இப்போதும்கூட கீதா கைலாசத்தைப் பார்க்கும் பலர், ‘வணக்கம் சாந்தா டீச்சர்’ என்கிறார்கள். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘சாந்தா டீச்சர்’ என்கிற சிறுகதையை தனிநபர் நாடகமாக எழுதி, நடித்து, அரங்கேற்றியபின் அவருக்கு இப்படியொரு பாராட்டு. இதைத் தாண்டி, ‘மர்மதேசம்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற தொடர்கள், நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர், சிறுகதை எழுத்தாளர், கதைசொல்லி எனப் பல அடையாளங்கள் அவருக்கு.. தற்போது கவிதாலயா குடும்பத்திலிருந்து நடிகராகக் களமிறங்கியிருக்கிறார்... இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளான கீதா கைலாசம். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
அப்பாவின் (இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்) புகழ் வெளிச்சத்துக்கு வெளியே, சுயமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் பால கைலாசம். அவரது மறைவுக்குப் பிறகே அவரைப் பற்றிய ஊடக ஆளுமை பொதுவெளியில் தெரியவந்தது. நீங்களுமேகூட கணவரின் மறைவுக்குப் பின்னர்தான் உங்களது படைப்புத் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. இது ஏன்?
கைலாசத்தைப் பற்றிய புரிதல் சரியானது. ஆனால், நான் 2005 முதலாகவே எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பது எப்போதுமே சுலபமில்லை. அதற்கான மனபலம் பிரத்யேகமாகத் தேவைப்படுகிறது. கணவரின் மறைவும் மறையாத அவருடைய கனவுகளும் என்னை முழுவீச்சில் களமிறங்கச் செய்துவிட்டன. எனது சினிமா பிரவேசத்துக்குக் காரணமும் அதுதான். இன்னொன்றும் சொல்லவேண்டும். நான் படித்தது ‘சிஏ, ஐசிடபுள்யூஏ’. அது என்னை ஒரு பாரமாக அழுத்திக்கொண்டேயிருந்தது. நடிப்பு என்று வருகிறபோது, அது எழுதுவதைப் போன்றதல்ல. அதற்கான நேரம், உழைப்பு எல்லாமே தனித்துவமானவை. நடிப்பில் இறங்கினால் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பது என் ஆசை. அழுத்திய பாரத்தை நகர்த்தி வைத்துவிட்டு, முடிவெடுக்க எனக்கு இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.
கவிதாலயா, மின் பிம்பங்கள் எனும் இரண்டு பெரிய களங்களில் பணியாற்றிய அனுபவம் உங்களைச் செதுக்கியது எனலாமா?
மின் பிம்பங்களில்தான் நான் முழுநேரத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். ‘மர்மதேசம்’, ‘ரமணி vs ரமணி’, ‘பிரேமி’, ‘கதையல்ல நிஜம்’ இவையெல்லாம் மக்கள் மறந்துவிடக்கூடிய தொடர்களா? திரைக்குப் பின்னால் கணக்கு வழக்குப் பார்ப்பதிலிருந்து, காஸ்டியூம், செட் டிசைன், கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது வரை சகலமும் எனக்குக் கைவந்த கலை. அதிலும் நான் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்திய நடிகர்கள் நிறைய பேர். உதாரணத்துக்கு தேவதர்ஷினி, ரேவதி சங்கரன், மாளவிகா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
‘வீட்டுக்கு வீடு லூட்டி’ என்கிற தொடரில் சரண்யா பொன்வண்ணனால் காமெடி செய்ய முடியும் என்று ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தேன். அவரே ஆச்சர்யப்பட்டுப் போனார். அதன்பிறகு பெரிய திரையில் அவர் ஏற்ற அம்மா கதாபாத்திரங்களை மெல்லிய நகைச்சுவை தோரணையுடன் எழுதத் தொடங்கினார்கள். இத்தனை பொறுப்புக்கும் நடுவே கே.பியும், கைலாசமும் கதைகளைத் திரையில் உயிர்கொள்ளச் செய்யும் விதத்தை ஏகலைவன்போல் பார்த்து வளர்ந்தேன் என்று சொல்வேன். இன்னொன்றும் சொல்லியே ஆகவேண்டும். எனது எழுத்துக்கும், நடிப்புக்கும் வித்திட்டு, ஊக்கம் தந்தவர், சமீபத்தில் காலமான எனது தந்தை நாகராஜன். தனது 91-ம் வயது வரை பொதுவெளிக்கு வராமலேயே, தனக்காக மட்டுமே எழுதிக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருந்தார்.
