கடந்த ஆண்டு எஸ்.பி.பியின் மறைவைப் போலவே இந்த ஆண்டில் விவேக் மறைவுக்கு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது கோலிவுட். படப்பிடிப்புகளில் மரக்கன்றுகள் நட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் நாயகன் சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் மரம் நட்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னணிக் கதாநாயகியான ஆத்மிகா, தனது வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, ‘ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்கிற விவேக் சாரின் கனவை நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம்’ என்று கூறியிருக்கிறார். தேர்தல் பரப்புரைக்குப் பின், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்டிகிள் 15’ படத்தின் படப்பிடிப்பில் மரங்கள் அடர்ந்த திறந்தவெளியில் விவேக்கிற்கு படக்குழுவினருடன் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். விவேக்கிற்கான இந்தப் பசுமை அஞ்சலி கோலிவுட்டில் தொடர்ந்து வருகிறது.
முடங்காத திரையரங்குகள்!
கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்தாலும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் முடங்கிவிடவில்லை. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி, தினசரி 3 காட்சிகள் மட்டுமே திரையிடுதல், ஞாயிறு முழுமையாக காட்சிகள் ரத்து எனத் தொடர்கிறது. ரசிகர்களும் தகுந்த பாதுகாப்புகளுடன் திரையரங்குகளுக்குச் என்று வருகிறார்கள். இதுவொருபுறம் இருக்க,
100 சதவீத இருக்கைகள் வேண்டி, பல படங்கள் தங்களுடைய வெளியீட்டை தள்ளி வைத்துள்ளன. அவற்றில் 'எம்.ஜி.ஆர். மகன்', 'லாபம்', ‘தலைவி’ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தங்களுடைய வெளியீட்டை மே மாதம் நோக்கி நகர்த்தியுள்ளன.
‘மாஸ்’ பங்களிப்பு
ஒரு மாஸ் ஹீரோவின் படத்தில், மற்றொரு மாஸ் ஹீரோவின் பங்களிப்பு அமைவது தமிழ் சினிமாவில் அபூர்வம். விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதியை, கமலின் ‘விக்ரம் படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். ‘நான் இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார் விஜய்சேதுபதி. இதுவொரு பக்கம் இருக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத், நெல்சன் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து, விஜய் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதுவதை சிவகார்த்திகேயன் உறுதி செய்திருக்கிறார்.