சமீபத்தில் மறைந்த சின்னத்திரை நாயகி சித்ரா, வெள்ளித்திரையில் நடித்துள்ள முதல் மற்றும் கடைசித் திரைப்படம் ‘கால்ஸ்’. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜெ.சபரீஷ், அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர். படம் குறித்து அவரிடம் கேட்டபோது ஒரு முன்னோட்டம் போல் பகிர்ந்தார்.
“நாயகி சித்ரா ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிகிறார். ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களின் குறைகளைத் தொலைபேசி வழியாகக் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்கிற டார்கெட்டை எதிர்கொள்ளும் பெண். அப்படித் தொடர்புகொள்ளும்போது எதிர்முனையில் பேசுகிறவர்களைக் கையாளும்போது, எந்த மாதிரியான சவால்களையெல்லாம் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதை, சுவாரஸ்யமும் அன்பும் கலந்துசொல்லியிருக்கிறேன். இன்றைய சூழலில் ஆன்லைன் வர்த்தகம் மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிக்கொண்டு வருவதையும் அதனால் சமூகத்தின் பல மட்டங்களில் வாழும் குடும்பங்களின் மனநிலை, நுகர்வு மனப்பான்மை ஆகியவற்றைப் பகடியுடன் பேசியிருக்கிறோம். ‘அருவி’, ‘அறம்’ மாதிரியான பின்னணியில் சஸ்பென்ஸையும் கலந்து கொடுத்திருக்கிறோம்.
பொருத்தமான தேர்வு
இதுவொரு பெண் மையத் திரைப்படம். கால் சென்டர் பெண் கதாபாத்திரத்துக்கு நிறைய பேரைத் தேர்வுசெய்து, இறுதியில் சித்ரா பொருத்தமாக இருந்ததால் இறுதிசெய்தோம். காரணம் அவ்வளவு அற்புதமாக, ஆடிஷனிலேயே கலக்கினார். கதாபாத்திரத்துக்கு அவ்வளவு நியாயம் செய்தார். படத்தில் ஹீரோ இல்லை என்றாலும் ஆர்.சுந்தர்ராஜன், ‘நிழல்கள்’ ரவி, டெல்லி கணேஷ், வினோதினி உள்ளிட்ட பல முக்கியக் குணச்சித்திர நடிகர்கள், குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆடிஷனுக்கு வரும்முன் சித்ரா கதையைக் கேட்டார். ‘இந்த மாதிரியான கதைக்குத்தான் காத்திருந்தேன்!’ என்று கூறி ஒப்புக்கொண்டு நடித்தார். இன்றைக்கு அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எங்களுக்குப் பின்னால் இருந்து அவர்தான் இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகளைச் செய்துவருவதாகக் கருதுகிறோம்.
படத்தில் அவர் பயன்படுத்தியுள்ள ஆடையைத்தான் அவர் இறந்த அன்றும் பயன்படுத்தியிருக்கிறார். சமூக வலைதளங்களில், இறந்த நிலையில் அவரைக் கிடத்தியிருந்த படங்களைப் பார்த்தபோது நெஞ்சு வெடித்துப் போய்விட்டது. சிறந்த திறமையாளரை இழந்துவிட்டோம்” என்று கண்கள் கலங்குகிறார் ஜெ.சபரீஷ்.
‘சாட்டை’, ‘ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களில் நடிகராகவும் முகம் காட்டியிருக்கும் சபரீஷ், ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’, ‘கட்டம் சொல்லுது’ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இம்மாத இறுதியில் ‘கால்ஸ்’ திரைப்படம் வெளியாகிறது.