இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: திரையும் ஓடிடியும்

செய்திப்பிரிவு

மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், மாநில அரசு, திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதியளித்த தனது அரசாணையை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். அப்படி நடந்தால், விஜயின் ‘மாஸ்டர்’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிவிடலாம். ஆனால், வழக்கம்போல ஓடிடி கொண்டாட்டம் பொங்கலுக்கும் களைகட்டிவிட்டது. ஜெயம் ரவியின் ‘பூமி’யும் மாதவனின் ‘மாறா’வும் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்து ரசிகர்களை பண்டிகை மனநிலைக்குத் திருப்பியிருக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில்…

சூர்யா நடிக்க, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலைப் படமாக்க இருக்கிறார் வெற்றிமாறன். அதற்குமுன் சூரி நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கிவருகிறார். முதலில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் கவிதை, பிறகு மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ என்கிற நாவல் என மாறி மாறிச் சென்று, தற்போது ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து சூரிக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறாராம் வெற்றிமாறன். இதில் வரும் போராளி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட பாரதிராஜா விலகிவிட, தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துவருகிறார்.

20 ஆண்டுகள்

பி.வாசு இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 1994-ல் வெளியான ‘சாது’ தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்து கோலிவுட்டுக்கும் பரிச்சயமானார் பாலிவுட் நட்சத்திரம் ரவீணா டான்டன். அதன்பின், கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படத்தில் தேஜஸ்வினியாக வந்து, தனது அதிரடி நடிப்பால் கவர்ந்தார். தற்போது, 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திக்க வருகிறார். இதில் ரவீணா ஏற்றிருப்பது ராமிகா சென் என்கிற வில்லி கதாபாத்திரம். இன்றைக்கு இந்தப் படத்தின் டீசர் வெளியாகிறது.

திடீர் திருமணம்!

புதிய புதிய கதாநாயகிகளின் வரவால் எவ்வளவு போட்டி இருந்தாலும் பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்தியை ரசிகர்கள் மறக்கவில்லை. மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதிருடன் ‘ஜோ’வாக நடித்ததை ரசிகர்கள் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக் கிறார்கள். மீண்டும் கதிருடன் இணையத் தொடர் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கும் ஆனந்திக்கு, அறிவிப்பு இல்லாமலே திருமணம் முடிந்துவிட்டது. மணமகன் சாக்ரடீஸ் ஒரு தொழிலதிபராம்.

SCROLL FOR NEXT