இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஆளுமைகள்: தூரிகையில் உயிர்பெறும் திரைப்படங்கள்

கிங் விஸ்வா

ஒரு வரலாற்றுப் படம் எடுக்க வேண்டும் என்றால் இணையதளத்தில் தேடினாலே இன்று எல்லா விஷயங்களும் கிடைத்துவிடுகின்றன. ஆனால், இணையம் உருவாவதற்கு முன்பு? இந்தக் கேள்விக்கு 60 ஆண்டுகள் தொடர்ந்து பதில் சொல்லி வந்திருக்கிறார்கள் ஹாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்.

இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் ‘ஸ்டோரி போர்ட்’ பற்றி ஒரு சின்ன விளக்கம். திரைப்படத் துறையில் ஸ்டோரி போர்ட் பல விதங்களில் பயன்படுகிறது. ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை, காமிக்ஸ் போல வரைந்து, முழுமையாக விளக்குவதுதான் ஸ்டோரி போர்ட்.

ஹரால்ட் - லில்லியன் தம்பதி

காட்சிகளை அமைக்க மட்டும் இல்லாமல், சரியான கோணங்களைக் காட்சிகளில் பொருத்த, மிக முக்கியமாக செட் (அரங்கம்) அமைக்க ஸ்டோரி போர்ட் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

ஒரு திறமையான ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட், படத்தில் தயாரிப்புச் செலவைப் பெருமளவு குறைக்கிறார் என்பது ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் கண்டறிந்த உண்மை. ஹாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும்போது கலை இயக்கத்துக்கான தேவைகள் (செட், பிராப்பர்டி), மற்றும் படப்பிடிப்பு நாட்களைக் கணக்கிட்டு, செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க இந்த ஸ்டோரி போர்டுகள் உதவின.

2013-ம் ஆண்டு டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா (DGA) தங்களது இதழில் ஒரு படத்தை வெளியிட்டார்கள். அதில் புகழ்பெற்ற ‘டென் கமாண்ட்மெண்ட்ஸ்’ படத்தில், மோசஸ் கடலை இரண்டாகப் பிரிக்கும் காட்சி வரையப்பட்டு இருந்தது. அந்தக் காட்சியை ஸ்டோரி போர்ட் ஆக வரைந்தவர்தான் இந்தக் கட்டுரையின் நாயகனான ஹரால்ட் மிச்சல்ஸன்.

1950-களின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகளின் இறுதி வரையில் வெளியான பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இவர்தான் ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட். வரலாற்றுப் படங்கள் முதல் அறிவியல் புனைவு வரை அனைத்து வகையிலும், அனைத்து பாணியிலும் தனது முத்திரையைப் பதித்தவர் ஹரால்ட். இதில் அவர் மட்டும் தனியாகப் பயணிக்கவில்லை.

புளாரிடாவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் ஹரால்ட் முதன்முதலாக லில்லியனைச் சந்திக்கிறார். பின்னர் இருவரும் கலிபோர்னியா சென்று தங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். பென்ஹர், ஸ்பார்ட்டாகஸ், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களுக்கு ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட் ஆகப் பணிபுரியத் தொடங்கினார் ஹரால்ட். ஒரு கட்டத்தில் கணவருடன் இணைந்து லில்லியனும் பணியாற்றத் தொடங்கினார்.

ஒவ்வொரு கதைக்கும், அதன் களனுக்கும் ஏற்ற பொருட்களை, உடை அமைப்பை, மக்கள் வாழ்வியலை ஆராய்ந்து, அதனை இயக்குநர் மற்றும் கலை இயக்குநருடன் பகிர்ந்து, ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக, உறுத்தாமல் நமது பார்வைக்கு விருந்தாக்க இந்தத் தம்பதியர் தூரிகை பிடித்தனர். ஸ்கார்ஃபேஸ், ரோஸ்மேரீஸ் பேபி, ஃபுல் மெட்டல் ஜாக்கெட் என்று இவர்கள் முத்திரை பதித்த படங்கள் பல.

ஆனால், இவை அனைத்தையும் கடந்து இவர்களை நாம் மதிக்க இரண்டு காரணங்கள் உள்ளன. திருமண வாழ்க்கை என்பதே குறுகிய கால ஒப்பந்தமாகச் செயல்படும் மேற்கத்தியக் கலாச்சாரத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் உற்ற தம்பதிகளாக வாழ்ந்தவர்கள் இவர்கள். கணவன், மனைவி இருவருமே ஒரே துறையில் இயங்கும்போது பல பிரச்சினைகள் வரும். அதுவும் காலக்கெடுவுக்குள் இயங்கியாக வேண்டிய நெருக்கடி கொண்ட சினிமா துறையில் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு மன அழுத்தம் நிறைந்த இத்துறையில் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்ததுகூட ஒரு வகையில் சாத்தியம் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களது மூத்த மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதை நினைவில் கொள்ளும்போது, அவர்களது சாதனையை, அன்பை, பரஸ்பரப் புரிந்துகொள்ளுதலை நாம் உணரலாம்.

இவர்களது வாழ்க்கையை ஒரு அருமையான ஆவணப்படமாக எடுத்து, கான் திரைப்பட விழாவில் வெளியிட்டார் இயக்குநர் டேனியல் ராய்ம். சென்ற வாரம் கோவாவில் நடந்த திரைப்பட விழாவிலும் இது திரையிடப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்திலும் இப்படத்தை இவர் வெளியிட உள்ளார்.

ஹரால்ட் - லில்லியன் கார்ட்டூன் சித்திரம்

திரைக்குப் பின்னால் அமைதியாக இயங்கும் இவர்களது வெற்றிக்குப் பின்னாலும் அமைதியான ஓர் உண்மை இருக்கிறது. முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு ஸ்டுடியோவுக்கும் அலைந்தார் ஹரால்ட். அப்போது அவர் தான் வரைந்த ஓவியங்களை அவர்களுக்குக் காண்பிப்பார். ஒரு முறை அவருக்கு ஒரு பிரபல ஸ்டுடியோவிலிருந்து அழைப்பு வந்தது. “நீங்கள் வரைந்த ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன. நாளை முதல் வேலைக்குச் சேர முடியுமா?” என்ற கேள்விக்கு உடனடியாக பதில் அளித்து, மறுநாளே வேலைக்கும் சேர்ந்தார் ஹரால்ட். இதில் நகைமுரண் என்னவென்றால், ஸ்டுடியோகாரர்கள் பார்த்து வியந்த ஓவியங்கள் இவருடையது அல்ல என்பதுதான்.

விதியின் சில புரிபடாத செயல்கள் முடிவில் மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

SCROLL FOR NEXT