சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பை அள்ளியது 'சூரரைப் போற்று'. தற்போது ஆஸ்கர் விருதுப் போட்டியிலும் இப்படம் களமிறங்கியுள்ளது. ஓடிடி தளங்களில் வெளியான படங்கள் ஆஸ்கர் போட்டியின் பொதுப்பிரிவில் பங்கேற்கலாம் என்று இம்முறை புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பிரிவுகளில் 'சூரரைப் போற்று' படம் போட்டியிடுகிறது. இதை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இயல்புக்கு மரியாதை!
பட்டப் படிப்பை முடிக்கப் போன ஸ்ரீதிவ்யாவை கோலிவுட் முற்றாகக் கைவிட்டது. கடைசியாக அவர் அதர்வா ஜோடியாக நடித்திருந்த ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஒப்பனை போட்டுக்கொள்ளாத தனது இயல்பான தோற்றங்களை ஒளிப்படங்களாக இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். அவற்றைப் பார்த்த மலையாள இயக்குநரான டியோ ஜோஸ் ஆண்டனி திவ்யாவை கதாநாயகியாகத் தேர்வு செய்திருக்கிறார். அதுவும் ‘லூசிஃபர்’ புகழ் பிருத்விராஜின் ஜோடியாக ‘ஜன கண மன’ என்கிற மலையாளப் படத்தில் நடிக்க!
லைகாவுடன் கூட்டணி!
2021-ல் எதிர்பார்ப்புமிக்கப் படங்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’, ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கிறார். ‘டான்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் அந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா.
ரம்யா பாண்டியன் அடுத்து!
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் கடைசிவரைத் தாக்குப்பிடித்த மூன்று போட்டியாளர்களில் ஒருவராக நின்றுகாட்டினார் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் முடிவில் 'சிங்கப் பெண்' என்கிற பட்டமும் கிடைத்தது. பிக்பாஸுக்கு முன்பே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார். தற்போது, அரிசில் மூர்த்தி என்கிற அறிமுக இயக்குநரின் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ரம்யாவுக்குக் கிடைத்துள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படம் இது.