காதல் கதைகளில் அறிமுகமானாலும் பின்பு வித்தியாசமான கதைக் களங்களை நோக்கிய தேடலை மேற்கொண்டவர் மாதவன். தற்போது மீண்டும் அவரது பார்வை மாறுபட்ட காதல் கதைகளின் மீது விழுந்துள்ளது. மலையாள படமான ‘சார்லி’யைத் தழுவி தமிழில் உருவாகியிருக்கும் ‘மாறா’ படத்தில் நடித்துள்ள மாதவன், ‘இறுதிச் சுற்று’ படத்தைப் போல இதுவும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று உற்சாகத்துடன் உரையாடத் தொடங்கினார்.
‘மாறா’ என்ன மாதிரியான காதல் கதை?
இன்றைய நவீன உலகில் அறிமுகமாகும் ஒருவர், நமக்குப் பிடித்தமானவராகவும் மாறிவிடும்போது, அவருடைய மொபைல் நம்பரை வாங்கி வாட்ஸ் ஆப்பில் சேர்த்துக்கொள்வோம். நல்லவற்றை அவருக்குப் பகிர்வோம். அதிகாலை வணக்கம் சொல்வோம். குட் நைட் சொல்வோம். அதில் ஒரு தனி வாழ்க்கையையே வாழ்ந்துவிடுவோம். ஆனால், அவரை நேரில் சந்திக்கும்போது நமது அணுகுமுறையே வேறு விதமாக இருக்கும். அங்கிருந்து மீண்டும் ஒரு புது உறவைத் தொடங்க வேண்டிய தேவையைச் சந்திப்பு உருவாக்கிவிடும். ஆனால் ‘மாறா' படத்தில் நாயகனிடம் ஸ்மார்ட்போன் கிடையாது. அவனுடைய செயல்களின் மூலமே நாயகி, அவனை எடை போடுகிறார். அதேபோலவே நாயகி செய்யும் சில செயல்கள் நாயகனை ஈர்க்கின்றன. இப்படி ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் உருவாகும் அந்த உறவு, எந்த அளவுக்கு ஆழமானது? அது நியாயமான உறவா என்பதைப் பற்றி அலசும் கதை.
ஆக் ஷன் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு, மீண்டும் காதல் படங்களில் நடிப்பது எளிதாக இருந்ததா?
காதல் காட்சிகளில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பயம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என் வயதுடைய ஹீரோக்கள் இளம் ஹீரோயின்களுடன் நடிப்பதைப் பார்க்கும்போது, சில நேரம் பொறாமைப்படுவது உண்டு. உண்மையில் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் நடிக்கும்போது
ஆடியன்ஸுக்கு நம் மீது இருக்கும் மரியாதை போய்விடும். காதல் காட்சிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வயதுக்கு ஏற்ற காதல் காட்சிகள் மட்டுமே நியாயமானவையாக இருக்கும். ‘இறுதிச் சுற்று’ படத்தைப் போல. ஒரு படம் ஓடலாம், ஓடாமல் போகலாம். ஆனால், அது கேவலமான படமாக இருக்க கூடாது. என் மனத்தளவில் ஓரளவுக்கு வயதுக்கு நியாயம் செய்யும் கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருந்ததால் ஓகே சொன்னேன்.
‘அன்பே சிவம்’ முதலே நீங்கள் கதாபாத்திரமாக வாழ விரும்புகிறீர்கள் அல்லவா?
ஆமாம்! நான் தேர்வுசெய்து நடிக்கும் கதைகளில் என்னை மாதவனாக ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டால், நான் தோற்றுவிட்டேன் என்று அர்த்தம். ‘மாறா' என்கிறக் கதாபாத்திரம் எப்போதுமே பயணத்தில், ஒருவித தேடலில் இருக்கக் கூடியது. அவனை சந்திக்கும் யாருமே அவனோடு சகஜமாகிவிடுவார்கள், அவன் முன் யாரும் நடிக்கவேண்டிய தேவை இருக்காது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் இப்படத்தில் பார்க்கலாம்.
இனி ‘தம்பி' போன்ற கதைகளில் நடிக்க மாட்டீர்களா?
