காவியக் கவிஞர் வாலி அவர்கள் மதுப் பழக் கத்தை நிறுத்தியதையும், இன்றைய தலைமுறை குடிக்கு எப்படி சீரழிகிறது என்பதையும் கடந்த வாரம் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன். கலங்கிய கண்களோடு அடுத்தவாரம் என்ன பகிரப் போகிறோம் என்பதை சொல்ல மனமில்லாமல் விட்டிருந் தேன்.
அந்த செய்தி வெளிவந்த நாளில் நாமக்கல் அருகே நான்கு பள்ளிக் கூட மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி பிறந்த நாள் கொண் டாடிய செய்தியையும், மற்றொரு பள்ளியில் ஒரு மாணவிக்கு நான்கு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வாட்ஸ் அப்-பில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற கொடூரமான செய்தியையும் படிக்க நேர்ந்தது. இவர்களை நினைக்கையில் கண்ணீர் வந்தது.
அது இதயத்திலிருந்து வந்ததால் சிவப்பாக இருந்தது. இந்தச் சூழலில் குமரி அனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துணிவே துணையாக போராட வேண்டிய நேரம் இது.
நான் இந்த வாரம் சொல்லப் போகும் படம் ‘துணிவே துணை’. இந்தப்படத்தை எப்படி தொடங்கி னோம் என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. சேலம் மாடர்ன் தியேட் டரில் சில படங்களை தொடர்ந்து படமாக்கி வந்தோம். அந்த நாட் களில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையோடு தினமும் இரண்டு நபர்களாவது வருவார்கள். அவர்களிடம், ‘ பண வசதி எப்படி?’ என்று நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் கேட்போம். ‘முதலில் பூஜையை போடுவோம். அப்புறம் பணத்தை புரட்டிவிடுகிறோம்?’ என்பார்கள்.
அதற்கு நாங்கள் ‘பூஜை போட்டு பாதியிலேயே படம் நின்று விடுவதற்கு நாங்கள் படம் எடுக்க மாட்டோம். பண பலத்தோடு வாருங்கள்’ என்று அனுப்பிவிடு வோம். இந்த நிலையில், எளிமை யாக வேட்டி சட்டை அணிந்து ஒரு மஞ்சள் பையுடன் எங்களை பார்க்க ஒருவர் வந்தார். ‘படம் எடுக்க வேண்டும்?’ என்றார். எல்லோரிடமும் சொல்வதைப் போல அவரிடமும் சொன்னோம். மேஜையில் மஞ்சள் பையை கொட்டினார். நோட்டுக்கட்டுகள் குவிந்தன. அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியம்.
இதற்கு மேலும் வங்கியில் பணம் இருக்கிறது என்று பாஸ் புக்கை காட்டினார். “நடிகர் ஜெய்சங்கரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம்’’ என்று கூறினோம். நடிகர் ஜெய் யிடம் கூறியதும், ‘நாம இந்தப்படத்தை ஏன் கலர் படமாக எடுக்கக் கூடாது?’ என்று கேட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படி தொடங்கப்பட்ட படம், ‘துணிவே துணை’ அதன் தயாரிப்பாளர் சேலம் பி.வி.துளசிராம்.
படத்துக்கு கதை, திரைக்கதை பஞ்சு அருணாசலம். இது சஸ்பென்ஸ் திரில்லர். படத்துக்கு சரியான தலைப்பை பிடிப்பது ஒரு முக்கியமான வேலை. ஆசிரியர் உயர்திரு. தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு இதழில் ‘துணிவே துணை’ என்று லட்சிய வார்த்தையை போடுவார். அந்த தலைப்பு சரியாக இருக் கும் என்று பஞ்சு அவர்கள் கூற தமிழ் வாணன் அவர்களிடம் கேட்டோம். ‘தாராள மாக வைத்துக் கொள் ளுங்கள். எல்லோருக் கும் துணிவு வருகிற மாதிரி படத்தை எடுங் கள்’ என்றார். தமிழ் வாணன் - ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்’ என்ற அடைமொழிக்கு தன்னை தகுதி யாக்கிக்கொண்டவர். அவர் தந்த செல்வங்கள்தான் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும்.
பொதுவாக கிளைமேக்ஸ் காட்சியில்தான் ஆடியன்ஸ் இருக்கை முனைக்கு வருவார்கள். இந்தப்படத்தில் முதல் 5 ரீல்களில் மக்கள் இருக்கை முனையில்தான் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அல்ல. அதற்கு மேலாக எடுக்கப்பட்ட படம் இது. ஒளிப்பதிவு பாபு. அவரது படப்பிடிப்பு பாராட்டுக்குறியது. எம்.எஸ்.வி அவர்களின் பாடல் களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தன. ஜெய் சங்கர், ஜெயபிரபா, அசோகன், விஜயகுமார், ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்தனர். வில்லன் களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவரை பெரிய வில்லனாக போடுவோம். இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண் கதாபாத் திரம் தலைமை ஏற்கட்டுமே என்று ராஜ சுலோச்சனாவை தலைவியாக்கினோம். அவர் நடிப்பில் வில்லன்களையே மிஞ்சி விட்டார்.
கலை இயக்குநர் ராதா மிக நுணுக்கமாக அரங்குகள் அமைத்தார். ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் வரும் ‘அச்சம் என்னை நெருங்காது’ என்ற பாடலை வித்தியாசமாக படம்பிடித்தோம். மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேடங்களையும் மாஸ்க் முறை யில் பாபு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் பாடல் காட்சி மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்த ஒருவர் இன்று புகழ்பெற்ற நடன அமைப்பாளராக உள்ளார். அவர் யார்? அடுத்த வாரம் பார்ப்போம்.
இன்னும் படம் பார்ப்போம்...