சாகச நாயகனை முன்னிறுத்தும் சினிமாக்கள் நல்ல சினிமாவுக்கு பெயர்போன ஈரான் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊடுருவிவிட்டது. அப்படி ஊடுருவக் காரணமாக இருந்த சாகச நாயகன் ஜேம்ஸ் பாண்ட்.
நம்ம ஊரில் ஆண் ஜேம்ஸ் பாண்டாக ஜெய்சங்கரும் பெண் ஜேம்ஸ் பாண்டாக விஜயலலிதாவும் பெரிய நட்சத்திர அந்தஸ்துடன் திகழக் காரணமாக இருந்தவை ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தாக்கத்தில் உருவான விறுவிறுப்பான சாகஸ நாயகன் கதைகள்தான். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கார்கள் எத்தனை வேகமாக சீறிப் பாய்கின்றனவோ அதே வேகத்தில் பயணிப்பவை பாண்ட் படங்களின் திரைக்கதைகள். ஐந்து காட்சிக்கு ஒரு திருப்பம் என்ற உத்தியை உடும்புப் பிடியாக மசாலா சினிமாக்கள் பிடித்துக்கொள்ள பாதை போட்டுக் கொடுத்ததும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்தான்.
சாகசத்துக்கு நடுவே காதல்
பாண்ட் சாகசம் செய்வதுடன் நிறுத்திவிடுவதில்லை. காதல் செய்வதிலும் அவருக்கு நிகர் அவர்தான். பாண்டை உளவுபார்த்து அவரைத் தீர்த்துக்கட்ட வரும் கதாநாயகி, அவர் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளோடு அகில உலகையும் காக்கவந்த ‘உலக நாயகன்’ என்பதைத் தெரிந்துகொண்டதும் அவரது மஞ்சத்தில் புரண்டபடி அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவார். அவருக்காக உயிரையும் தியாகம் செய்துவிடும் ‘பாண்ட் கேர்ள்’களின் சாகசங்கள் தனி அத்தியாயம்.
வசூல் சாகசம் நிகழ்த்துவதிலும் பாண்ட் படங்கள் ‘பாகுபலி’வகைதான். 1962-ல் ஷான் கானரி நடிப்பில் டெரன்ஸ் யங் இயக்கத்தில் வெளியான ‘ டாக்டர் நோ’ என்ற படம்தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம். ஒரு மில்லியன் டாலரில் உருவான இந்தப் படம் அந்தக் காலகட்டத்தில் 59 மில்லியன் டாலர்களை ஈட்டியது. கடைசியாக 2012-ல் வெளியான ‘ஸ்கைபால்’ 150 மில்லியன் டாலர்களில் தயாராகி 1,200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் குவித்திருக்கிறது. எப்படி இத்தனை பெரிய வசூல்!? ஆங்கிலம் மட்டுமே பேசுகிற நாயகனல்ல ஜேம்ஸ் பாண்ட். தமிழ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் (டப்பிங்) அவர் பேசுகிறார்.
க்ளாஸ் இயக்குநரின் மாஸ் படம்
இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி ‘சீரிஸ்’ வகைப் படங்களின் ‘தல’ என்கிற அந்தஸ்தைத் தக்கவைத்திருக்கின்றன. ஷான் கானரி தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஓய்வுபெறும்போது புதிதாக அறிமுகமாகும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் எவ்வித தயக்கமும் இல்லாமல் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
பாண்ட் படங்களில் வரிசையில் தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் நாயகன் டேனியல் க்ரேக். 2006-ல் வெளியான ‘கேசினோ ராயல்’ படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்டாக அவதாரம் எடுத்த டிவி நடிகர். 23-வது பாண்ட் படமான ‘ஸ்கை பாலை’ இயக்கும் வாய்ப்பு ‘அமெரிக்கன் பியூட்டி’ உட்பட பல கிளாஸ் படங்களை இயக்கிய சாம் மென்டஸ் கைக்கு வந்தது. அந்தப் படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க டேவிட் பெக்காம் என்ற நடிகரை பலரும் பரிந்துரைத்தார்கள். கருப்பின நடிகர்கள் பலரும் பரிசீலனைப் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.
ஆனால், டேனியல் க்ரேக்கை தவிர வேறு யாரையும் ஜேம்ஸ் பாண்டாக பார்க்கிற தைரியம் தனக்கு இல்லை என இயக்குநர் மென்டஸ், டேனியல் மீது மெண்டலாகிவிட்டார். ஆனால், 24-வது படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்துவிட்டது. டேனியலுக்கு முன் பாண்ட் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத நடிகராக இருந்த பியர்ஸ் பிராஸ்னனின் ஸ்டைல், வேகம், ரொமான்ஸுக்கு ஈடாக டேனியலால் நடிக்க முடியுமா என்று விவாதித்துத் தீர்த்த வாய்கள் ‘கேசினோ ராயலும்’,, ‘ஸ்கைஃபாலும்’ வெளியான பிறகு சற்று ஓய்ந்தன.
என்ன எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் இன்று வெளியாகும் 24-வது பாண்ட் படம் 'ஸ்பெக்டர்'. ஜேம்ஸ் பாண்ட் இம்முறை மோதுவது அமானுஷ்ய சக்தி படைத்த வில்லனோடு. அதனால் படத்தில் கொஞ்சம் ஆவி, பேய் டச்சும் உண்டு. அப்படியானால் அதிரடி சண்டைக் காட்சிகள்? அதற்கும் குறைவைக்கவில்லை என்கிறார் இயக்குநர் மென்டஸ். உலகப் புகழ் ரெஸ்லிங் வீரர் படிட்ஸ்டாவுடன் பாண்ட் டேனியல் மோதும் சண்டைக் காட்சி ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்குமாம். இதுவரை சந்தையில் விற்பனைக்கு வராத ஜாகுவர் C-X75 மாடல் காரில் பாண்ட் நிகழ்த்தும் சேஸிங் ஒரு ஃபுல் பிரியாணி சாப்பிட்ட மதமதப்பைக் கொடுக்கும் என்கிறார்கள் ஏற்கெனவே படம்பார்த்துவிட்ட ஐரோப்பிய ரசிகர்கள்.