இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: தில்வாலே

இந்து டாக்கீஸ் குழு

ஷாரூக் கான் - காஜோல், ரோஹித் ஷெட்டி போன்றவர்கள் இணைந் திருப்பதால் அதிகமான எதிர்பார்ப்பு களுடன் வெளியாகியிருக்கிறது ‘தில்வாலே’ படம்.

கோவாவில் கார்களை மாற்றம் செய்யும் கடை நடத்துகிறான் ராஜ் (ஷாரூக்). அவனது செல்லத் தம்பி வீர் (வருண்). வீருக்கு இஷிதாவை (கிருதி சானோன்) பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் டான் கிங்குடன் (போமன் இரானி) மோதுகிறான் வீர். தம்பியைக் காப்பாற்றுவதற்காக ராஜ் சண்டையிடுகிறான். அப்போது, ராஜுக்கு பல்கேரியாவில் ‘காளி’ என்றொரு கடந்த காலம் இருப்பது தெரியவருகிறது. அந்தக் கடந்த காலத்தில்தான் மீராவும் (காஜோல்) இருக்கிறாள். ராஜின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? அவன் மீண்டும் மீராவைச் சந்திக்கிறானா? வீர், இஷிதா காதல் என்னவாகிறது? இதுதான் ‘தில்வாலே’.

காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன், பாசம் என மசாலா படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களையும் படத்தில் வைத்திருக்கிறார் ரோஹித் ஷெட்டி. ஆனால், இவை எதுவுமே திரையில் பெரிதாக எடுபடவில்லை. ஷாரூக்-காஜோல், வருண் - கிருதி ஜோடியைத் தவிர படத்தில் ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. ஷாரூக்கின் நண்பர்களாக முகேஷ் திவாரி, பங்கஜ் திரிபாதி, ஷாரூக்கின் தந்தையாக வினோத் கன்னா, காஜோலின் தந்தையாக கபீர் பேடி, நகைச்சுவைக்கு ஜானி லீவர், சஞ்ஜய் மிஸ்ரா, வருண் சர்மா எனப் பாத்திரங் களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் யாருக்கும் நடிக்க வாய்ப்பில்லை. சஞ்சய் மிஸ்ரா வின் நகைச்சுவை மட்டும் மனதில் நிற்கிறது. ரோஹித் படத்தில் கார்கள் இல்லாமல் இருக்குமா? நிறைய கார்கள் பறக்கின்றன. ஆனால், அவை ஏன் பறக்கின்றன என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் ஜோடியான ஷாரூக், காஜோல் படத்தில் இருக்கிறார்கள். அதனால், நாம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று இயக்குநர் ரோஹித் ஷெட்டி நினைத்திருக்கிறார் போல. அவர்கள் இருவரும் தங்களுடைய நடிப்பால் முடிந்த அளவு படத்தைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும், இயக்கமும் படத்தைச் சலிப்பான அனுபவமாக மாற்றிவிடுகின்றன. ‘கபி குஷி கபி கம்’ படத்தின் ‘சூரஜ் ஹுவா’ பாடலைப் போல் ‘கெருவா’ பாடலை எடுக்க முயற்சித்திருக்கிறார் ரோஹித். இப்படி 90-களில் வெளிவந்த படங்களில் இருந்து பல விஷயங்களை மீண்டும் திரையில் பார்க்க முடிகிறது. ஆனால், அந்தப் படங்களின் ஈர்ப்பை இதில் கொண்டுவர முடியவில்லை. நகைச்சுவை வசனங்களும் பெரியளவில் எடுபடவில்லை.

வருண் தவன், அவரது முந்தைய படங் களான ‘ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹானியா’, ‘பத்ளாபூர்’ போன்றவற்றில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது நடிப்பும், நகைச்சுவையும் அனுபவமில்லாத நடிகரின் நடிப்பைப் போன்று வெளிப்பட்டிருக்கிறது. கிருதி சானோனுக்கு நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பில்லை.

கரண் ஜோஹர் - ஆதித்யா சோப்ராவைப் போல ஷாரூக்-காஜோலை வைத் துப் படமெடுக்க ஆசைப் பட்டிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை.

SCROLL FOR NEXT