இருபது ஆண்டுகளைக் கடந்து கவனத்துக்குரிய நடிகராக வலம்வரும் இ.வி.கணேஷ் பாபுவுக்கு கவிஞர் என்கிற அடையாளமும் உண்டு. கரோனா ஊரடங்குக் காலத்தில் மக்களைக் கவர்ந்த 30 விநாடி விழிப்புணர்வு விளம்பரங்களை வரிசையாக இயக்கிய இவர், ‘யமுனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பில் ‘கட்டில்’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
கலைப் படங்களின் வழியாக கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கி 20 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள். இரண்டு வகைப் படங்களில் உங்களுக்கு அடையாளம் கொடுத்தவை எவை?
இரண்டு வகைப் படங்களுமே சமமாக என்னைப் பிரபலப்படுத்தியிருக்கின்றன. ’பாரதி’ படத்தில் பாரதியாரின் மருமகனாக அறிமுகமானேன். அந்தக் காலகட்டம், தமிழில் கலைப் படங்கள் அதிகமாகத் தயாரான நேரம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘ஊருக்கு நூறு பேர்’ குறுநாவலை, எடிட்டர் பி.லெனின் சார் அதே தலைப்பில் இயக்கினார். அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது. அந்தப் படம், சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றதுடன், இந்தியன் பனோரமாவில் தேர்வாகி, பல உலகத் திரைப்பட விழாக்களில் கௌரவமும் பெற்றது. அதேபோல், எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கிடை’ நாவலை ‘ஒருத்தி’ என்கிற தலைப்பில் அம்ஷன்குமார் சார் இயக்கினார்.
அதில் கதாநாயகனாக நடித்தேன். இப்படி, வரிசையாகக் கலைப்படங்களில் நடித்து வந்த என்னை, வெகுஜனப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய் சேர்த்தவை கமர்ஷியல் படங்கள். விஜய்யுடன் ‘ஃபிரெண்ட்ஸ்’, ‘புதிய கீதை’, ‘பகவதி’, ‘சிவகாசி’ ஆகிய நான்கு படங்களில் நடித்தேன். அதன்பிறகு, 50-க்கும் அதிகமான படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தேன். வசூல் வெற்றி, விமர்சன அங்கீகாரம் இரண்டையும் ஈட்டிய ‘ஆட்டோகிராஃப்’, ‘மொழி’, ‘கற்றது தமிழ்’ போன்ற பேசப்பட்ட படங்களும் என் மீது வெளிச்சம் பாய்ச்சின. என்னளவில் கலை, கமர்ஷியல் ஆகிய இரண்டு வகைப் படங்களுமே எனக்கு இரண்டு கண்கள். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இரண்டுமே அவசியம்.
நடிகராகப் பெற்ற அனுபவம், திரைப்படங்களை இயக்கப் போதுமானதா?
நிச்சயமாகப் போதாது. ஆனால், நான் உதவி இயக்குநராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன். கலைஞர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, கவிஞர் இளையபாரதியின் இயக்கத்தில், பிரம்மாண்டத் திரைப்படம்போல் தயாரானது ‘தென்பாண்டிச் சிங்கம்’ தொலைக்காட்சித் தொடர்.
அதில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அப்போது கலைஞருடன் மட்டுமல்ல; அந்தத் தொடரில் நடித்த நாசர் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நவீன நாடக உலகிலிருந்து பங்கேற்ற முக்கியமான ஆளுமைகளுடன் பழகி, பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது. பின்னர், முழுநேர நடிகராக மாறிய பிறகு, நடிகராக மட்டுமே என்னைச் சுருக்கிக்கொண்டதில்லை. நான் பங்குபெறும் காட்சி எடுக்கப்பட்டபின், இயக்குநர் குழுவுடன் இணைந்து எல்லா துறைகளிலும் பணிபுரிந்த படங்கள் நிறைய. அந்த அனுபவமும் இப்போது பயன்படுகிறது.
எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் - உங்களது இயக்கம் என்கிற இந்தக் கூட்டணி எப்படி அமைந்தது?
