1970களின் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த போக்குகளையும் சாதனைகளையும் சுவைபட அலசும் எட்டுக் கட்டுரைகள் தற்போது விற்பனையாகிவரும் தி இந்து தீபாவளி மலரின் சினிமா பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றிலிருந்து ட்ரைலர்கள்போல கட்டுரைகளின் சிறு பகுதிகள் இங்கே...
யதார்த்தத்தை மீறிய இரு துருவங்கள்
அநீதிகளைத் தட்டிக் கேட்டார். தீயவர்களை ஒழித்துக் கட்டினார். திரையில் தோன்றிய எல்லா இளம் பெண்களையும் தன் மீது காதல்கொள்ள வைத்தார். அவர்கள் இவரோடு கனவுகளில் சஞ்சரித்தார்கள். டூயட் பாடினார்கள். 1970-ல் ‘மாட்டுக்கார வேலன்’, ‘என் அண்ணன்’, 1971-ல் ‘ரிக்ஷாக்காரன்’, 1972-ல் ‘நல்ல நேரம்’, ‘ராமன் தேடிய சீதை’, 1973ல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, 1974-ல் ‘உரிமைக் குரல்’, ‘நேற்று இன்று நாளை’, 1975-ல் ‘இதயக் கனி’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய வசூலில் சாதனை படைத்த அனைத்தும் அச்சு அசல் எம்.ஜி.ஆர். பார்முலா படங்கள். எல்லாவற்றிலும் அவர் நன்மையின் குறியீடான சாகசக்கார இளைஞனாகவே தோன்றினார். தன் திரைப்படங்களில் தன்னைச் சமூகத்தின் விடிவெள்ளியாக முன்வைக்கும் பாத்திரங்களை ஏற்றார். உடல் கட்டைக் கவனமாகப் பராமரித்தார். தனக்கு ஜோடியாக நடிப்பதற்குப் புதிய இளம் பெண்களைத் தேர்ந்தெடுத்து நாயகிகளாக அறிமுகப்படுத்தினார்....
- தேவிபாரதி
அந்தக் காலத்து இளைஞிகள்
எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துக் கொண்டே இணையாக சிவாஜியுடனும் மஞ்சுளா நடித்துவந்தார். இந்த இணையின் ‘டாக்டர் சிவா’ குறிப்பிடப்பட வேண்டிய ஒரு திரைப்படம். துடுக்குத்தனமான நடிப்பு மஞ்சுளாவின் தனித் தன்மை. அது மட்டுமல்லாமல் அதுவரை திரையுலகம் பார்த்திராத கவர்ச்சியுடைகளை அணிந்துகொண்டு சில படங்களில் மஞ்சுளா நடித்திருப்பார். ‘டாக்டர் சிவா’வில் ஓடையொன்றில் (மிகவும் சிக்கனமான) உள்ளாடைகளோடு மட்டும் குளித்துக்கொண்டிருக்கும் மஞ்சுளா, ஜீப்பில் வரும் சிவாஜியைப் பார்த்ததும் அப்படியே ஓடிவந்து அவரிடம் குசலம் விசாரிக்கும் காட்சி தமிழ்த் திரையில் பெரும் புரட்சி....
- ஆசை
பழைய யுகத்தின் இளைஞர்கள்
இளம் பட்டதாரியான ஜெய்சங்கர் கலையார்வம் காரணமாக, டெல்லியில் கிடைத்த வேலையைக்கூட உதறிவிட்டு திரைப்படத்தில் நடிக்க வந்தவர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார்; மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையான ஜெய்சங்கர் நகைச்சுவை, காதல், சண்டை என்று எல்லா அம்சங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்தார். ஜெய்சங்கர் சிவாஜியைப் போல கதறி அழுது நடித்ததில்லை - ரசிகர்கள் மீது இரக்கம் கொண்டவர். ‘உப்புமா’ கம்பெனிகளுக்குக்கூடப் பக்குவப்பட்ட ரவையாக உடனடியாகக் கிடைத்துக்கொண்டிருந்தார். அதனாலேயே வெள்ளிக்கிழமை தோறும் ஜெய்சங்கர் படம் வெளியானது...
- ஜூரி
முத்திரை பதித்த மூன்று முடிச்சுகள்!
