‘சுல்தான்’ படத்தின் வசூல் வெற்றியால் கார்த்தியிடம் கதை சொல்ல பிரபல இயக்குநர்களே முண்டியடித்து வருகிறார்களாம். கார்த்தி தற்போது, 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கு ‘சர்தார்’ எனத் தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள். ‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு கார்த்தி இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல். இதில் கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறாராம் இயக்குநர். அந்தக் கதாபாத்திரத்துக்கு‘கர்ணன்’ படத்தில் அறிமுகமான ரஜிஷா விஜயனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்னொரு கதாநாயகி ராஷி கண்ணா.‘இன்னா மயிலு...’ பாடல் பதிவில் வினித் வரப்பிரசாத், சிவகார்த்திகேயன், கவின்‘வீரப்பன் கஜானா’ படப்பிடிப்பில்...
நட்புக்காக ஒரு பாடல்!
ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஹேப்ஸி தயாரித்துவரும் படம் 'லிஃப்ட்'. நாயகனாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் கவின், நாயகியாக அமிர்தா நடித்துவருகின்றனர். இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்க, பிரிட்டோ மைக்கேல் இசையமைத்து வருகிறார்.. சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், தற்போது படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்று வெளியாகியிருக்கிறது. 'இன்னா மயிலு...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை படத்தின் நாயகனுடன் இணைந்து நட்புக்காகப் பாடிக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுவும் தற்போது வரவேற்பைப் பெற்றுவருகிறது.
காவல் அதிகாரி முத்திரை!
‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ தொடங்கி ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வரை, கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் காவல் துறை சார்ந்த கதைகளுக்கும் காவல் அதிகாரி வேடங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போய்விடுகிறது. ‘கரகரப்பும் கண்டிப்பும் கொண்ட காவல் அதிகாரி வேடமா..! கூப்பிடு இயக்குநர் கௌதம் மேனனை!’ என்று கூறும் அளவுக்கு ஆகிவிட்டது. ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியில் தன்னுடன் பணியாற்றிய கௌதம் மேனனை, தன்னுடைய ‘விடுதலை’ படத்தில் காவல் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
யுவனின் பதில்
‘ஜூனியர் மேஸ்ட்ரோ’ என்று புகழப்படும் யுவன் ஷங்கர் ராஜா, கடந்த 2014-ம் ஆண்டு இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார். தனது பெயரையும் அப்துல் ஹாலிக் என மாற்றிக் கொண்டார். இதுவரை தன்னுடைய சமய நம்பிக்கை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் எதையும் பகிர்ந்தது இல்லை. அபூர்வமாக, குரானிலிருந்து சில வரிகளை சமீபத்தில் பகிர்ந்திருந்தார் யுவன். இதற்கு, அவரைப் பின்தொடர்ந்த ரசிகர் ஒருவர், 'உங்கள் இசைக்காகத்தான் நான் உங்களைப் பின்தொடர்கிறேன். சமய நம்பிக்கை பற்றித் தெரிந்துகொள்ள அல்ல; நான் உங்களைத் தொடரட்டுமா வேண்டாமா?' என்று எதிர்வினையாற்றினார். அதற்கு யுவன், 'தொடர வேண்டாம்' என பதில் அளித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த பதிலை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனந்தம் விளையாடும் வீடு!
ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில், இயக்குநர், நடிகர் சேரனும் கவுதம் கார்த்திக்கும் கதை நாயகர்களாக நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சேரனுடைய தம்பிகளாக செளந்தர்ராஜா, செல்லா, முனீஸ்ராஜ் ஆகியோரும், சேரனுக்கு ஜோடியாக சூசனும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட 50-க்கும் அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ‘கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை என்றாலும் இம்முறை முற்றிலும் வேறு ஒரு சேரனைப் பார்க்கலாம்’ என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் சேரன்.
வீரப்பன் காட்டில்..
சத்தியமங்கலம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். அந்தக் காட்டின் அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் தென்காசியிலும் படமாகி வருகிறது ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம். வீரப்பன் தொடர்பான பல காட்சிகளும் படத்தில் உண்டு என்கிறார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் யாசின். ‘குரங்கு, புலி, யானை ஆகிய விலங்குகளுக்கும் திரைக்கதையில் இடமிருக்கிறது’ எனும் இவர், யோகி பாபுவைக் கதையின் நாயகனாகவும் மொட்டை ராஜேந்திரனை காட்டில் பிறந்து வளர்ந்த மனிதராகவும் நடிக்க வைத்திருக்கிறாராம். இவர்களுடன் ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா ஆகிய புதுமுக ஜோடிகள் காட்டுக்கு உலா மேற்கொள்ள வரும் காதலர்களாக நடித்து வருகிறார்கள். சமூக த்ரில்லர் படமாக உருவாகிவரும் இதனுடைய கதை, திரைக்கதையை, ஜோதிகா நடித்த ‘ராட்சசி' படத்தின்இயக்குநர் சை.கௌதம்ராஜ் - பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.