‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பொன் மொழிக்கு சரியான உதராணமாக கமல் ஹாசன் வளர்ந்துகொண்டிருந்த நேரம் அது. நான் தூக்கி வளர்த்த கமலை கதாநாயகனாக வைத்து படம் இயக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் படங்களில் நடித்து, அவரது மோதிரக் கையால் கொட்டுப்பட்டவர்கள், அடுத்து என் படங்களில் நடிக்க வந்துவிடுவார்கள். எனக்கு அது ஒரு ராசியாகவே அமைந்தது.
மல்லிகைப் பதிப்பகம் என்ற பெயரில் நல்ல புத்தகங்களை வெளியிட்டவர் சங்கர். அவர் என்னை அணுகி, ‘‘படம் தயாரிக்கலாம் என்ற திட்டம் உள்ளது. நீங்கள்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும். புதுமுகங்கள் நடித்தால் நல்லது’’ என்றார். உடனே நான், ‘‘நீங்கள் புதிதாக படம் எடுக்க வருகிறீர்கள். புது முகம் என்றால் வியாபாரரீதியாக கஷ்டப் பட வேண்டியிருக்கும். முதல் படத்தில் அந்த முயற்சி வேண்டாம்’’ என்றேன். சொன்னதைப் புரிந்துகொண்டு, ‘‘உங்கள் விருப்படியே பட வேலைகளைத் தொடங்குவோம்’’ என்று சம்மதித்தார்.
தயாரிப்பாளர் ஓ.கே ஆனதும் கதை வேண்டுமே? ‘‘முதலில் கதையைத் தயார் செய்யுங்கப்பா… அதுதான் அடித்தளம்’’ என்று சொல்லும் ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் பாடம் கற்றவர்களாச்சே, அந்தப் பழக்கம்தானே வரும். கதையைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் கையில் கொடுத்த புத்தகங்களில் ஒன்று, எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை எழுதிய ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்கிற நாவல். அந்தக் கதையை படித்து பார்த்தேன். நடைமுறையில் இருக்கும் கதைகளைவிட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இன்றைக்கு ‘புதிய அலை’ என்று சொல்கிறோமே, அந்தப் பார்முலாவில் அந்தக் கதை இருந்தது. ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று நானும் அந்தக் கதையைப் தயா ரிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினேன்.
அந்த வித்தியாசமான கதையை எழுதிய புஷ்பா தங்கதுரையை வைத்தே திரைக்கதை, வசனம் அமைப்போம் என்று முடிவெடுத்தோம். அவரும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தார்.
படத்தில் யாரை ஹீரோவாக போடுவது என்ற விவாதம் தொடங்கியது. இந்த மாதிரி வித்தியாசமான கதை களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்காகவே ஒருத்தர் இருக்கிறார். அவர்தான் கமல்!
அவர் நடித்தால் சரியாக வரும் என்று சொன்னேன். கமலிடம் விஷயத்தை சொன்னதும், ‘‘முத்துராமன் சார் இப்ப தான் என் பக்கம் வந்திருக்கார்!’’ என்று மகிழ்ச்சி அடைந்தார் கமல். கதாநாயகி யாக சுஜாதாவைத் தேர்ந்தெடுத்தோம். அவர் இதற்கு முன் நான் இயக்கிய ‘மயங்குகிறாள் ஒரு மாது’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். எங்களோடு தொடர்பில் இருந்ததால் உடனே அவரை ஒப்பந்தம் செய்தோம். படத்தில் மற்றொரு நாயகனாக விஜயகுமாரை அணுகினோம்.
‘‘என்ன சார், கமல், சுஜாதாவுக்கு இருக்கும் அளவுக்கு என் கதாபாத்திரம் பெரிதாக இல்லையே?’’ என்று கேட்டார். ‘கிளைமாக்ஸ் உன் மீதுதான் முடிகிறது. படம் பார்த்து வெளியே செல்பவர்கள் உன் நினைவோடுதான் போவார்கள். கவலைப்படாதீர்கள். நிச்சயம் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும்’’ என்றேன். ஒப்புக்கொண்டார். அவரும் நன்றாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாகவே அமைந்தது.
‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் சுஜாதாவும், கமலும் காதலர்கள். காதல், கல்யாணமாக கனியும் சமயம் கமல் காணாமல் போய்விடுவார். ஒரு வருஷம் ஆகியும் திரும்பவே இல்லை. இனிமேலும் காத்திருக்க முடியாது என்கிற நிலையில் விஜயகுமாரை திருமணம் செய்துகொள்வார் சுஜாதா. ஒரு பிரச்சினையில் சிக்கிய கமல் சிறைக்குப் போய்விட்டு திரும்பி வருவார். சுஜாதாவுக்குத் திருமணமான செய்தி கமலுக்குத் தெரியவரும்.