நான் நடிகராக அறிமுகமான ‘பாரதி’ படத்துக்கு லெனின் சார்தான் எடிட்டர். அதன்பிறகு ‘ஊருக்கு நூறு பேர்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார். அப்போதுமுதல் அவருடைய நட்புக்குரியவன் ஆனேன். தமிழ் சினிமாவில் ரத்தமும் சதையுமான குடும்பக் கதைகளை இயக்கிய பீம்சிங்கின் மகன் என்கிற அடையாளத்தை அவர் வெளிக்காட்டியது இல்லை. தனித்த படைப்பாற்றலால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் முக்கிய ஆளுமையாக இருப்பவர்.
இரண்டு ஆண்டுகள் செலவழித்து திரைப்படக் கல்லூரியில் கற்றுக்கொள்ளும் சினிமா கலையை, நான்கு நாள்களில் இன்றைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டவர். அப்படிப்பட்டவர், இந்தக் கதையைக் கூறியபோது நிமிர்ந்து உட்கார்ந்தேன். எங்கள் குடும்பத்திலும் இதுபோல் நடந்திருக்கிறது. பாரம்பரியம் என்பதில் இருக்கும் நன்மையைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் இந்தக் கதை நெகிழவும் நிமிர்ந்து உட்காரவும் வைக்கும்.
பி.லெனினோடு, ‘ஒய்டு ஆங்கிள்’ ரவிசங்கரன் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை, வைரமுத்து - மதன் கார்க்கி பாடல், கீதா கைலாசம் அறிமுகம், கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே என்று இம்முறை வலுவாகக் களமிறங்கியிருக்கிறீர்களே?
‘யமுனா’ கற்றுத் தந்த பாடம்தான் காரணம். அதில் முழுவதும் புதுமுகங்கள் நடித்தார்கள். விமர்சனரீதியாக பாராட்டுப் பெற்ற அந்தப் படம், அதிகத் திரையரங்குகளில் வெளியாகவில்லை. தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு உரிமை மூலம் லாபமான படம்தான். ஆனால் சிறந்த வெற்றி என்பது திரையரங்க வசூல், விமர்சன வரவேற்பு இரண்டிலும் கிடைப்பதுதான். அதற்காகவே இம்முறை விழித்துக்கொண்டேன். லெனின் சார் பற்றி நான் கூறத் தேவையில்லை. ‘ஒய்டு ஆங்கிள்’ ரவிசங்கரன் தன் கலையாளுமையை நிரூபித்தவர். இதில் பாரம்பரியத்தின் வண்ணத்தைத் தோய்த்துத் தந்திருக்கிறார்.
இயக்குநர் வசந்த் - தேவா கூட்டணியைப் போல் இதில் ஸ்ரீகாந்த் தேவாவுடனான கூட்டணியில் சிறந்த பாடல்கள் அமைந்துவிட்டன. சிருஷ்டி டாங்கே தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகி, ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசத்தை அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறேன். அதேபோல், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், ஓவியர் ஷ்யாம் ஆகியோரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தக் கூட்டணி, வியாபாரம், ஓபனிங் இரண்டுக்குமே கைகொடுக்கும்.
‘கட்டில்’ படத்தின் கதை என்ன?
மனிதன் உட்பட உயிரினங்கள் வாழ்ந்து மறைவதும் புதிய உயிர்கள் தொடர்வதும்தான் உலக நியதி. ஆனால், சில பொருள்களுக்கு உயிர்களைவிட ஆயுள் அதிகம். ஒரு குடும்பம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூற, தலைமுறைகள்தோறும் கடத்தப்படும், கையளிக்கப்படும் பொருள்களில் ரத்தமும் சதையுமான வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் வாழ்க்கை ஒளிந்திருக்கும். ‘கட்டில்’ அப்படித்தான் இந்தக் கதையில் இடம்பெறுகிறது. வைரமுத்து எழுதியிருக்கும் தொடக்கப் பாடலில் ‘மரங்களுக்குள்ளே ஒரு மரபணுக்கூட்டம் வசிக்கிறதே’ என்று எழுதியிருக்கிறார். ஒரு குடும்பத்துடைய பாரம்பரிய உணர்வுகளின் தொகுப்புதான் கதை.
பார்க்கும் ஒவ்வொருவரையும் தன் குடும்பத்தின் வேர்களைத் தேடி, அதை மீட்டெடுக்க வைத்துவிடும் அறம் சார்ந்த கதை. அதை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறோம்.