‘பூவரசம் பீப்பி’, ‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய இரண்டு படங்களின் மூலம் முன்னணிப் பெண் இயக்குநர்களில் ஒருவராகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார் ஹலிதா ஷமீம். ‘மின்மினி’ எனும் குழந்தைகள் திரைப்படத்தின் சரி பாதியைப் படமாக்கி முடித்துவிட்டு, அதில் நடித்திருக்கும் சிறார்கள் பதின்ம வயதை எட்டுவதற்காகக் கடந்த 7 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார். பாசாங்கற்ற மண்ணின் மனிதர்களை அவர்களுக்கே உரிய இயல்புடன் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தும் இவர், தனது திரைமொழிக்காக கடந்த ஆண்டு தேசிய விருது பெற்றிருப்பவர். தற்போது சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலரது நடிப்பில் ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ எஸ்.சசிகாந்த் தயாரிப்பில் ‘ஏலே’ படத்தை இயக்கிமுடித்திருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து...
‘ஏலே’ படத்தைப் பிரபலப்படுத்த இயக்குநர் - நடிகர் சமுத்திரக்கனி ஊர்ஊராகச் சென்று குச்சி ஐஸ் விற்றார் என்கிற செய்தி வியப்பூட்டியது! நீங்கள் தேசிய விருது பெற்ற இயக்குநர். படத்தைப் பிரபலப்படுத்த அந்த ஒரு தகுதி போதாதா?
தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பிரபலப்படுத்தும் முறைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் நான் ஒரு இயக்குநராக மட்டுமே இயங்கிவந்திருக்கிறேன். ஆனால், சமுத்திரக்கனி அண்ணன், இயக்குநர், நடிகர் என்பதோடு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பின்போது, ‘இந்தப் படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல… நான் ஊர்ஊராகச் சென்று ஐஸ் விற்கப்போகிறேன்’ என்று இந்த யோசனையைச் சொன்னவரே அவர்தான். கரோனா பெருந்தொற்றுப் பிரச்சினை மட்டும் இல்லாதிருந்தால் தமிழகம் முழுவதும் பயணம்செய்து முடித்திருப்பார்.
நீங்கள் படமாக்க விரும்பிய உங்களுடைய முதல் கதை என்று ‘ஏலே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனி பேசினார். ஏன் அப்போது படமாக்க முடியவில்லை?
கதையைக் கேட்ட தயாரிப்பாளர் களுக்கு இந்த அப்பா - மகன் கதை பிடித்திருந்தது. ஆனால், ‘அப்பா - மகனாக நடிக்கும் இருவருமே ‘ஸ்டார் காஸ்ட்’டாக இருக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு அறிமுக இயக்குநராக அது எனக்குப் பெரும் சவாலாக இருந்தது. அப்பா கதாபாத்திரத்துக்கு பிரபலமான நடிகர் கிடைத்தார். ஆனால், மகன் கதாபாத்திரத்துக்கு ஆர்யாவோ, விஷாலோ வேண்டும் என்றபோது முடியாமல் போய்விட்டது. அப்பா கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் கதையில் மகன் கதாபாத்திரத்தில் ஒரு ஸ்டாரை நடிக்கவைக்க சம்மதிக்க வைக்கமுடியவில்லை.
‘பிரச்சார பீரங்கி’ என்று ட்ரோல் செய்யப்பட்டவர் சமுத்திரக்கனி. அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் பற்றிக் கூறுங்கள்...
முதல்நாள் படப்பிடிப்பு அன்றே எனக்கு ஏகப்பட்ட போன் கால்கள். ‘ கிராமத்துப் படமா.. அப்படியானால், கிராமத்து மக்களுக்கு சமுத்திரக்கனி அட்வைஸ் கொடுப்பாரா’ என்று ஒருவர் விடமால் கேட்டார்கள். அதற்கு நான்: ‘இல்லங்க.. இந்தக் கதையில் ஊர்க்காரங்க எல்லோரும் சமுத்திரக்கனிக்கு அட்வைஸ் பண்ணுவார்கள். அப்படியொரு கலகலப்பான கேரக்டரை ஏற்றிருக்கிறார்’ என்று பதில் சொன்னேன்.
சில பேர் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இருப்பார்கள். சிறு வயது முதல் அது அவர்களுடைய குணாதிசயமாக இருக்கும். ‘அய்யோ அவனைப் பார்த்தா தள்ளிப் போயிடனும்... இல்லேன்னா வம்பிழுத்து விட்டுருவான்’ என்று ஆளைப் பார்த்ததுமே ஒதுங்கிப்போகும் அளவுக்கு விட்டேற்றியான மனிதராக, முத்துக்குட்டி என்கிற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி அண்ணன் வருகிறார். ஆனால், கதையோட்டத்தில் பல பரிமாணங்களை அடையும் கதாபாத்திரம் அவருடையது. பெரியவர்களுக்குத்தான் அவரைக் கண்டால் மிரட்சியே தவிர, குச்சி ஐஸ் விற்கும் அவர்தான் சுற்றுப்பட்டில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஹீரோ.
