இந்து டாக்கீஸ்

கூட்டாஞ்சோறு: பிஸி ஸ்ருதி ஹாசன்!

செய்திப்பிரிவு

சினிமா, ஓடிடி இரண்டிலுமே பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துக்காக ஒரு நிகழ்ச்சியைத் தெலுங்கு மொழியில் தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறுகிறார். இன்னொரு பக்கம், ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்கிற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ‘இந்தப் படத்தில் முதல் முறையாக நானே தெலுங்கில் குரல் கொடுத்திருக்கிறேன்’ என்கிறார். விஜய்சேதுபதியுடன் நடித்து முடித்துள்ள 'லாபம்' படத்துக்கு இன்னும் டப்பிங் பேசவில்லை, விரைவில் பேசிவிடுவேன்’ என்கிறார்.

அமேசானில் அடங்கிய எம்.ஜி.எம்.

உலக இணையவழிச் சந்தையை ஆட்சி செய்துவரும் அமேசான் நிறுவனம், ஓடிடி துறையிலும் கோலோச்சி வருகிறது. இந்நிலையில் 4 ஆயிரம் ஹாலிவுட் திரைப்படங்கள், 17 ஆயிரம் மணிநேர தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளை தன்வசம் வைத்திருக்கும் எம்.ஜி.எம். நிறுவனத்தை 8.45 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைபேசி முடித்து அதிகாரபூர்வமாக அமேசன் வாங்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். இனி ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் ‘12 ஆங்கிரி மென்’ போன்ற அட்டகாசமான ஆக்‌ஷன் காவியங்களையும் அமேசானில் ரசிகர்கள் காணலாம். இந்த டீல் , நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஆகிய நிறுவனங்களுக்கு பலவீனம் என்று கூவுகிறார்கள் ஓடிடி மீடியேட்டர்கள்.

பிறந்தநாள் பரிசு!

மோகன்லால் 'பரோஸ்' என்கிற படத்தை 3டி மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இயக்கி, நடிக்கத் தொடங்கிய நேரத்தில் கரோனா இரண்டாம் அலைத் தீவிரமடைந்தது. தற்போது அந்தப் படத்துக்கான திரைக்கதையில் புதிய மாற்றங்களை தன்னுடைய கதாசிரியருடன் இணைந்து செய்து வருகிறாராம் மோகன்லால். சமீபத்தில் தன்னுடைய 61-வது பிறந்தநாளை அமைதியாக, ஆனால் அர்த்தபூர்வமாகக் கொண்டாடியிருக்கிறார் லாலேட்டன். கேரளாவில் உள்ள பதின்மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான ஐ.சி.யூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT