ஐ படத்தைத் தொடந்து விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கிறார். பாடல்கள் இடம்பெறும் சூழ்நிலை பாடலுக்கு முன்னும் பின்னும் உள்ள காட்சிகள் ஆகியவற்றை விளக்கிச் சொல்லிவிட்டு, அதற்குப் பொருத்தமான மெட்டுக்களை உருவாக்கித் தரும்படி கூறிவிட்டுப் பபடப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டாராம் விஜய் மில்டன். இமானோ கொடுத்த வேலையைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்ற துடிப்பில் இயக்குநர் கேட்டபடி மெட்டமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் மெட்டுக்களைக் கேட்டவுடன் இயக்குநருக்குக் கடும்கோபம் வந்துவிட்டதாம். நாம்சொன்னது ஒன்று நீங்கள் புரிந்துகொண்டது வேறொன்று என இசையமைப்பாளரியம் இயக்குநர் காரசாரமாகக் கத்தி வைக்க, பதிலுக்கு இசைமைப்பாளரும் கத்த ஒரே களேபரம் ஆகிவிட்டது என்கிறார்கள். குறிப்பாக நீங்கள் ஒன்றும் எனக்குப் பாடம் சொல்லித்தர வேண்டியதில்லை, நானொன்றும் புதுமுகம் இல்லை என்று மிளகாய் கடித்த மாதிரி சொல்லிவிட்டாராம் இமான்.
இதில் கடுப்பான இயக்குநர், இசையமைப்பாளரை மாற்றிவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்ல, தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ இதெல்லாம் ஒரு சண்டையா போய் ஜாலியா வேலை செய்ங்க என்று கூலாகச் சொல்லி அனுப்பிவிட்டார்களாம். இயக்குநர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தாராம். இருவரிடமும் தனித்தனியாகப் பேசியதில் சிக்கல் எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்த தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி இருவருக்கும் இடையில் நின்று புரியவைத்தாராம். அதன் பின்னர், பாடல் வேலைகள் தற்போது வேகமாக நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.