இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: கனவுகளைத் துரத்தும் சகோதரர்கள்!

ச.கோபாலகிருஷ்ணன்

சென்னையின் அசலான சர்வதேச சினிமா கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. உலக வரைபடத்தில் மட்டுமே பல நாடுகளைப் பார்த்திருப்பவர்களுக்கு, அந்த நாடுகளின் நிலக்காட்சிகளையும் வாழ்க்கை முறையையும் அறிமுகம் செய்பவை அங்கே தயாராகும் சமகால உலக சினிமாக்கள்.

திரையரங்க இருள் தரும் தனிமையில் பெரிய திரையின் பிரமிப்புடன் இத்தகைய படங்களைக் காண்பதற்கான பொன்னான வாய்ப்பை வழங்குகிறது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா. தமிழக அரசின் உதவியுடன், இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும் இப்படவிழா, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். கரோனா பெருந்தொற்றின் காரணமாக அதன் 18-வது பதிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. எதிர்வரும் 25 வரை களைகட்டும் இப்பட விழாவில் எங்கு படங்கள் திரையிடப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

சென்னை, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பி.வி.ஆர். மல்டி பிளெக்ஸ் திரையரங்க வளாகம் (முன்பு சத்யம் சினிமாஸ்) இத்திரைப்பட விழாவின் முக்கிய மையமாக மாறியுள்ளது. அங்குள்ள சாந்தம், செரீன், சீசன்ஸ் உள்ளிட்ட நான்கு திரையரங்குகளிலும் அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் எதிரில் உள்ள அண்ணா திரையரங்கிலும் ஒவ்வொரு நாளும் நான்கு படங்கள்வரை திரையிடப்படுகின்றன.

53 உலக நாடுகளிலிருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 91 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளன. உலக சினிமா ஆர்வலர்கள் இப்படங்களைக் காண, விடுமுறை எடுத்துகொண்டு குவிந்துவிடுவார்கள். ஆனால், நெருக்கடியான பணி, வாழ்க்கைச் சூழலில் அனைத்துப் படங்களையும் பார்ப்பது பலருக்குச் சாத்தியமில்லை. அவர்களுக்கும் சேர்த்து, இந்தத் திரைப்பட விழாவில் அவசியம் காண வேண்டியவை என்று பின்வரும் திரைப்படங்களை இந்து டாக்கீஸ் பரிந்துரைக்கிறது.

ட்ரவுனிங் இன் ஹோலி வாட்டர் (ஆப்கானிஸ்தான்)

இந்த ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் திரைப்படங்கள் சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடபடவுள்ளன. அவற்றில் ‘ட்ரவுனிங் இன் ஹோலி வாட்டர்’, புகழ்பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு விருது வென்றுள்ளது. ஆப்கனைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி அங்கு நிலவும் பயங்கரவாதச் சூழலிலிருந்து தப்பி, ஐரோப்பாவில் குடியேற முயல்கிறது. அதற்காக ஈரானில் சட்டவிரோதமாக குடிபுகுந்து வாழ்கிறார்கள்.

ஐரோப்பாவில் அகதியாக அங்கீகரிக்கப்படுவதற்காக கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு மேலும் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. அலைதலும் சோதனைகளும் நிறைந்த புலம்பெயர் மக்களின் நிச்சயமற்ற அன்றாட வாழ்வை, மத அடிப்படைவாதத்தால் அவர்களுக்கு நேரும் கூடுதல் இன்னல்களை, இந்தப் படம் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. இதன் இயக்குநர் நவித் முகமதி ஆப்கனில் பிறந்து ஈரானுக்குப் புலம்பெயர்ந்தவர். தொடர்ந்து குறும்படங்கள், திரைப்படங்கள் வாயிலாக புலம்பெயர் மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பதிவுசெய்துவருகிறார்.

பிப்ரவரி 19-ம் தேதி மதியம் 1 மணிக்கு அண்ணா திரையரங்கிலும் பின்னர் 23-ம் தேதி மாலை 5.15 மணிக்கு சிக்ஸ் டிகிரீஸ் திரையரங்கிலும் திரையிடப்படுகிறது.

கேர்லெஸ் கிரைம் (ஈரான்)

‘கண்ட்ரி போகஸ்’ என்ற தலைப்பில் திரையிடப்படவிருக்கும் பல ஈரானியப் படங்களில் ஒன்று ‘கேர்லெஸ் கிரைம்'. ஈரானிய படங்கள் ஏன் உலக அளவில் பெரிதும் கொண்டாடப்படுகின்றன என்பதை உங்களுக்குப் புரியவைக்கும் திறவுகோலாக இந்தப் படமும் இருக்கலாம். வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ள இந்தப் படத்தை, தன் நண்பர் நசீம் அகமது போர் என்பவருடன் இணைந்து எழுதி, இயக்கியிருகிறார் ஷாராம் மோக்ரி.

