தமிழ்த் திரையுலகின் அபிமானத்துக்குரிய, மிகுந்த ரசனைக்குரிய ஜோடி கமலும் தேவியும். சொட்டும் காதல் ரசமும் சற்றே விஷமமும் கொண்ட மாமா பையன், அல்லது பக்கத்து வீட்டுப் பையனாகக் கமலையும், அறிவார்த்தம், தன்னம்பிக்கை, தன் அழகின் மீது சற்றே கர்வம் கொண்ட பெண்ணாக தேவியையும் பொருத்திப் பார்க்காத எண்பதுகளின் ரசிகர்கள் இருக்க முடியாது. காதலர்களாகப் பல படங்களில் நடித்திருந்தாலும் தம்பதிகளாக நடித்த படங்கள் மிகக் குறைவுதான்.
அதில் ஒன்றுதான் ‘மீண்டும் கோகிலா’. 1981-ல் ஜி.என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் காதலும் சபலமும் நிறைந்த இளம் வழக்கறிஞராக வருவார் கமல். தழையத் தழைய மடிசார் கட்டியபடி குடும்பத் தலைவியாக தேவி. வெகு இயல்பான நடிப்பில் இரண்டு கலைஞர்களும் மிளிரும் இப்படத்தின் நேர்த்திக்கு, இளையராஜா இசையின் பங்கு மிகப் பெரியது.
பெண் பார்க்கும் வைபவத்தில் கமல் முன் தேவி பாடும் ‘சின்னஞ்சிறு வயதில்’ பாடல், இவ்வுலகில் நிகழ்ந்த இன்பியல் சம்பவங்களில் ஒன்று. வீணையின் குறுக்காக உடலை முன்னோக்கி வளைத்துக்கொண்டு, உதட்டோரப் புன்னகையை உதிர்த்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் தேவி பாடுவதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருப்பார் கமல். எஸ்.பி. ஷைலஜா, ஜேசுதாஸ் பாடிய பாடல் இது. மெல்லிய ஹம்மிங்குடன் பாடலைத் தொடங்கும் ஷைலஜா, தேக்கி வைத்திருந்த வெள்ளம்போல் பாடலின் தடங்களில் பாய்ந்து செல்வார். முதல் நிரவல் இசையில் வீணைக்கும் கிட்டாருக்கும் இடையில் சிறு சம்பாஷணை நடக்கும். அதன் முடிவிலிருந்து தொடங்கும் புல்லாங்குழல் காற்றில் அலைந்து வீணை மீது இறகெனக் கீழிறங்க, சரணம் தொடங்கும். சரணத்தின் முடிவில் நாயகி பாடலை மறந்து திணற, ஜேசுதாஸ் அதைத் தொடர்வார். இரண்டாவது நிரவல் இசையில் பாக்கு இடிக்கும் சத்தம், வெற்றிலை மெல்லும் சத்தம் என்று குறும்பு கலந்த சாகசங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. கண்ணதாசன் எழுதிய பாடல் இது.
இரண்டாவது சரணத்தில் ஜேசுதாஸ் இணைந்துகொள்வதாக அமைந்த மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு. அது எஸ். ஜானகியுடன் அவர் பாடிய ‘பொன்னான மேனி’ பாடல். பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல். நடிகை தீபாவின் வழக்கறிஞரான கமல், அவர் நடிக்கும் படப்பிடிப்புக் காட்சிகளிலும் உடன் இருப்பார். மழையில் நனைந்தபடி தீபாவும் நடிகர் சுதாகரும் பாடி நடிக்கும் இப்பாடல் காட்சியையும், கண்ணையும் மூக்கையும் சுருக்கி விரித்துப் பார்த்து ரசிப்பார்.
மழைத் துளியின் தெறிப்பைப் போன்ற முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். குளிர் காற்றுடன் பொழியும் மாலை நேரத்து மழையின் ஈரத்தை உணர்த்தும் நிரவல் இசை, வேடிக்கையான சூழலில் அமைந்த இப்பாடலின் தளத்தை வேறு இடத்துக்குக் கொண்டுசெல்லும். புல்லாங்குழல் இசைக்குப் பின்னர், வயலின் வெள்ளம் ஒன்றை ஒலிக்கவிடுவார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், மழையில் குளிர்ந்திருக்கும் சாலை வழியாக ஓடிச் செல்லும் உணர்வைத் தரும் இசைக்கோவையைத் தந்திருப்பார்.
