“ஒரு நல்ல கதாபாத்திரம் வழியாகத் தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று நினைத்தேன். 'சுல்தான்' படம் வழியாக அதற்கு வழி அமைந்துவிட்டது" என மனநிறைவை முகத்தில் வெளிப்படுத்தும் புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார், தெலுங்குத் திரையுலகைத் தெறிக்கவிட்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா. தற்போது இந்தியிலும் கால் பதித்திருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து…
கார்த்தியுடன் நடித்தது பற்றிக் கூறுங்கள்..
கார்த்தியைப் போன்ற நல்ல மனிதர்கள் இந்த உலகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும். 'கைதி' வெளியான சமயத்தில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பில் இருந்தோம். அவர் ஒரு அற்புதமான நடிகர். எனக்கு மொழி, இடம் என எல்லாமே கடினமாக இருந்தது. அதை இலகுவாக்கிய மயிலிறகு மனதுக்காரர் அவர்.
'சுல்தான்' படப்பிடிப்பில் மறக்க முடியாத சம்பவம்?
கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். சேற்றில் இறங்கி ஏர் ஓட்டியது, டிராக்டர் ஓட்டியது, கோழியைப் பிடித்துக்கொண்டு நடித்ததையெல்லாம் மறக்க முடியாது. பாதிப் படப்பிடிப்பில் என் உடல் சோர்வாக இருந்தது. அது கேமராவிலும் பதிந்தது. கார்த்தியும் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனும் இதைக் கண்டுபிடித்துக் கேட்டார்கள். ‘எதுவும் இல்லை’ என்று கூறிச் சமாளித்தேன். அவர்கள் இருவரும் கட்டாயப்படுத்தி என்னை ரத்தப் பரிசோதனை செய்ய வைத்தார்கள். டெங்குக் காய்ச்சல் என்று தெரிந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அவர்கள் இருவரும் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் போயிருந்தால் நான் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றிருப்பேன்.
தெலுங்கு, இந்தி, தமிழ் என மாறி மாறி நடித்துக்கொண்டிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
இந்தியில் நடித்துவிட்டு, உடனே தமிழில் வந்து பேசுவது எளிதல்ல. தெலுங்குப் படம் முடித்துவிட்டு உடனே கன்னடம் பேசுவது எளிதல்ல. இடமும் மொழியும் மாறும்போது, முதல் சில நாட்கள் மிகக் கடினமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் மருமகளாக ஆசை உள்ளதா?
எனக்கொரு மாப்பிள்ளையைப் பாருங்கள். நல்லவராக இருந்தால் போதும். நான் வேலைசெய்து சம்பாதிக்கிறேன். அவர் மற்ற விஷயங்களைப் பார்த்துக்கொண்டால் போதும்.
முன்னணிக் கதாநாயகி ஆனதன் பின்னணியில் நீங்கள் நடித்த படங்களின் வெற்றிகளுக்குத்தான் அதிகப் பங்கிருக்கிறதா?
சரியான படங்களைத் தேர்ந்தெடுப்பதனால் இது சாத்தியமாகியிருக்கிறது. எந்தப் படத்துக்குப் பிறகு எந்தப் படம் வெளியாகும், அதன் பிறகு நாம் எப்படி நடிக்க வேண்டும் என்று எல்லாம் யோசித்துத் திட்டமிட வேண்டும். ஒரு வகையில் வாழ்க்கையின் போக்கை முன்னரே யூகிக்கிறோம். இது சினிமாவுக்கென்று அல்ல; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும், அவ்வளவுதான். நான் தேர்ந்தெடுத்த பாதையில் செல்கிறேன். தொழில்வாழ்க்கையில் முழு கவனத்துடன் இருக்கிறேன்.
சமூக வலைதளங்களில் உங்களுடைய ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்களே..!
நான் நானாக, அசலாக இருக்கிறேன். அதுதான் மற்றவர்களுக்கும் என்னிடம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இப்படி உட்கார வேண்டுமா, இப்படிப் பேச வேண்டுமா என்றெல்லாம் நான் யோசிக்க மாட்டேன்.
கன்னடத்தில் அறிமுகமானாலும் பின்பு அங்கு கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே..?
இப்போது நான்கு திரைத்துறைகளில் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வருடமும் இரண்டு, மூன்று படங்கள் எல்லாம் நடிக்க முடியாது. அது சாத்தியமில்லை. அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ஐந்து படங்களில் நடித்திருக்கிறேன். அதுவே எனக்கு அதிக சுமையாக இருந்தது. எனக்கு எந்த மொழியும் உயர்வோ தாழ்வோ இல்லை. எனக்கு எல்லோரும் சமம்தான். மக்கள் எனக்குத் தந்த அன்பால் இந்த நிலையில் இருக்கிறேன்.