1970-களின் இறுதியில் புகழ்பெற்ற திரையரங்கம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதில் குழந்தைகள் உட்பட 478 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் அனைவரும் ஈரானிய சினிமா வரலாற்றில் மிக அதிக புகழைப் பெற்ற படங்களில் ஒன்றான 'தி டீர்' திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள். இந்தக் கொடூர நிகழ்வே ஈரானிய முடியாட்சியை அகற்றிய புரட்சிக்கு வித்திட்டது. அதை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கேர்லெஸ் கிரைம்’, மக்களிடம் சினிமாவின் ஆழமான தாக்கத்தைப் பதிவுசெய்கிறது.

இப்படத்தை பிப்ரவரி 20 மாலை 6 மணிக்கு அண்ணா திரையரங்கிலும் பிப்.24 மாலை 3.30-க்கு சாந்தம் திரையரங்கிலும் காணலாம்.

அ பர்ஃபெக்ட்லி நார்மல் ஃபேமிலி (டென்மார்க்)

திருநங்கையாக மாறிவிட்ட தந்தையையும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத மகளையும் முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். திருநங்கையாகிவிட்ட தந்தையைப் பெற்ற இயக்குநர் மலோ ரேமேன், தன் நிஜவாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலினம் மாறிவிட்ட தந்தையை ஏற்க முடியாத சிறுமியின் அதிர்ச்சியும் தவிப்பும் பிடிவாதமும் படிப்படியாகத் தளர்வதை மிக இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கும் இந்தப் படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

இப்படம் பிப்ரவரி 26-ம் தேதி மாலை 6.15 மணிக்கு

செரீன் திரையரங்கில் திரையிடப்படுகிறது.

லிஸன் (போர்ச்சுகல்)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறது ஒரு போர்ச்சுகல் தம்பதி. பிறவிக் குறைப்பாடுகளுடைய தமது மூன்று குழந்தைகளை அவர்கள் தம்முடன் வைத்துக்கொள்வதை நாட்டின் சட்டம் தடுத்துவிடுகிறது. அரசு பாதுகாப்பு முகாமில் இருக்கும் தங்களது குழந்தைகளை தங்களுடன் வைத்துக்கொள்வதற்காக இத்தம்பதி நிகழ்த்தும் உணர்ச்சிப் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. தனிநபர்களின் அன்பு, பாசம் உள்ளிட்ட உணர்வுகளுக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்டச் சட்டங்களுக்கும் இடையிலான மோதலின் விளைவுகளை உணர்வுபூர்வமாக காட்சிபடுத்தும் இந்தப் படம், வளர்ந்த நாடுகளின் நடைமுறைகளுக்கு எளிய மக்கள் தங்களை பழக்கிக்கொள்வதில் இருக்கும் சவால்களைப் படம்பிடித்துக்காட்டுகிறது. இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கான தனது அதிகாரபூர்வ பரிந்துரையாக அனுப்பியது போர்ச்சுகல். வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தத் திரைப்படத்துக்கும், இயக்குநர் அன்னா ரோச்சா டி செளஸாவுக்கும் விருது கிடைத்தது.

பிப்ரவரி 20-ம் தேதி மதியம் 1 மணிக்கு செரீன் திரையரங்கிலும் பின்னர் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கும் சிக்ஸ் டிகிரீஸ் அரங்கிலும் இப்படத்தைக் காணலாம்.

ரன்னிங் அகெய்ன்ஸ்ட் தி விண்ட் (எத்தியோப்பியா)

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படும் எத்தியோப்பிய திரைப்படம் இது. வறுமை நிறைந்த ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து சாதிக்கும் கனவுகளைத் துரத்தியபடி, இருவேறு பாதைகளில் பயணிக்கும் இரண்டு சகோதரர்களின் கதை. ஒருவர் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதற்கான இலக்கை நோக்கி ஓடுகிறார். இன்னொருவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞராக முயல்கிறார். இந்த ஓட்டத்தில் இருவரும் மீண்டும் சந்திக்கும் புள்ளியில் படம் வேறொரு கட்டத்துக்கு நகர்கிறது. எத்தியோப்பியாவின் அம்ஹாரிக் மொழியில் முழுக்க முழுக்க உள்நாட்டு கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் அந்நாட்டு அரசால் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பபட்டுள்ள முதல் படம். இதற்கு முன்பு தயாரிப்பு நிறுவனங்களும் இயக்குநர்களுமே தமது படங்களை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பியுள்ளனர்.

பிப்ரவரி 19-ம் தேதி மாலை 6 மணிக்கு சாந்தம் திரையரங்கிலும் பிப்ரவரி 25 அன்று காலை 10 மணிக்கு அண்ணா திரையரங்கிலும் இப்படம் திரையிடப்படுகிறது.

SCROLL FOR NEXT