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக ஒரு தனி ஸ்டைல் இருக்கும்” என்று ஸ்டைல் சீக்ரெட் சொல்கிறார் சோனாக்ஷி.

2015-ல் சோனாக்ஷி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார். அவர் நடிப்பில் ‘அகிரா’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிறது.

கடும் உழைப்பாளி

ஒரு நாளில் பதினாறு மணி நேரம் உழைப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அமெரிக்காவின் தொலைக்காட்சி தொடர் ‘குவான்டிகோ’வில் நடிக்க ஆரம்பித்த பிறகு, பிரியங்கா இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமடைந்தார்.

“வெற்றி என்பது ஓர் இலக்கு அல்ல. அது ஒரு பயணம். உங்கள் வெற்றி தொடர்ச்சியானதாக இருந்தால்தான் , நீங்கள் வெற்றிகரமானவராக இருக்க முடியும்” என்று தன் வெற்றி ஃபார்முலாவைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பிரியங்கா.

பணம் முக்கியமா என்ற கேள்விக்கு, பிரியங்கா இப்படிப் பதிலளித்திருக்கிறார். “நான் கடினமாக உழைக்கிறேன். அதற்கான பணத்தைச் சம்பாதிக்கிறேன். நான் இரவில் தூங்குவது கிடையாது. ஒரு நாளில் பதினாறு மணி நேரம் உழைக்கிறேன். வீக்எண்ட், பிறந்தநாள் பார்ட்டிகள், விழாக்கள் என எந்தக் கொண்டாட்டங்களும் எனக்கு இல்லை.”

கலக்கல் தயாரிப்பாளர்

‘என்எச்10’ படத்தைத் தயாரித்து, நடித்திருந்தார் அனுஷ்கா ஷர்மா. இப்போது மறுபடியும் தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இம்முறை, தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அந்த மூன்று படங்களில் ஒரு படத்தில் அவர் நடிக்கவும் செய்கிறார்.

‘டெல்லி பெல்லி’ திரைக்கதை ஆசிரியர் அக்ஷத் வர்மா, அன்ஷய் லால், ‘என்எச்10’ இயக்குநர் நவ்தீப் சிங் உள்ளிட்டோரின் படங்களை அவர் தயாரிக்கிறார்.

“நான் நம்பும் படங்களைத் தயாரிப்பது எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது. ஆனால், நான் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ படத் தயாரிப்பில் இறங்கவில்லை” என்று சொல்கிறார் அனுஷ்கா.

SCROLL FOR NEXT