இப்படத்தின் மிக அழகான டூயட் பாடல் ‘ராதா… ராதா நீ எங்கே’. எஸ்.பி.பி. ஜானகி பாடிய இப்பாடல் கண்ணதாசனின் வரிகளில் அமைந்தது. தென்னிந்திய பிருந்தாவனம் ஒன்றில், ராதையும் கண்ணனும் தமிழில் பாடுவது போன்ற குறும்புக் கற்பனை. ஆண்-பெண் குரல்களைப் பயன்படுத்துவதில் இளையராஜா மேற்கொண்ட பரிசோதனைகள் பெரும் வெற்றி பெற்றவை. ஜானகி - எஸ்.பி.பி.யின் குரல்களின் கலவையாகத் தொடங்கும் ஹம்மிங் சின்ன உதாரணம். முதல் நிரவல் இசையில், பயணங்களின்போது, நம் பார்வையில் வேகமாகப் பின்னோக்கி நகரும் இயற்கைப் பிரதேசங்களை நினைவுபடுத்தும் வயலின் இசைக்கோவையைத் தொடர்ந்து, நிதானமான தபேலா தாளக்கட்டின் மீது ஓர் ஒற்றை வயலின் ஒலிக்கும். காதலின் நெகிழ்வும் அந்நியோன்யமும் கலந்து உருகும் இசை அது.
தொடர்ந்து கிட்டார் இசை பின் தொடர்ந்து ஓடிவர, களிப்பின் உச்சத்தில் பூந்தோட்டத்தில் ஓடிச் செல்வதுபோன்ற வயலின் இசைக்கோவையை இசைத்திருப்பார் இளையராஜா. மலர்த் தோட்டத்தின் சுகந்தத்தை உணரச் செய்யும் கற்பனை அது. இரண்டாவது நிரவல் இசையில் சுமார் 15 வினாடிகளுக்கு நீளும் கிட்டார் இசையின் பரிவர்த்தனை, நிரவல் இசையின் நுட்பங்களில் இளையராஜா செலுத்தும் ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டு.
இப்படத்தின் மிக முக்கியமான, அதிகம் கவனிக்கப்படாத பாடல் எஸ்.பி.பி. பாடிய ‘ஹே… ஓராயிரம்’. குயிலின் குரலை நகல் செய்யும் பணியை ஆண் குரல் செய்வதுதான் இப்பாடலின் விசேஷம். ‘குகுகுக்குக்.. கூ’ என்று உற்சாகமாப் பாடலைத் தொடங்குவார் எஸ்பிபி. காலைப் பனி நேரத்தில் சிறு நகரம் ஒன்றின் குடியிருப்பிலிருந்து தொடங்கும் சைக்கிள் பயணம்,
மரங்கள் அடர்ந்த தெருக்கள், தொழிற்சாலையின் பின்புறம் அடர்ந்த புதர்கள், புத்துணர்வுடன் விழித்தெழுந்திருக்கும் பூங்காக்களைக் கடந்து செல்வதுபோன்ற உணர்வைத் தரும் பாடல் இது. பரந்துவிரிந்த மைதானத்தின் மீது காலைச் சூரியனின் ஒளி வெள்ளம் பாய்வது போன்ற இசையை, முதல் நிரவல் இசையின் தொடக்கத்தில் ஒலிக்க விடுவார் இளையராஜா. ‘கீழ் வானிலே இளம் சூரியன்’ என்று தொடங்கும் சரணத்துக்கு மெருகு சேர்க்கும் இசை அது. இரண்டாவது நிரவல் இசையில், ஒரு யோகியின் சமநிலையில் முகிழ்த்திருக்கும் இயற்கை, தன்னிச்சையாக இசைப்பதுபோன்ற கிட்டார் இசைத் துணுக்கு ஒலிக்கும். அதைத் தொடர்ந்து இயற்கையின் எல்லையைத் தொட முயலும் ஒளிக்கதிர்களின் வீச்சைப் போன்ற இசை நீளும். அதனூடே ஒலிக்கும் புல்லாங்குழல் தரும் சிலிர்ப்பு, இளையராஜாவின் தனி முத்திரை!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in