எனக்கு நினைவு தெரிந்து நான் முதன்முதலாகத் திரைப்படம் ஒன்றைக் கண்டுகளித்தது கும்பகோணத்தில் இயங்கிவந்த (ஆமாம், இயங்கிவந்த, தற்போது இயங்கும் அல்ல) ஜுபிடர் தியேட்டரில்தான். அது, 1961-63 காலகட்டம். 7 வயதிருக்கும். இரண்டாம்ப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
இப்போதும் அந்த நினைவு பசுமையாகத் திரையாடுகிறது - அழகிய அலங்கார மடிப்புகளுடன் கூடிய கருநீலத் திரைச்சீலை. அது ஆடியசைந்து அசைந்து மேலெழுவது சிறுவனாகிய என்னை மிகவும் கவர்ந்ததொரு காட்சி. உள்ளத்தில் எதிர்பார்ப்பையும் ஆவலையும் தூண்டிவிடுவதாக அது இருந்தது.
அருமையான, பிரபலமான தமிழ்த் திரைப்படங்கள் பல வெளியான காலகட்டம் அது. பட்டியலிட்டால் மிகவும் நீண்டுவிடும். அதில் சிலவற்றை சிறுவனாகிய நான் குடும்பத்துடன் சென்று கண்டு களித்திருக்கலாம். நாங்கள் அச்சமயம் குடியிருந்த வீடு குடந்தை ரயில் நிலையம் அருகில் இருந்தது. வீட்டிலிருந்து மகாமகம் குளம் செல்லும் வழியில், சிறிது தொலைவிலேயே ஜுபிடர் தியேட்டரும் அமைந்திருந்தது; பொடிநடையாக ஐந்து நிமிடங்களில் சென்றுவிடலாம். அவ்வாறு ஜுபிடர் திரையரங்கில் நான் பார்த்ததில் நினைவில் நிற்பது ‘தேன்நிலவு’ திரைப்படத்தில் வரும் காஷ்மீர் இயற்கைக் காட்சிகளும் ஏரியும் (கருப்பு-வெள்ளையில்தான்!) ஓரிரு பாட்டுகளும் மட்டும்தான்.
சமீபத்தில் குடந்தை சென்றிருந்த எனக்கு 50 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ‘ஆட்டோகிராஃப்’ நினைவுகள் பொங்கியெழுந்தன. காலாற நடந்து சென்று பழைய காலடித் தடங்களைத் தேடிய எனக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. நாங்கள் குடியிருந்த வீடும் தெருவும் பெருமளவிற்கு மாறிப்போயிருந்தன; வீட்டைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. சரி, ஜுபிடர் தியேட்டரையாவது கண்டு களித்துத் திரும்புவோம் என்று நினைத்து ஜுபிடர் தியேட்டர் இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட மகாமகம் குளம் வரை வந்தும் தியேட்டரைக் காணாததால், அங்கு அமர்ந்திருந்த முதியவர் ஒருவரைக் கேட்டேன். ‘இதோ, இங்க இருக்கற அபார்ட்மெண்ட்தான் ஜுபிடர் இருந்த இடம்’ என்று குண்டைத் தூக்கிப்போட்டார் . ‘தோப்பா இருந்த இடத்தில் ஜுபிடர் கட்டினதைப் பார்த்தவன்தான் நான். இப்ப அதை இடிச்சி அபார்ட்மெண்ட் வந்ததையும் பார்த்தாச்சு’ என்று சஞ்சலத்துடன் அவர் கூறியது மனதை நெருடியது.
அந்தத் திரைச்சீலை அசைந்தாடி மேலே எழுந்திடும் அழகிய காட்சி இன்றைய நவீனத் திரையரங்குகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பதில்லை என்பதில் எனக்குப் பெரும் மனக்குறை உண்டு. பளீரென்ற வெள்ளைத் திரைதான் நம்மை முறைத்துக்கொண்டு விறைப்பாகக் காட்சி தரும்.
அந்தக் காட்சியின் உந்துதலாலோ என்னவோ, இன்றைக்கும் சினிமா ஆரம்பமாவதற்கு முன்பாகவே எனக்கு இருக்கையில் ஆசுவாசமாக அமர்ந்திட வேண்டும். படம் முடிந்ததும் மீண்டும் திரைச்சீலை ஆடியசைந்து கீழிறங்கி வெண்திரையை மறைப்பதுவரைக் கண்டால்தான் கொடுத்த காசுக்கு மனசு நிறைந்ததாக எனக்குத் தோன்றும்.