‘காக்கா முட்டை’ படத்துக்குப் பிறகு ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘தீபாவளி துப்பாக்கி’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கும் படத்தில் உதயநிதி ஜோடியாகவும் ‘ஈரம்’ பட இயக்குநர் அறிவழகன் இயக்கும் ‘ஆறாது சினம்’ படத்தில் அருள்நிதி ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மூன்றாவது முறையாக...
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு. ராமசாமி. இவரது இயக்கத்தில் இரண்டாவது முறையாக ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சீனு. ராமசாமி இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ‘தர்மதுரை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.
ரஜினிக்கு மேக் - அப்
‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் வரும் 21-ம் தேதிவரை நடக்க இருக்கிறது. அதை முடித்துவிட்டு 25-ம் தேதிவரை அங்கேயே ஓய்வெடுக்கும் ரஜினியுடன் இணைந்துகொள்ளவிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர். மலேசியாவில் இருந்தபடியே 26-ம் தேதி அமெரிக்கா பறக்கும் அவர்கள் அங்கே நடிகர் அர்னால்டை சந்தித்து அவரை கன்வின்ஸ் செய்து ஒப்பந்தம் போட இருக்கிறார்களாம்.
இதற்கிடையில் சென்னையில் தற்போது எந்திரன் 2-க்கான சிறப்பு மேக்-அப் டெஸ்ட் ஒன்றை செய்துவருகிறாராம் ஷங்கர். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஒப்பனைக் கலைஞர்கள் குழு சென்னை வந்திருக்கிறது. ரஜினியின் தோற்றச் சாயல் கொண்ட 50 வயது கொண்ட மூன்று பேரை இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்வு செய்து வைத்திருந்தாராம் இயக்குநர். அந்த மூவருக்கும்தான் இந்த மேக் -அப் சோதனையைத் தற்போது நடத்திவருகிறார்களாம். இந்தப் படத்துக்கு அசத்தலான புதிய தலைப்பு ஒன்றை வைக்கவும் முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.
புதுமையான போட்டோ ஷூட்!
காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டோ ஷூட் நடத்துவார்கள். நிச்சயதார்த்தம், திருமணம், திருமணத்துக்குப் பிறகு என்று களைகட்டும் இந்த போட்டோ ஷூட்டில் புதுமை படைத்திருக்கிறது கணேஷ் வெங்கட்ராம் - நிஷா கிருஷ்ணன் காதல் ஜோடி. இவர்கள் இருவருக்கும் நாளை மறுநாள் (நவம்பர் 22) திருமணம் சென்னையில் நடக்கிறது. திருமணத்துக்கு முன் ‘ப்ரி மேரேஜ் போட்டோ’ ஷூட் ஒன்றைக் காதல்ரசம் சொட்டச் சொட்ட நடத்தி முடித்து ஒளிப்படங்களை ஊடகங்களுக்கு விநியோகித்திருக்கிறார்கள். ஒளிப்படங்களை எடுத்தவர் பெங்களூர் போட்டோகிராபரான ராம்நாதன்.
காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டோ ஷூட் நடத்துவார்கள். நிச்சயதார்த்தம், திருமணம், திருமணத்துக்குப் பிறகு என்று களைகட்டும் இந்த போட்டோ ஷூட்டில் புதுமை படைத்திருக்கிறது கணேஷ் வெங்கட்ராம் - நிஷா கிருஷ்ணன் காதல் ஜோடி. இவர்கள் இருவருக்கும் நாளை மறுநாள் (நவம்பர் 22) திருமணம் சென்னையில் நடக்கிறது. திருமணத்துக்கு முன் ‘ப்ரி மேரேஜ் போட்டோ’ ஷூட் ஒன்றைக் காதல்ரசம் சொட்டச் சொட்ட நடத்தி முடித்து ஒளிப்படங்களை ஊடகங்களுக்கு விநியோகித்திருக்கிறார்கள். ஒளிப்படங்களை எடுத்தவர் பெங்களூர் போட்டோகிராபரான ராம்நாதன்.
விருதுகள் வென்ற வில்லன்
திருப்ப்தி பிரதர்ஸ் தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘உத்தம வில்லன்’. சமீபத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த படம், சிறந்த நடிகர் (கமல் ஹாசன்), சிறந்த பின்னணி இசை (ஜிப்ரான்), சிறந்த பாடல் (ஜிப்ரான்), சிறந்த சவுண்ட் டிசைன் (குணால் ராஜன்) என ஐந்து விருதுகள் பெற்றுத் திரும்பியிருக்கிறது. இந்த விருதுகள் தவிர சமீபத்தில் நடந்த ரஷ்யன் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இந்தப் படம் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதைப் பெற்று ஆக மொத்தம் ஆறு விருதுகளைப் பெற்றுத் திரும்பியிருக்கிறது.
நயன்தாரா வேடத்தில் இலியானா
ஆந்திர தேசத்தை கலக்கிவந்த கோவா அழகியான இலியானா ‘பர்பி’ படத்தின் மூலம் இந்திப் படவுலகில் கால் பதித்தார். தற்போது அங்கே போட்டி கடுமையாக இருப்பதால் திரும்பவும் ஆந்திரத்துக்குப் பாய்ந்து வந்தார். எப்போது திரும்பி வந்தாலும் தனக்கு வாய்ப்பு காத்திருக்கும் என்ற இலியானாவின் நம்பிக்கை வீண்போகவில்லை. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடிக்கும் ‘தனி ஒருவன்’ தெலுங்கு மறு ஆக்கத்தில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இலியானா. இது ஒரு பக்கம் இருக்க, நண்பன் படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்த இலியானா தமிழில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்வதும் உறுதியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். எஸ்.ஜே. சூர்யா இயக்கவிருக்கும் விஜய் படத்தில்தான் இந்த ஜோடி மீண்டும் இணைவதற்குப் பேச்சு வார்த்தை நடக்கிறது என்கிறார்கள்.