சிறுகதை எழுத்தாளர், நாடகக் கலைஞர், கதைசொல்லி என்கிற பரிமாணங்களில் உங்களது பயணம் எப்படியிருக்கிறது?
12-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ‘நீலவேணியும் நிலா வெளிச்சமும்’ என்கிற எனது முதல் நாவலை எழுதி முடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன். வேறு ஒரு பெண்ணுடன் காதலில் இருக்கும் கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவி, எப்படித் தன் கணவனின் கவனத்தைப் பெறுகிறாள் என்பது நாவலின் கரு. ‘அவளுக்கு ஒரு பெயர் உண்டு' என்கிற தலைப்பில் வெப் சீரீஸ் ஒன்றுக்கான திரைக்கதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இது, ஒரு பெண்ணின் திடீர் மரணம், அவளுடைய இரு மகள்கள், 5 தோழிகள் ஆகியோருக்கு, அவளைப் பற்றி முற்றிலும் அறிந்திராத விஷயங்களை எப்படிப் புரிய வைக்கிறது என்பதை சொல்லும் கதையைக் கொண்டது. 20-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், தமிழ் நாடகம் ஒன்றைத் தயாரித்து, எழுதி, நடித்து 2017-ல் மேடையேற்றினேன். சமூகம் கைவிட்ட பண்பாட்டுப் பழக்கமான கதை சொல்லலை மீட்டெடுக்கப் பலரும் முயன்றுவருகிறார்கள். நானும் அவர்களில் ஒருத்தி. தற்காலத் தலைமுறையினருக்கு கதை சொல்லப் பயிற்சி அளிப்பதோடு, நான் எழுதிய கதைகளை என் குரலிலேயே வீடியோ, ஆடியோவாகப் பதிவுசெய்து வெளியிடத் தொடங்கியிருக்கிறேன்.
‘கட்டில்’ திரைப்படத்தின் மூலம் திரை நடிப்புக்குள் நுழைந்திருக்கிறீர்கள். எப்படியிருக்கிறது திரை நடிப்புக் களம்?
‘கட்’, ‘ஆக் ஷன்’ ஆகிய வார்த்தைகள் போதை தருபவை. எனக்கு நடிப்பது அவ்வளவு பிடிக்கிறது. எனது ‘குறிஞ்சி’ நாடகம் மூலம் கிடைத்த முதல் திரைப்பட வாய்ப்பு ‘கட்டில்’. தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பி.லெனின் கதை, திரைக்கதை எழுதி, நடிகர், இயக்குநர் இ.வி. கணேஷ் பாபு, நடித்து இயக்கிவரும் படம். தற்போது அந்தப் படத்துடன் சேர்த்து அடுத்தடுத்து 5 படங்களில் நடித்துவிட்டேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்கள். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில், நடிகர் பசுபதியின் மனைவி, நெட்ஃபிளிக்ஸின் ‘நவரஸா’ ஆந்தாலஜி திரைப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவுசெய்து அரவிந்த் சாமி இயக்கியிருக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரம், சுஜித் சரங் ஒளிப்பதிவில், பெப்பின் ஜார்ஜ் இயக்கத்தில் தஞ்சையைக் களமாகக் கொண்ட படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என வேகமெடுத்திருக்கிறேன். தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். வரும் ஏப்ரல் முதல் நான் நடித்துள்ள படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கின்றன.
இழப்புக்கு மத்தியில் எழுந்து வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு நீங்கள் தரும் மகளிர் தின செய்தி என்ன?
இழப்பின் வலியை உங்களுக்கான வேலியாக எண்ணிக்கொண்டால், நீங்கள் வெளிப்படுவதும் வெளிவருவதும் கடினம். நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்ல வருவார்கள் என்று காத்திருக்காதீர்கள். எனவே செய்ய நினைப்பதை முழு முனைப்புடன் செய்ய களமிறங்கிச் செயல்படுங்கள். அப்போது உங்கள் திறமைக்கான களம் அமையும். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ‘கட்டில்’ படத்தின் எடிட்டிங் முடிந்து அதைப் பார்த்த சில பிரபலங்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘தமிழ் சினிமாவுக்கு ஒரு அம்மா, கிடைச்சிட்டாங்க’ என்று பாராட்டினார்கள். இன்னும் சிலர், ‘விஜய், அஜித்துக்கு அம்மாவாக நடிப்பீர்களா?’ என்றார்கள். கதையும், கதாபாத்திரமும் அனுமதிக்கும் என்றால், அம்மாவாக என்ன, அவர்களுக்கு ஜோடியாகக்கூட நடிக்க நான் தயார்தான்.