இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: காதலே இங்கே எல்லாமும்! - சதீஷ் செல்வகுமார்

ஆர்.சி.ஜெயந்தன்

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ படங்களின் இசைக்காக ஒரு பக்கம் கொண்டாடப் படும் ஜி.வி.பிரகாஷ், இன்னொரு பக்கம் அவர் நடித்து வெளியாகும் படங்களின் வியாபார வெற்றிக்காகவும் கொண்டாடப்படுகிறார். அவரது நடிப்பில் பல படங்கள் வெளியீட்டுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. என்றாலும் கடந்த வாரம் வெளியான ‘பேச்சிலர்’ படத்தின் டீசர் முன்னோட்டம் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது. அதனால் ஜி.வி.பி. நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் என்கிற தகவல் உறுதியானதைத் தொடந்து, அந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சதீஷ் செல்வகுமாரை சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து ஒரு பகுதி...

டீசரில் ஜி.வி.பிரகாஷைப் பார்க்கும்போது அமைதியின் மொத்த உருவம்போல் வருகிறார்... துடுக்கான இளைஞர் வேடங்களில் நடித்து வருபவரை எப்படி மாற்ற முடிந்தது?

ஜி.வி.பிரகாஷின் முகத்தில் அலட்டல் இல்லாத அமைதி குடிகொண்டிருப்பதை நான் கவனித்தேன். அதை இந்தப் படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்குள் புகுத்தினால் புதிதாகவும் யதார்த்தமாகவும் இருக்கும் என்று முடிவுசெய்தேன். ஜி.வி.பி. மிகச்சிறந்த மனிதர் மட்டுமல்ல; இனிய மனிதரும்கூட. சமூகம் மீது அவ்வளவு அக்கறையும் காதலும் கொண்டவர். இந்தப் படத்துக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருடன் பயணிக்கிறேன்.

திரையிசையில் இத்தனை சிறிய வயதில் அவரளவுக்கு சாதித்தவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். இசை என்றில்லை, திரையுலகின் எல்லாத் துறை சார்ந்த விஷயங்களிலும் அவ்வளவு அறிவை அவர் திரட்டி வைத்திருக்கிறார். இசை, நடிப்பு இரண்டிலுமே அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டும் என்கிற தேடலும் உழைப்பும் அவரிடம் இருக்கின்றன. இந்தப் படத்துக்கான அவரது நடிப்பு, இசை இரண்டிலுமே அதற்காக அடுத்த பெரிய அடியை வைத்திருக்கிறார். படம் முழுவதும் கதாபாத்திரத்துக்கான நடிப்பைக் கொடுப்பது அத்தனை எளிதல்ல! அதை இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார். அதைத்தான் டீசரில் பார்த்திருப்பீர்கள்.

கிராமத்தில் படித்து, வளர்ந்து, ஐடி துறையில் பணியாற்ற, மாநகருக்குச் செல்லும் இளைஞர் ஒருவரின் கலாச்சாரச் சிக்கல்போல் காதலைக் கையாண்டிருக்கிறீர்கள் என டீசர் மூலம் ஊகிக்க முடிகிறது..

ஆண் - பெண் உறவு என்று வந்தால் நட்புக்கும் உரிய இடமுண்டு என்றாலும் காதல் முதலிடம் பிடித்துவிடுகிறது. காதல் என்று எளிதாகச் சொல்லி நகர்ந்துவிடுகிறோம். ஆனால், யதார்த்தத்தில் அதில் எதிர்படும் ஏமாற்றங்கள், காதலால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் வாழ்க்கையைப் பலவிதங்களிலும் புரட்டிப்போட்டுவிட்டுப் போய்விடுகின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் இலக்கியமும் சினிமாவும் காதலை விடாமல் பேசிக்கொண்டேயிருக்கின்றன. இந்தப் படத்திலும் காதல் இருக்கிறது.

ஆனால், அது காதலின் எத்தகைய தருணங்களை எவ்வளவு நேர்மையாகப் பேசுகிறது என்பது முக்கியமாக இருக்கும். அதேபோல கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருபவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்றோ, நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் எல்லாம் தெரிந்த வல்லவர்கள் என்றோ எந்தச் சித்தரிப்பும் படத்தில் கிடையாது. நண்பர் ஒருவருக்கு வாழ்க்கையில் நடந்த சொந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறேன். வாழ்க்கைக்கும் திரைபடத்துக்குமான இடைவெளியைக் குறைத்து, சினிமாவுக்குரிய அழகுணர்ச்சியுடன் சொல்லியிருக்கிறோம்.

தேனி ஈஸ்வருடன் இயக்குநர் சதீஷ்குமார்

படத்தின் கதாநாயகி பேசும் வசனம் அவருக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்பதைக் காட்டியது. இதற்கான எதிர்வினைகள் எப்படியிருந்தன?

பாராட்டுகள்தான் அதிகமாக வந்தன. கதாநாயகியை ‘போல்ட்’ ஆகப் பேச வைத்திருக்கிறீர்கள் என்றார்கள். நான் அதை ஏற்றவில்லை. அது ‘போல்ட்’ அல்ல. ஒரு பெண் அப்படிப் பேசக் கூடாது என்று நினைத்தால் அதுவே அடக்குமுறைதானே.. கலை என்பதே அடக்குமுறைகளை உடைத்தெறிவதுதானே.. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்யா பாரதி மிகப்பெரிய உயரங்களை எட்டுவார்... அந்த அளவுக்கு தனது கேரக்டரை வெறித்தனமாக வாழ்ந்திருக்கிறார்.

உங்களைப் பற்றிக் கூறுங்கள்..

‘வேலூர் மாவட்டம்’ உள்பட சில படங்களில் உதவி இயக்குநராகப் வேலை செய்தேன். பிறகு ‘555’ படத்தில் இயக்குநர் சசி சாரிடம் சேர்ந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு அமைந்தது. அதன்பின்னர், சில பட முயற்சிகள், கதை விவாதங்கள் என சில வருடங்கள் ஓடிய நிலையில்தான், இந்த உண்மைச் சம்பவத்தைக் கேட்டதுமே என்னை பாதித்தது. திரைக்கதையாக்கி முடித்ததும் அக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லிபாபு சாருக்கு சொன்னேன். உடனே தொடங்கும்படி ஓகே செய்தார். தொடர்ந்து ரசனையான படங்களைத் தயாரித்திருப்பவர். ஒரு அறிமுக இயக்குநராக அவர் எனக்குத் தந்தது அளப்பரிய சுதந்திரம்.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை எப்படிப் பிடித்தீர்கள்?

திரைக்கதையில் கற்பனையின் அளவு மிக மிகக் குறைவு என்பதால் ‘ஏன் இந்தக் கதைக்கு நீ ஒளிப்பதிவாளர் ஈஸ்வருடன் பணியாற்றக் கூடாது?’ என்று கேட்டார் எனது நண்பர், மருத்துவர் முருகேஷ் பாபு. அவருடன் பணிபுரிவதெல்லாம் எனக்குப் பெருங்கனவு என்றேன். அவர்தான் என்னை ஈஸ்வர் சாரை சந்திக்க வைத்தார். ஈஸ்வர் சார் மொத்தப் படத்தையும் தனது தோள்களில் கேமராவை வைத்துப் படமாக்கியிருக்கிறார். படத்தை பார்க்கத் தேவையில்லை; படத்துக்குள் அவரது ஒளிப்பதிவு நம்மை அழைத்துப் போய்விடும்.

SCROLL FOR NEXT