ஆரம்ப காலப் படங்களில் ஸ்டைல் முத்திரை ரஜினிமீது விழுவதற்கு ‘மூன்று முடிச்சு’ படமும் ஒரு காரணம். சாதுவான கமல், கனிவான ஸ்ரீதேவி, மூர்க்கமான ரஜினி என மூன்று பேருமே நடிப்பில் முத்திரை பதித்த படம். முக்கோணக் காதல் கதை போல் தெரிந்தாலும், ரஜினியின் பாத்திர வார்ப்பின் மூலம் திரைக்கதையில் வித்தியாசம் காட்டினார் பாலச்சந்தர். ரஜினியின் கோர முகம் வெளிப்படும்போது கதை வேகமெடுக்கும்.
‘மூன்று முடிச்சு’ படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி
ஸ்ரீதேவியை அடைய ரஜினி முயல, ஸ்ரீதேவியோ ரஜினியின் அப்பாவையே மணந்துகொண்டு அவருக்குச் சித்தியாக வந்து ரஜினியை ‘போடா கண்ணா போ’ என்றெல்லாம் சொல்லி வெறுப்பேற்றுவது இருபது ஓவர் போட்டியைப் போல விறுவிறுப்பாக இருந்தது. விக்கெட்டாக விழப்போவது யார் என்ற விறுவிறுப்பு கூடியது.
- டி.கார்த்தி
இயக்குநர்களின் யுகம்!
தமிழகத் தாய்க்குலங்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கு உயர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அவருடைய படங்களில் பெண்களின் நிலையை உயர்த்த இயக்குநர்கள் முயலவே இல்லை. இந்தக் கறையைத் துடைத்து, பெண்களைப் போர்த்தியிருந்த இருளை விலக்கி, ஆரோக்கியமான மாற்றத்துக்கு வழிவகுத்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள். தமிழ் சினிமாவின் பாதை மாறத் தொடங்குகிறது என்பதன் அறிகுறி இது.
புதிய திரைப்பாதையில் இரட்டையரான தேவராஜ்-மோகன், ’பசி’ துரை, பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் பலரது வரவு அதன் பின்னரான தமிழ்த் திரைப்படப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது. சேலத்திலும் கோவையிலும் சென்னையிலும் சினிமா ஸ்டுடியோக்களில் சுருண்டுகொண்ட தமிழ்ப் படத்தைத் தேவராஜும் மோகனும் சிறை மீட்டனர். அவர்களது ‘அன்னக்கிளி’ 1976-ல் வெளியானது. கிராமப்புறங்களின் உணர்வுகளில் முங்கி எழுந்த ஓசைகளை, மண்ணின் மணம் கமழும் நாடோடிப் பாடல்களின் சாரத்தைப் படச் சுருள்களில் பொதிந்து தரும் இசைப் பணியாற்ற இளையராஜாவை அழைத்து வந்தனர். ‘அன்னக்கிளி’யின் வரவுக்குப் பின்னர் கிராமத்துத் தெருக்களும் மனிதர்களும் அவர்களது பழக்க வழக்கங்களும் திரையில் உருப்பெறத் தொடங்கினர்.
- செல்லப்பா
கழுதையே கதாநாயகன்!
பெண்களுக்கு ஆபத்து வந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓடோடி வருபவன் கதாநாயகன். ஏழை பசியில் வாடினால் அங்கே உணவளிக்கும் தயாளன் அவன். வில்லனிடமிருந்து ஊரையும் நகரையும் மக்களையும் காக்கும் மாவீரன். கூடியவரையிலும் வில்லனைக் கொல்லாமல் மன்னித்து போலீஸிடம் ஒப்படைக்கும் ஊருக்கு உழைப்பவன். வில்லன் கத்தியால் குத்தினாலோ துப்பாக்கியால் சுட்டாலோ சாகாமல் பிழைத்துக் கொள்ளும் அதிசயப் பிறவி. இப்படி எழுபதுகளின் தமிழ் சினிமாவில் மலிந்திருந்த நாயக மாயைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
நின்றால் பாட்டு, நடந்தால் பாட்டு என பாடல்களைக் கூறுகட்டிய ஃபார்முலா சினிமாக்கள் மலிந்திருந்த காலகட்டத்தில் கம்பீரமாக வந்து நின்றது ‘அக்ரஹாரத்தில் கழுதை’. பாடல்களே இல்லாமல், வெறும் 91 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தப் படத்தைத் தமிழின் முதல் மாற்று சினிமா என்று தயங்காமல் சொல்லலாம். இந்தப் படத்தின் நாயகன் ஒரு கழுதை. இந்தப் படத்துக்கு தேசியவிருது கிடைத்தபோது அதை கடுமையாக விமர்சித்தார் ஆர்.எம்.வீரப்பன். அவர்தான் அப்போது தகவல் ஒளிபரப்பு அமைச்சர்.
- ஜெயந்தன்