வெற்றிக்கு உத்தரவாதம் உள்ள கமர்ஷியல் கதைகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவார் தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார். அவரது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ‘டைட்டானிக்’ படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. ‘மூன்று காதல் ஜோடிகளின் கலகலப்பான காதல் கதையை. ஒரு ரயில் பயணத்தின் வழியாக சொல்லியிருக்கிறேன்’ என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஜானகிராமன். கலையரசன், காளி, ராகவ், ஆனந்தி, மதுமிதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
30 நாள் நிபந்தனை!
திரையரங்குகளில் வெளியாகி 30 நாள்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்கும் தயாரிப்பாளர்களின் படங்களுக்கே திரையரங்குகளைத் தருவோம் எனக் கிடுக்கிப்பிடி வைத்திருக்கின்றன திரையரங்க அமைப்புகள். ‘கரோனா பெருந்தொற்றில் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் அல்லாடி வரும் தயாரிப்பாளர்களுக்கு இது பேரிடி’ என்றுக் கதறியிருக்கிறார் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஆனால், திரையரங்குகள் தரப்பில் ஏகபோகம் மனோபாவம் குறைகிற மாதிரித் தெரியவில்லை.
விதார்த் 25
நட்சத்திர அந்தஸ்தைச் சட்டை செய்யாமல் கதாபாத்திரங்களை விரும்பும் நடிகர்களில் ஒருவர் விதார்த். ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’, ‘அஞ்சாமை’ ஆகிய ஐந்து படங்களில் தற்போது அவர் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் 25-வது படத்தை பென்ச் மார்க் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். சீனிவாசன் இயக்குகிறார். முதன்மைக் கதாபாத்திரத்துக்கு வரும் கனவுகளை மையப்படுத்திய திரில்லர் படமாக உருவாகிவரும் இதில், விதார்த்துக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.
முழுவதும் கானா!
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ இன்றுவெளியாகிறது. சந்தானத்தை வைத்து ‘ஏ 1’ படத்தை இயக்கிய ஜான்சன் மீண்டும் அவரை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்திருக்கின்றன பாடல்கள் பிரபலமானதற்கு பிரத்யேகக் காரணம் ஒன்று உள்ளது. முதல்முறையாக இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் கானா வகை. சளைக்காமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அந்த வகையில் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ அவர்தான் என நெட்டிசன்கள் பாராட்டிவருகிறார்கள்.
கலை வாரிசு!
எம்.ஜி.ஆரின் கலை வாரிசு என்று பிரகடனப்படுத்திக்கொண்ட பலர் திரையுலகில் உண்டு. ஆனால், எம்.ஜி.ஆரின் மனைவி, முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் தம்பி மகன் தீபன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். கடந்த 2018-ல் வெளியாகி, தெலுங்கு சினிமாவுக்கு கௌரவம் சேர்த்த வெற்றிப் படம் ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’. அந்தப் படத்தை தமிழில் ‘கேர் ஆஃப் காதல்’ என்கிற தலைப்பில் தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார்கள்.
அதில் கதையின் நாயகனாக, பழனி என்கிற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அதற்காக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தீபன், கடந்த 1985-ல் ‘முதல் மரியாதை’ படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருந்தார். ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ பாடல் காட்சியில் இளம் நாயகனாக நடித்திருந்த இளைஞர்தான் தீபன். ’இனி அசராமல் நடிப்புப் பயணம் தொடரும்’ என்கிறார் தீபன்.
ஹன்சிகாவின் நடனம்!
வெப் சீரீஸ், யூடியூப் சேனல் என பிஸியாக இருந்துவரும் ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கும் ஹன்சிகா, அந்த இடைவெளியில், வட இந்தியப் பாடகர் டோனி கக்கர் உருவாக்கத்தில் தயாராகியிருக்கும் ‘பூட்டி ஷேக்’ என்கிற தனியிசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், இசைக் காணொலியாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் நடனமாடியிருக்கிறார் ஹன்சிகா. அச்சச்சோ..! அந்தப் பாடலா என்று அலறுகிறார்கள் அவரது ரசிகர்கள்!