சுஜாதாவிடம், ‘‘ஒருநாள் மட்டும் என்னுடன் மனைவியாக வாழ்க்கை நடத்துவதுபோல நடி. அந்த ஒருநாள் நினைவிலேயே நான் வாழ்நாள் முழு வதும் வாழ்ந்துவிடுவேன். நிச்சயம் எந்தத் தவறும் நடக்காது!’’ என்று கமல் கூறுவார். சுஜாதாவும் அதற்கு சம்மதிப்பார். அந்த ஒருநாளில் அவர்கள் காதலர்களாக இருந்த நாட்களின் பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வரும். உணர்ச்சிப் போராட்டங்களை ஒருவருக்கொருவர் மறைத்துக்கொண்டு முக பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் கள். இருவரும் தவறு செய்யப்போவ தைப் போல ஒரு பரபரப்பை ஏற்படுத் தும் விதமாக சில காட்சிகளைப் படமாக்கினேன். அப்படி எதுவும் நடப்பதற்கு முன் சுஜாதாவை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார் கமல்.
தனது வீட்டுக்குச் சென்ற சுஜாதா, காதலனுடன் ஒருநாள் மனைவியாக நடித்த நினைவிலேயே இருப்பார். கமலிடம், ‘‘அந்த நாளை என்னால் மறக்க முடியவில்லை. இனி என் கணவரோடு உண்மையாக வாழ முடியாது. என்னை உங்களோடு அழைத்துக்கொண்டுப் போய்விடுங்கள்’’ என்பார். கமலும் அன்று இரவு வீட்டு வாசலில் வந்து நிற்பார். தூங்கிக் கொண்டிருந்த கணவர் விஜயகுமாரை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வாசலுக்கு வருவார் சுஜாதா. வீட்டுப் படியைத் தாண்டப்போகும்போது சுஜாதாவை விஜயகுமார் அழைப்பார்.
‘‘காதலனோடு செல்ல முடிவெடுத்தப் பிறகு ஏன் என்னை வந்து பார்த்தாய்? உன்னோட கண்ணீர் என் காலில் பட்டு விழித்துக்கொண்டேன். திருமணத்துக்கு முன்னால் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத் திக்கு ஒருவன் அதுதான் பண்பாடு. கண்ணகியும், சீதையும் வாழ்ந்த நாடு இது. நமக்குன்னு ஒரு கலாச்சாரம், பண்பாடு உள்ளது. அதையெல்லாம் நீ மிதித்துத் தள்ளிவிட்டுச் செல்வதென்றால் போ. அதையெல்லாம் மதிப்பவள் என்றால் வீட்டுக்குள் வா…’’ என்றழைப்பார்.
சுஜாதா அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்து விஜயகுமாரின் காலில் விழுவார். இதை பார்த்துக்கொண்டே இருந்த கமல் மெல்லிய புன்னகையோடு, கையில் வைத்திருக்கும் விஷப் பாட்டிலை பார்ப்பார். சுஜாதாவோடு அங்கிருந்து சென்று தற்கொலை செய்துகொள்கிற முடிவில்தான் கமல் இருந் திருப்பார் என்று சொல்வதைப் போல படத்தை முடித்திருப்போம்.
புஷ்பா தங்கதுரை
மூத்த இசையமைப்பாளர் சுவாமி தட்சிணாமூர்த்தி இந்தப் படத்துக்கு இசையமைத்தார். இசைஞானி இளைய ராஜா, பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இருவருக்கும் கர்னாடக இசையை கற்றுக்கொடுத்தவர் சுவாமி தான். அவரது இசைக் கோப்பு முறையைப் பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும். அவர் ஒன்… டூ… த்ரீ என்று கம்பீரக் குரலோடு தன் இசைக் குழுவினரை இயக்குகிற விதமே தனி.
‘ஆண்டவன் இல்லா உலகமிது’, ‘நல்ல மனம் வாழ்க…’ போன்ற பிரபலமான பாடல்களை இந்தப் படத்தில் அவர் அமைத்திருந்தார். அந்த இசை மேதை சுவாமி தட்சிணாமூர்த்திக்கு ஒரு சிக்கல் வந்தது. அது என்ன சிக்கல்?
- இன்னும் படம் பார்ப்போம்…
படங்கள் உதவி: ஞானம்