‘கொற்றவை’ படப்பிடிப்பில் வேல.ராமமூர்த்தி, படக்குழுவுடன் சி.வி.குமார் 
இந்து டாக்கீஸ்

சி.வி.குமார் நேர்காணல்: பாண்டியர் வரலாறும் பகீர் புதையலும்!

கா.இசக்கி முத்து

உள்ளடக்கரீதியாகத் தரமும் போதிய பொழுதுபோக்குத் தன்மையும் கொண்ட படங்களைத் தொடர்ந்து தயாரித்துவருபவர் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சி.வி.குமார். ‘மாயவன்’. ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படங்களின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். நிதிச் சிக்கல்களால் சற்று இடைவெளி எடுத்திருந்தவர், தற்போது அதிலிருந்து மீண்டு, மும்முரமாகப் பல படங்களை தயாரிக்கவும் இயக்கவும் தொடங்கிவிட்டார். மூன்று பாகங்களாக உருவாகும் ‘கொற்றவை’ படத்தின் முதல் பாகத்தை இயக்கி முடித்து டப்பிங் பணியைத் தொடங்கியிருந்தவரை நேரில் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

உங்களுடைய தயாரிப்பில், இயக்கத்தில் வெளியான பல படங்களின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கியிருப்பது ஏன்?

இதுவரை தயாரித்த படங்கள் அனைத்துமே இரண்டாம் பாகமாகத் தொடரக்கூடிய சாத்தியம் கொண்ட புதுமையான கதைக் களங்களில் உருவானவைதாம். பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறோம் எனும்போது ஒரு படம் என்பது சொத்து மாதிரிதான். பணம் மட்டுமே பிரதானம் என்கிற மனநிலையில் இரண்டாம் பாகம் செய்யக் கூடாது.

நல்ல கதை அமைந்தால் மட்டுமே அது சாத்தியம். தற்போதைய கரோனா, ஓடிடி சூழ்நிலையில் மக்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்க ஏதேனும் ஒரு விஷயம் தேவைப்படுகிறது. தற்போது ‘பீட்சா 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ‘இன்று நேற்று நாளை' படம் முடிவடைந்த தறுவாயிலிருந்து இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதியுள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் ரவிக்குமார். ‘சூது கவ்வும் 2' கதையும் அருமையாக அமைந்திருக்கிறது. நல்ல கதைகளாக அமைந்துவிட்டதால் அச்சமின்றித் தயாரிக்கிறேன்.

அதேபோல் அமேசான் ஓடிடியில் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற டாப் 10 படங்களின் வரிசையில் என்னுடைய 'அதே கண்கள்', 'மாயவன்' ஆகிய படங்கள் இருக்கின்றன. இந்தியில் ‘மாயவன்’ படத்தை யூடியூபில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அதை 4 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்தியில் தொலைகாட்சி ப்ரீமியர் செய்யப்பட்ட முதல் படம் என்று இதைச் சொல்லலாம்.

அதில் 14 டி.ஆர்.பி. புள்ளிகள் கிடைத்தன. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்ததால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதத் தொடங்கியுள்ளேன். இரண்டாம் பாகம் அறிவிப்புக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. சயின்ஸ் பிக்சன் தமிழில் அதிகம் செய்யப்படுவதில்லை. மேலும், அந்தளவுக்குப் புரிதலுடன் யாரும் கொடுப்பதில்லை. ‘மாயவன்' படத்துக்கு நல்ல விளம்பரம் செய்திருந்தால் திரையரங்குகளில் இன்னும் சிறப்பாக ஓடியிருக்கும். என்னைப் பொறுத்தவரை அது ரசிகர்களைச் சென்றடைந்த ஒரு வெற்றிப்படம்தான்.

எழுத்தாளராக, இயக்குநராக ‘கொற்றவை' உங்களுக்கு மூன்றாவது படம். அதைப் பற்றி கூறுங்கள்...

இரண்டாம் நூற்றாண்டில் காணாமல்போன ஒரு பெரும் புதையல், அப்படியொரு புதையல் இருக்கிறது என நம்பும் சிலர், அப்படி நம்புபவர்களைத் தேடும் சிலர், அந்தப் புதையல் பற்றிய குறிப்புகள் எதிர்பாராதவிதமாக நிகழ்காலத்தில் வாழும் நாயகன், நாயகியின் கையில் கிடைக்கிறது. அதைத் தேடி அவர்கள் செல்கிறார்கள். நிகழ்காலத்தில் நாயகன் - நாயகி இருவருக்கும் அந்தப் புதையலுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதும் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வரலாறும், புனைவும் கலந்த கதைதான் 'கொற்றவை'. 'தி டாவின்சி கோட்' மாதிரியான ஒரு கதை என்றுகூடச் சொல்லலாம். அந்தப் படத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் கற்பனையும் வரலாறும் சரியான கலவையில் இருக்கும். எது உண்மை, எது கற்பனை என்பதை வரலாறு தெரிந்தாலன்றிப் பார்வையாளர்களால் பிரித்தறிய முடியாது. வரலாறு தெரியாதவர்களுக்கும் அந்தப் படம் எப்படி விறுவிறுப்பாகச் சுவாரஸ்யமாக இருந்ததோ, அதைவிடப் பல மடங்கு சுவாரஸ்மாக, வேகமாக ‘கொற்றவை’ இருக்கும். மூன்றாவது பாகத்தில்தான் தான் க்ளைமாக்ஸ்.