‘தம்பி' படத்தில், சமுதாயத்தின் மீது நாயகனுக்கு இருந்த கோபத்துக்குத்தான் அவ்வளவு பெரிய வெற்றி கிடைத்ததே தவிர, என்னுடைய நடிப்புக்கான வெற்றி என்று சொல்லமாட்டேன். அந்த வகையில் அது இயக்குநரின் படம். உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய கதை. நாம் இன்றைக்கு ‘இன்டர்ஸ்டெல்லார்' பார்க்கிறோம், ‘டைட்டானிக்' பார்க்கிறோம். அவர்களின் கலாச்சாரத்துக்கும் நமக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் அவர்கள் கதை சொல்லும் விதம் சரியென்று நம் மனதில் படுகிறது. ஏன் இந்தியாவில் அது போன்ற படங்களை செய்யக் கூடாது?
இன்று தமிழ்ப் படங்கள் ஆஸ்கர்வரை செல்கின்றன. உலக அளவில் பேசப்படுகின்றன. தனுஷ் உலக அளவிலான படங்களில் நடித்துவருகிறார். எனவே, நாம் உலகளவில் சென்றுசேரும் கதைக் களங்களைக் கையாள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே ஓ.டி.டி.யிலும் சரி, திரையரங்கிலும் சரி, மக்கள் படத்தைப் பார்க்க விரும்புவார்கள். கடந்த 10 மாதங்களில் உலகப் படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. சினிமா ரசனை உயர்ந்திருக்கிறது. புத்திசாலி இயக்குநர்கள், கதாசாரியர்கள் அதை மனதில் வைத்தே இனி திரைக்கதை எழுதுவார்கள்.
உங்களுக்காக எழுதப்பட்டக் கதைகளைத் தேர்வு செய்கிறீர்களா அல்லது எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் உங்களுடைய பாணிக்கு மாற்றிக்கொள்கிறீர்களா?
ஒரு நல்ல படக்குழுவும் ஒரு நல்ல கதையும் அமைந்து, நான் படப்பிடிப்புக்கு போய் நடித்துவிட்டு வந்தால், அது எனக்கு ஹனிமூன் செல்வதுபோல் இனிமையானது. ஆனால், நடிக்கும் படங்களில் எனக்கு அதுபோன்ற சுதந்திரம் கிடைப்பதில்லை. நான் திரைத்துறைக்கு வந்த தொடக்கத்தில் நான் செய்வதெல்லாம் தவறு என்று அனைவருமே என்னிடம் கூறுவார்கள். ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னது தவறு, ஒரு நேரத்தில் ஒரு படம்தான் செய்வேன் என்று சொன்னது தவறு, ஹீரோயினுக்கு முக்கியவத்துவம் கொடுத்து, ஹீரோயிசம் இல்லாமல் படத்தில் நடிப்பது தவறு என பல விஷயங்களை தவறு தவறு என்று காதில் ஓதுவார்கள். கடைசியில் பார்த்தால் இப்போது எல்லாரும் என் வழிக்கு வந்துவிட்டார்கள்.
தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு பதிலளித்துவருகிறீர்கள். முன்பெல்லாம் நடிகர் என்றால் திரையில் மட்டும்தான் தோன்ற வேண்டும் என்று இருந்தது. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதை நான் மட்டும் செய்யவில்லை. உலகம் முழுவதும் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் செய்துவருகிறார்கள். பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை ஏன் நடிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கம் தேவை? நாம் நிஜ வாழ்க்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறோம், அவை மக்களுக்கு எப்படிப்பட்ட முன்னுதாரணமாக இருக்கின்றன என்று காட்டினால்தான், அவர்கள் நம்மை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள். அப்படி இல்லையென்றால் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியாது, எப்போது மார்க்கெட் போகும் என்று சொல்ல முடியாது. ஒருவர் நம்மிடம் பிறந்தநாள் வாழ்த்து கேட்கிறார்கள் என்றால், அதை டைப் செய்ய எனக்கு எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது. ஆனால், அது அவருக்கு வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியை கொடுக்கும். இது கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்.