இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: நிருபர் நிக்கி

செய்திப்பிரிவு

‘டார்லிங்’ பட நாயகி நிக்கி கல்ராணி தற்போது பாபி சிம்ஹாவுடன் ‘கோ-2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, ராகவா லாரன்ஸுடன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில்‘கோ-2’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய இரண்டு படங்களிலும் பத்திரிகை நிருபராக நடிக்கிறாராம் நிக்கி. ஆனால் இந்த இரண்டு நிருபர் கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்துள்ளதாம். ராகவா லாரன்ஸுடன் நடிக்கும் படத்தில் சுறுசுறுப்பான நிருபராகச் சுழன்று பணியாற்றும் நிக்கி, எப்படி கெட்டவரான ராகவா லாரன்ஸின் காதல் பொறியில் சிக்குகிறார் என்பது போன்ற வேடமாம்!

புத்தாண்டில் ஐந்து!

வரும் 2016 புத்தாண்டு தினம் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டதால் ரசிகர்களுக்கு அன்று உற்சாக தினம்தான். செல்வராகவன் கதை, திரைக்கதை எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கியிருக்கும் ‘மாலை நேரத்து மயக்கம்’ ஜனவரி 1-ம் தேதி வெளியாவது உறுதியாகிவிட்டது. தற்போது இந்தப் படத்துடன் மேலும் 4 புதிய படங்கள் வெளியாகின்றன. ‘கரையோரம்’, ‘பேய்கள் ஜாக்கிரதை’, ‘தற்காப்பு’, ‘இதுதாண்டா போலீஸ்’ ஆகியவையே எஞ்சிய நான்கு படங்கள்.

நான்கு மொழி நாயகன்

பிரஷாந்த், அமண்டா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சாகசம்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இருபத்தாறு' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரஷாந்த். இப்படம் இந்தியில் அக்‌ஷய்குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்பெஷல் 26' திரைப்படத்தின் மறுஆக்கம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் மறுஆக்கம் செய்யப்பட இருக்கிறது.

சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமைய்யா, அபி சரவணன், ரோபோ சங்கர், ஜெய் ஆனந்த், பெசன்ட் நகர் ரவி, தேவதர்ஷினி என பலர் பிரஷாந்த்துடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். நாயகியாக நடிக்க முன்னணி நாயகியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கௌரவ வேடத்தில் தேவயானி மற்றும் சிம்ரன் நடிக்க இருக்கிறார்களாம். திரைக்கதை, வசனம் எழுதி மிகுந்த பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார் பிரஷாந்தின் அப்பா தியாகராஜன்.

மீண்டும் கூட்டணி

தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து பரதன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜயை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மோகன் ராஜா. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்குகிறார். விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் மோகன் ராஜா. கதை நன்றாக இருக்கிறது, முழுமையாகத் தயார் செய்துவிட்டுச் சொல்லுங்கள் எனத் தெரிவித்திருக்கிறாராம் மம்முட்டி. ‘வேலாயுதம்' படத்தில் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகிவிட்டது.

நட்புக்காக நடனம்

விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரௌடிதான்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. ஆனால், இம்முறை விஜய்சேதுபதிக்கு நாயகியாக அல்ல, நட்புக்காக ஒரேயொரு பாடலுக்கு நடனமாடித் தர ஒப்புக்கொண்டிருக்கிறாராம் நயன்தாரா. ஏற்கெனவே தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் படங்களின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்த விஜய்சேபதி, தற்போது நடித்து வரும் ‘தர்மதுரை’ படத்தின் மூலம் அவருடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில்தான் நடனமாட இருப்பதாகச் சொல்கிறார்கள். தனுஷுக்காக ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஏற்கெனவே ஆடியது நினைவிருக்கலாம்.

SCROLL FOR NEXT