அப்படிப்பட்டவரின் தலைமேல் திடீரெனப் பொறுப்பு வந்து விழுந்துவிடுகிறது. பொறுப்பான அப்பாவாகத்தானே இருந்தோம் என்று முத்துக்குட்டி நினைக்கிறார். ஆனால், அவரது பிள்ளைகள் அப்படி நினைக்கவில்லை. மகன், அப்பாவைப் பற்றிய ஒரு தவறான கருத்துடனே வளர்ந்துவிடுகிறான். காலம் ஓடுகிறது. ஒரே வீட்டில் வசித்தாலும் ஒரு கட்டத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போய் பல வருடங்கள் ஓடிவிடுகின்றன. இதனால் அப்பா தளர்ந்துவிடுகிறார். வெளியூர் சென்றிருந்த மகன் அப்பாவின் இறப்புச் செய்தி கேட்டு வீட்டுக்கு வருகிறான். வந்தவன் அப்பாவுக்காக அழுதானா, இல்லையா என்பதுதான் கதை. அப்பாவின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறிய ஒரு மகனுடைய கதை என்றும் இதைக் கூறலாம்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் முதன்முறையாக இணைந்திருக்கிறீர்கள்?
இதற்குமுன் அவர் பணியாற்றிய படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். இந்தக் கதைக்கும் களத்துக்கும் படைப்பூக்கம் மிகுந்த அவரது பணி பொருத்தமாக இருக்கும் என்றுதான் அவரிடம் கேட்டேன், ஒப்புக்கொண்டார். ஒரே ஷெட்யூலில் முழுப் படத்தையும் எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருந்ததால், அவருடன் பேசக்கூட முடியவில்லை. நேரே படப்பிடிப்புத் தளத்தில்தான் சந்தித்தேன். முதல் நாள் படப்பிடிப்பு முடியும்போதே. இவருடன் நாம் ஒரு படம்தான் பணியாற்றியிருக்கிறோமா என்று நினைக்கும் அளவுக்குப் படக்குழுவில் உள்ள கடைசி ஊழியர்வரை அனைவருடனும் அவ்வளவு இணக்கமாகப் பணிபுரிந்தார்.
‘மின்மினி’ போன்ற ஒரு முயற்சிக்கான ஊக்கம் எங்கிருந்து கிடைத்தது?
‘பூவரசம் பீப்பி’ தொடங்கியபோதே ஒரு சுயாதீன இயக்குநராகத்தான் என்னை நான் அடையாளம் கண்டிருந்தேன். எவ்வளவு தூரம் தமிழ் சினிமா என்னை ஏற்றுக்கொள்ளும், வணிக சினிமாவுக்குள் எவ்வளவு தூரம் நம்மால் புழங்கமுடியும் என்கிற சந்தேகங்கள் எனக்கு இருந்திருக்கின்றன. அந்தச் சந்தேகமும் தயக்கமும் அவசியமற்றவை என்பதை இன்றைக்குத் திரைப்படம் தயாரிக்க வந்திருக்கும் பல தயாரிப்பாளர்களும் படைப்பாளிகளும் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். ‘பூவரசம் பிப்பி’ முடித்ததுமே ‘மின்மினி’யின் முதல் பகுதியைப் படமாக்கிவிட்டோம். இது புரட்சிகரமான முயற்சி என்றெல்லாம் நான் கூறமாட்டேன். ஆனால், சொல்ல வருவதை நம் பார்வையாளர்கள் முழுவதும் நம்பும்விதமாகப் பண்ணவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைக் காத்திருப்பு. அதில் நம்பிக்கை வைத்து மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் இருவரும் படத்தைத் தயாரித்துவருகிறார்கள். ‘ஏலே’ பட வெளியீடு முடிந்ததும் தற்போது பெரிய பிள்ளைகள் ஆகிவிட்ட எனது பழைய கதாபாத்திரங்களுடன் படப்பிடிப்புக்கு புறப்பட்டுவிடுவேன்.
பெண் இயக்குநர்கள் வலிமையாக எழுந்துவரும் காலம் இது. சுதா கொங்கராபோல் மாஸ் நடிகர்களை இயக்கும் எண்ணம் உண்டா?
மாஸ் நட்சத்திரங்கள் என்னிடம் கேட்டு, அவர்களுக்கான கதை இருந்தால் நிச்சயமாக இயக்குவேன். அவர்களுடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிற மாதிரியான படம் என்றால் என்னால் முடியாது. அதை என்னிடம் எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அதேநேரம், மாஸ் நட்சத்திரங்கள் தங்களது வழக்கமான பாதையிலிருந்து விலகி ஒரு படம் பண்ண விருப்பம், கதைக்காக, கதாபாத்திரத்துக்காகப் படம் பண்ண வாருங்கள் என்று கேட்டால் நிச்சயம் அவர்களோடு பணியாற்றுவேன்.