அப்பா கதை; மகன் ஹீரோ!
அண்ணன் இயக்க, தம்பி நடிப்பது கோலிவுட்டில் வாடிக்கை. ஒரு மாறுதலுக்கு அப்பாவின் கதையில் நடிக்கிறார் இந்த வளர்ந்து வரும் நாயகன். ஜோன்ஸ்.‘ஏமாலி’,‘தர்ம பிரபு’உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துக் கவர்ந்த சாம் ஜோன்ஸ் தனது அப்பா எம்.ஜோன்ஸ் கதை, வசனத்தில் நடிக்கிறார். மதுரையில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து கதை, வசனம் எழுதியிருப்பதுடன், தனது மாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் படத்தைத் தயாரித்தும் வருகிறார் நாயகனின் தந்தையான எம்.ஜோன்ஸ். மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தாமரைச் செல்வன் இயக்கும் இந்த படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் சாக்ரடீஸ் என்கிற இணை இயக்குநரை மணந்துகொண்ட ‘கயல்’ஆனந்தி, திருமணத்துக்குப் பின் நாயகியாக நடிக்கும் படம் இது.
மாமாவின் வழியில்..!
கன்னடத்தில் உருவானலும் ‘கே.ஜி.எஃப்’ தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகிக் கோடிகளை அள்ளியது. அதனால், கன்னட ஆக்ஷன் படங்களைத் தற்போது தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து ஒரே நேரத்தில் கன்னடம், தமிழில் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் அக்காள் மகனும் முன்னணிக் கன்னட நடிகருமான துருவ் சர்ஜாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பொகரு', தமிழில் 'செம திமிரு' என்கிற தலைப்பில் வெளியாகிறது. ‘மாமா அர்ஜுன் தந்த பயிற்சியுடன் 17 வயதுக் கதாபாத்திரத்துக்காக 33 கிலோ எடையைக் குறைத்து நடித்திருக்கிறேன்’ என்கிறார் துருவ் சார்ஜா. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். அம்மாவுக்கும் மகனுக்கும் இடையிலான ஆக்ஷன் பாசப் போராட்டம்தான் கதை. விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, நந்தகிஷோர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஐந்து ஹாலிவுட் மல்யுத்த வீரர்கள் துருவ் சார்ஜாவுடன் மோதியிருக்கிறார்கள்.
திண்டுக்கல்லில் மிஷ்கின்!
கரோனா கற்றுத்தந்த பாடம், பல இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களை ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளியிருக்கிறது. தற்போது ‘பிசாசு 2’ படத்தை ஒரே ஷெட்யூலில் படமாக்கிவருகிறார் மிஷ்கின். ‘பிசாசு’ படத்தின் முதல் பாகத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தோழிகளுக்கு இடையிலான பழிவாங்கல் கதையாக இதை எழுதியிருக்கிறாராம் மிஷ்கின். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்திலும் அவருடன் பூர்ணா, ‘பிகில்’ படப்புகழ் காயத்ரி முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள். திண்டுகல்லில் பிரம்மாண்ட செட் அமைத்து, அங்கே படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கூகுள் குட்டப்பன்!
தமிழில் மறுஆக்கம் செய்யப்படும் மலையாளப் படங்கள் ஒரிஜினலை ஒருபோதும் மிஞ்சியதில்லை. சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘மாறா’ அதை மாற்றிக் காட்டியது. தற்போது ‘கூகுள் குட்டப்பன்’ படமும் அதைச் சாதித்துக் காட்டும் என்கிறார்கள் அறிமுக இயக்குநர்களான சபரி, சரவணன் இருவரும். கடந்த 10 ஆண்டுகளாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய அனுபவத்துடன், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி விருதுகளைக் குவித்ததுடன் வசூல் வெற்றியும் பெற்ற 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கிவருகிறார்கள். படத்தை கே.எஸ்.ரவிகுமாரே தயாரிக்கிறார். ‘பிக்பாஸ்’ தர்ஷன், லாஸ்லியா ஆகியோருடன் கே.எஸ்.ரவிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்!
நண்பனுக்கு உதவி!
இன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘ட்ரிப்’ திரைப்படத்தில் சுனைனா ஆக்ஷன் கதாநாயகி அவதாரம் எடுத்திருக்கிறார். நர மாமிசம் உண்ணும் கும்பலைப் பந்தாடும் அதிரடியான வேடமாம். பெரும்பாலும் ரொமான்ஸ் நாயகியாகவே நடித்துவந்த சுனைனா, இந்தப் படத்துக்காக நிறைய காயம்பட்டு நடித்திருப்பதாகக் கூறுகிறார் படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். யோகிபாபுவுடன் ஒரு படத்தில் பணியாற்றியபோது அவருடன் நண்பராகிவிட்டாராம் இயக்குநர். யோகிபாபுவை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதிமுடித்து தயக்கத்துடன் போய் அவரிடம் சொல்லியிருக்கிறார். ‘இந்த மாதிரிக் கதையென்றால் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நான் கதாநாயகனாக நடிக்கத் தயார்’ என்று கூறி தயாரிப்பாளர்களையும் யோகிபாபுவே பிடித்துக்கொடுத்துவிட்டாராம்!