ராஜேஷ் கனகசபை நாயகனாகவும் சந்தனா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகா, அனுபமா குமார், கெளரவ் நாராயணன், வேல ராமமூர்த்தி, பவன், வேலு பிரபாகரன், அபிஷேக், சுபிக்‌ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளில் 50 சதவீதத்தையும் முடித்துவிட்டோம். முதல் பாகத்துக்கு ஒரு பாட்டு, சண்டைக் காட்சி மட்டும் படமாக்கவேண்டும். டப்பிங் பணிகள் முடிந்ததும் அதையும் முடித்துவிடுவோம்.

இந்தப் படத்துக்குள் பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழ்மகன் எப்படி வந்தார்?

‘பிட்ஸா - 3’ படத்துக்கு அவர்தான் வசனகர்த்தா. அந்தப் படத்தின் இயக்குநர், ‘இவர்தான் எழுத்தாளர் தமிழ்மகன், இந்தப் படத்தின் வசனகர்த்தா’ என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த சந்திப்பில்,அவர் எழுதிய நூல்கள், நாவல்கள் பலவற்றையும் எனக்குப் பரிசளித்தார். அப்போது ஒவ்வொரு நூலின் அட்டையாகப் பார்த்துக்கொண்டே வந்தபோது ‘படைவீடு’ கண்ணில் பட்டது. ‘இந்த நாவலை நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்’ என்று அப்போது அவரிடம் சொன்னேன். ‘கொற்றவை’யும் அந்த ஜானர்தான் என்பதால் அவர் வசனம் எழுதுவது சரியாக இருக்கும் என்று அவரையே ‘கொற்றவை’க்கும் அமர்த்திக்கொண்டேன். கலக்கியிருக்கிறார்.

கரோனா அச்சுறுத்தலால் படங்கள் தயாரிப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

பல மாற்றங்களைக் கூறலாம். த்ரில்லர் படங்களைக் காண மக்கள் இப்போது திரையரங்குகளுக்கு வருவதில்லை. ஏனென்றால், இப்போது சப்-டைட்டிலுடன் பிற மொழிகளில் தயாரான நல்ல த்ரில்லர் படங்கள் ஓடிடியில் நிறையவே கிடைப்பதால் அவற்றைப் பார்த்துவிடுகிறார்கள். திரையரங்குகளுக்கு என்று சின்ன படங்களைத் தயாரிப்பதில் மிகப்பெரிய சவால் இருக்கிறது. ஏதேனும் ஒரு விஷயத்தைப் புதிதாகச் செய்தால் மட்டுமே மக்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்க முடியும். ஒரே இடத்தில் நடக்கும் கதையில்கூட, அதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் கதை, நான்கு நடிகர்கள் போதும் என்றெல்லாம் படம் எடுத்துவிட முடியாது. இந்த மாதிரியான சிறு படங்களுக்குத் திரையரங்கில் வாய்ப்புகள் குறைவு. இதுபோன்ற படங்களை இனி ஓடிடிக்கு மட்டுமே பண்ண முடியும்.

திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை மத்திய அரசு கலைத்துவிட்டது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

முதலில் படங்களுக்குத் தணிக்கை இருக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. ஒரு படத்தைப் பார்த்து இது சரி, தவறு என மக்களைப் புரிந்துகொள்ள வைப்பது தான் அனைவருடைய கடமையும். சினிமாவும் கூட அப்படியொரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் கருவிதான். தணிக்கையில் பிரச்சினை என்றால் தீர்ப்பாயம் இருந்தது. இப்போது நேராக நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் எக்கச்சக்க வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. எப்படித் தீர்வு காண்பது என்றே தெரியவில்லை.

அனைத்து தரப்பு மக்களும் இப்போது ஓடிடி பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்களா?

கிராமப்புறங்களிலேயே அதிகமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ ஒளிபரப்பாகும் முன்பு காலையிலேயே ஹாட்ஸ்டாரில் பார்த்துவிடும் பழக்கம் வந்துவிட்டது. மக்களே சிறுபடங்களை திரையரங்குகளில் பார்ப்பதற்குத் தயாராக இல்லை. ‘இவையெல்லாம் சில தினங்களில் ஓடிடியில் வரும் பார்த்துக்கொள்வோம்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். செல்போன் சேவை வழங்கிவரும் பல நிறுவனங்கள், ஓடிடி தளங்களை இலவச இண்டர்நெட் வசதியோடு கொடுக்கின்றன. இதையெல்லாம் தாண்டி திரையரங்குகளுக்கு மக்களை வரவழைப்பது தான் சினிமாவுக்கான இன்றைய பெரும் சவால்.

SCROLL FOR NEXT