இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: ரெஜினாவுக்கு பாராட்டு!

செய்திப்பிரிவு

விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சக்ரா’ படத்தில் லீலா என்கிற வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருந்தார் ரெஜினா கசாண்ட்ரா. வில்லி நடிப்பு அவருக்குப் புதிதில்லை. ஆனால், கமர்ஷியல் கதாநாயகியாக தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அவர் துணிந்து எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதையும் ‘சக்ரா’வில் அவர் ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஸ்டைலையும் ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகிறார்கள். தற்போது இணையத் தொடர் ஒன்றிலும் நடிக்கவிருக்கும் ரெஜினா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படியும் ஒரு பேய்!

பொதுவாக தமிழ் சினிமா சித்தரிக்கும் பேய்கள் தங்கியிருப்பது, அவை வாழ்ந்து, இறந்த வீடு அல்லது கொல்லப்பட்ட இடமாக இருக்கும். ஆனால், ‘டிக் டாக்’ படத்தில் வரும் பேய் கொஞ்சம் மாறுபட்டது. நாயகனும் நாயகியும் இணைந்து மால் ஒன்றில் ‘ஸ்கேரி ஹவுஸ்’ என்கிற, மக்கள் டிக்கெட் வாங்கி வந்து அசையும் பொம்மைப் பேய்களைப் பார்த்து பயப்படும் பொழுதுபோக்கு ‘செட் வீடு’ ஒன்றை நடத்துகிறார்கள். அங்கே வந்து குடியேறி வாழ்கிறதாம் ஒரு பேய். அந்தப் பேயால் அரங்கேறும் நகைச்சுவை திகில் கலாட்டாதான் படம் என்கிறார் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் மதன். ‘மூடர்கூடம்’ புகழ் ராஜாஜி நாயகனாகவும் சுஷ்மா ராஜ் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். எதிர்பாராத ஆச்சர்யமாக சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’, ‘டான்’ என இரண்டு படங்கள், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 40-வது படம் ஆகியவற்றில் கதாநாயகி நடித்துள்ள பிரியங்கா மோகன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

வேற லெவல் ஓடிடி!

நமக்குப் பிடித்தமான திரைப்படங்களை மட்டும் திரையரங்கு சென்று பார்க்கிறோம். அதுவே ஓடிடியில் என்றால், ஆண்டு முழுவதற்கும் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைச் செலுத்தவேண்டும். தேவையற்ற இச்சுமையைப் பார்வையாளர்கள் மீது சுமத்தாமல் தனித்தன்மையுடன் வந்திருக்கிறது ‘ஆன்வி.மூவி’. திரையரங்குகளில் உள்ளதைப் போன்று, விரும்பிய திரைப்படங்களை மட்டும், நியாயமான கட்டணத்தில் பார்க்கும் ‘பே-பெர்-வியூ ஓ.டி.டி.’ (Pay per view OTT) ஓடிடி தளமாக இன்றுமுதல் தனது சேவையைத் தொடங்கியிருக்கிறது ‘ஆன்வி.மூவி’ (onvi.movie). இதில், முழுநீளத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ் ஆகியவற்றை விருப்பம்போல் காணலாம். 20 ரூபாயிலிருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது.

ஓடிடி சேவை அளிக்கும் பல நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவை வழங்கிவரும் ஆன்வி.மீடியா (ONVI.MEDIA) என்கிற இந்நிறுவனம், தனது கடந்த கால அனுபவம், ஆய்வின் அடைப்படையில் ‘ஆன்வி.மூவி’யை ஒரு டிஜிட்டல் திரையரங்கம்போல் செயல்படுத்துகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பலமொழிப் படைப்புகளையும் வழங்கிட படைப்பாளிகள், தயாரிப்பாளர்களுடன் நேரடியான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. மேலும், தரமான, சுவாரஸ்யமான படைப்புகளை சமரசமின்றித் தேர்ந்தெடுப்பதற்கான குழுவையும் ‘ஆன்வி.மூவி’ அமைத்துக்கொண்டுள்ளது. பார்வை யாளர்கள், கூகுள் பே, போன்பி உள்ளிட்ட அனைத்து விதமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்திப் படங்களைப் பார்க்கலாம்.

நலன் குமாரசாமி அடுத்து!

ஆர்யா - சாயிஷா நட்சத்திரத் தம்பதி நடித்துள்ள ‘டெடி’ அடுத்த வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் வடசென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரராக நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படமும் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து விஷாலுடன் இணைந்து தற்போது ‘எனிமி’ என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்தபின் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார் ஆர்யா. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து நலன் எழுதி இயக்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா.

மீண்டும் ‘அண்ணாத்த’

அஜித்தைத் தொடர்ந்து இயக்கி வந்த சிவா இயக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. இதில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், வேல.ராமமூர்த்தி, பிரகாஷ் ராஜ், சூரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து வந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றபோது படக்குழுவில் பலருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஹைதராபாத்தைத் தவிர்த்துவிட்டு சென்னையிலேயே செட் அமைத்துவருகின்றனர். மார்ச் 15-ம் தேதி முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குகிறது.ரெஜினா கசாண்ட்ராபிரியங்கா மோகன்

SCROLL FOR NEXT