முதல் பட இயக்குநர்களின் வழக்கமான டென்ஷனைத் துளி கூட முகத்தில் காட்டாமல் இயல்பாக சிரிக்கிறார் ரவிஅரசு. அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ஈட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இவர் வெற்றிமாறனின் உதவியாளர். அவரிடம் பேசியதிலிருந்து...
ரவிஅரசு இயக்குநரானது எப்படி?
கரூர் மாவட்டத்தில் இருக்கும் அரவக்குறிச்சிதான் என் சொந்த ஊர். பி.எஸ்.சி இயற்பியல் பட்டதாரி. கவிதை, கட்டுரை என்று கல்லூரிக் காலங்களில் படைப்புகள் சார்ந்து இயங்கியதால் சினிமாவுக்கு வர விரும்பினேன். இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் என் முதல் கனவு. இருமுறை முயற்சித்தேன். முடியவில்லை. பிறகு வெற்றிமாறனின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராகச் சேர்ந்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களில் வேலை செய்தேன். இப்போது ‘ஈட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்.
‘ஈட்டி’ என்ற தலைப்பே கதை சொல்லுதே?
ஆமாம். ஈட்டி ரொம்ப ஷார்ப்பானது. என் கதையும், கதையின் நாயகனும் ரொம்ப ஷார்ப். தடை தாண்டி ஓடும் தடகள வீரர் அதர்வா. நம் கண்முன் நடக்கும் அன்றாட சம்பவங்களுக்குப்பின் ஒரு நிழல் உலகம் இயங்குகிறது. அந்த நிழல் உலகத்தில் சிக்கிக்கொள்ளும் அதர்வா அதிலிருந்து எப்படித் தப்பித்து வெளியே வருகிறார், எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை.
விளையாட்டு தொடர்பாக நிறைய படங்கள் வருகின்றன. இது எந்த அளவில் வேறுபடுகிறது?
விளையாட்டு அரசியலை இதில் பேசவில்லை. பொதுவாக விளையாட்டு தொடர்பான படங்கள் என்றால் ஒன்று டிராமா ஜானரில் இருக்கும். இல்லையென்றால் டாக்குமென்ட்ரி தோற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், ஈட்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படம். அதற்காகவே தெளிவான, குழப்பமில்லாத முறையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளோம். விளையாட்டு தொடர்பான கதையமைப்பில் நிழல் உலகப் பிரச்சினையை எப்படி இணைக்கிறோம் என்பதுதான் ட்விஸ்ட்.
தடகள வீரர் கதாபாத்திரத்துக்கு அதர்வா எப்படிப் பொருந்தினார்?
நான் என்ன நினைத்தேனோ அதை 100 சதவீதம் முழுமையாகத் திரையில் செய்து காட்டினார். கோபமும் வேகமும் கொண்ட ஹீரோ. ஓடணும் குதிக்கணும் சாதிக்கணும்னு வெறியா இருக்கிற கதாபாத்திரம். அதற்காக அதர்வா தன்னைத் தயார்செய்துகொண்ட விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். தடகள வீரர் நாகராஜிடம் அதர்வா சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டார். தடை தாண்டும் ஓட்டம் என்பதால் இதில் காயங்களும் வலிகளும் அதிகமாக இருக்கும். ஆனால், அதர்வா எதற்கும் அஞ்சவில்லை. இடைவிடாமல் உடற்பயிற்சி செய்து, தேர்ந்த விளையாட்டு வீரரைப் போல் முழு உடல்தகுதியுடன் வந்து நின்றார். படத்துக்காக ஆறு மாதத்தில் சிக்ஸ்பேக் வரச் செய்து அசத்தினார். இப்படி அதர்வாவின் ஈடுபாட்டைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஸ்ரீதிவ்யாவுக்கு இதுவரை நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஈட்டியிலும் அப்படித்தானா?
இதுவரைக்கும் ஜாலியாகவே வந்து போன ஸ்ரீதிவ்யா ஈட்டி படத்தில் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். சில காட்சிகளில் அதர்வாவுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும் நடிப்பில் பலத்த போட்டி இருக்கும். பல படங்களில் நடித்த அனுபவம் ஸ்ரீதிவ்யாவுக்கு இந்தப் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஸ்ரீதிவ்யாவின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகப்போவது உறுதி.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பிஸியாகிவிட்டார். அவரை இசைக்கு எப்படிப் பிடிக்க முடிந்தது?
அதுதான் ஈட்டிக்கு கிடைத்திருக்கும் கூடுதல் ஈர்ப்பு. பின்னணி இசையிலும், பாடல்களிலும் ஜி.வி. தெறிக்கவிட்டிருக்கிறார். ’நான் புடிச்ச மொசக்குட்டியே’, ’ஒரு துளி மழை’, ’பஞ்சுமிட்டாய் மேல தீயை பத்த வெச்சாடா’ என்ற மூன்று பாடல்களும் ஏற்கெனவே யூடியூபில் ஹிட்டடித்திருக்கின்றன.
வெற்றிமாறனிடம் கற்றதும் பெற்றதும்?
சினிமா மீதான அவரது பார்வையும் புரிதலும் என்னைக் கவர்ந்தன. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒழுக்கம், அர்ப்பணிப்பு. ஒரு கதை என்றால் அதற்காக நிறைய மெனக்கெடுவார். மிக ஆழமாகக் கதைக்கருவை வடிவமைப்பார். மினிமம் கமர்ஷியல், மேக்ஸிமம் லாஜிக் என்று இருந்தால் திரைக்கதை எந்த விதத்திலும் மிஸ் ஆகாது. ஏமாற்றாது. இதை அவரின் அருகிருப்பில் நான் கற்றுக்கொண்டேன்.
இந்தப் படத்தை தயாரிக்க மூன்று தயாரிப்பாளர்கள் முன்வந்தார்களாமே?
‘ஈட்டி’ படத்தை முதலில் தாணு தயாரிப்பதாக இருந்தார். அதற்குப் பிறகு வெற்றிமாறன், மைக்கேல் ராயப்பன் இருவரும் இணைந்து தயாரிப்பதாகத் திட்டம். இறுதியில் நானே தனியாக தயாரிக்கிறேன் என்று மைக்கேல் ராயப்பன் முன்வந்தார். வெற்றிமாறன் விட்டுக்கொடுத்தார். கதை, திரைக்கதை இவர்களைக் கவர்ந்ததே தயாரிப்பில் போட்டி வரக் காரணம்.