இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: அறிவியல் தரும் விடியல்!

திரை பாரதி

கோலிவுட்டில் எஸ்.செயின் ராஜ் ஜெயின் என்பது பிரபலமான பெயர். ‘பாகுபலி’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட 100-க்கும் அதிகமான முன்னணிக் கதாநாயகர்களின் படங்களை விநியோகம் செய்துப் புகழ்பெற்ற மிஷ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அதிபர்தான் செயின் ராஜ். பட விநியோகம் மட்டுமின்றி, சினிமா ஃபைனான்ஸ் துறையிலும் புகழ்பெற்ற நிறுவனம். ‘ஆக் ஷன் கிங்’ அர்ஜுன் இயக்கம், நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தை தயாரித்த இந்நிறுவனம், மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. செயின் ராஜின் மகன் சி.எஸ்.கிஷன் கதாநாயகனாக நடித்து, தயாரித்துவரும் இந்தப் புதிய படத்துக்கு ‘அஷ்ட கர்மா’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். அப்படத்தின் இயக்குநர் விஜய் தமிழ்செல்வனிடம் உரையாடியதிலிருந்து...

அறிமுகப் பட வாய்ப்பு பிரபலமான நிறுவனத்தில் எப்படிக் கிடைத்தது?

‘சதுரங்க வேட்டை’ மாதிரி சமூகத்துக்கு நல்ல செய்தியைச் சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மிஷ்ரி நிறுவனம் தேடிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். உதவி இயக்குநர்கள் நிறைய பேர் அங்கே போய் கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் செயின் ஜெயினின் மகன் கிஷன் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாக வேண்டும் என்று தனக்குப் பொருத்தமான கதையைத் தேடுகிறார் எனக் கேள்விப்பட்டேன். அவர் எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. உடனே போய் அவரை நேரில் பார்த்தேன். இந்தி நடிகர்போல் இருந்தார். பொதுவாகத் தயாரிப்பாளர்களின் மகன்களுக்கு அவ்வளவு சீக்கிரம் நடிப்பு வராது. இது கவைக்கு உதவாது என்று அறைக்கு வந்தபோது, சக உதவி இயக்குநர் ‘பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்திவரும் நடிப்புப் பள்ளியில் படித்தவர் கிஷன். அவர் நடித்த குறும்படம் யுடியூபில் இருக்கிறது பாருங்கள்’ என்றார்.

நானும் பார்த்தேன், பயிற்சிதான் எதையும் சாத்தியமாக்குகிறது, பின்னணி அல்ல என்பது புரிந்தது. சுறுசுறுப்பாகவும் ஸ்டைலாகவும் கிஷனின் நடிப்பு இருந்தது. அவரது நடிப்பு, தோற்றம், உடல்மொழிக்கு ஏற்ற கதாபாத்திரத்தை உருவாக்க முடிவுசெய்தேன். ‘அஷ்ட கர்மா’ என்ற தலைப்பில் ‘சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர்’ வகையில் திரைக்கதை எழுதிக்கொண்டுபோய் அவருக்குக் கூறினேன். ‘இரண்டு வருடம் பொறுமையாகப் பலக் கதைகள் கேட்டேன். இதுதான் எனக்கு ஏற்ற கதை’ என்று முதல் சந்திப்பிலேயே என்னை ஒப்பந்தம் செய்துவிட்டார் கிஷன்.

சம்ஸ்கிருத வார்த்தைகளில் படத்தின் தலைப்பு இருப்பது எதனால்?

கதைக்கான அடிப்படைதான் காரணம். ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில், அதர்வண வேதத்தில் ‘அஷ்ட கர்மா’ என்ற ஒரு அத்தியாயம் உள்ளது. அதில் ‘பிளாக் மேஜிக்’ போன்ற தீய செயல்களைச் செய்ய நினைக்கும் எதிரிகளிடமிருந்து நம்மை எப்படித் தற்காத்துக்கொள்வது என்று கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து சிறு தாக்கம் பெற்ற கதை.

ஆனால், திரைக்கதையின் ட்ரீட்மெண்ட் என்பது, பிளாக் மேஜிக் – இன்றைய வளர்ந்த மருத்துவ அறிவியல் இரண்டுக்குமான தொடர்பும் முரண்களும் என்ன என்பதை கதாபாத்திரங்களின் வழியாக இணைத்திருக்கிறேன். பிளாக் மேஜிக் என்பது மனிதனுடைய பயம், உளவியல் சிக்கல்கள் நிறைந்த அவனது மனம் இரண்டையும் முதலீடாக வைத்துச் செய்யப்படும் தொழில் என்பது எனது புரிதல். இதைப் பார்வையாளர்கள் நம்பும்விதமாகச் சொல்லியிருக்கிறேன். இந்தக் கதைக்காக 10 புகழ்பெற்ற மனநல மருத்துவர்களின் ‘கேஸ் ஸ்டடி’க்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாநாயகனுக்கான சவால் என்ன?

கதாநாயகன் ஒரு மனநல மருத்துவர். குறிப்பாக என் வீட்டில் பேய் இருக்கிறது என்று பதறுகிறவர்களின் வீட்டுக்குச் சென்று, இல்லை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிப்பதுடன் அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்து லைக்குகளை அள்ளும் சுட்டியான ஆள். சவலான கேஸ்களை மட்டுமே எடுத்துக்கொள்வார். கதாநாயகிக்கும் இதேபோல் ஒரு பிரச்சினை. கதாநாயகியை தொந்தரவு செய்வது தீய சக்தியா அல்லது அவரது மனம் இயங்கும் பகுதியான மூளையில் ஏற்படும் மாறுப்பட்ட ரசாயனச் சுரப்பால் விளையும் மாற்றமா என்பதைக் கண்டறிந்து கதாநாயகியை சிக்கலில் இருந்து எப்படி விடுவிக்கிறார் என்பதும், அதில் அவர் எதிர்கொள்ளும் திருப்பங்கள் என்னென்ன என்பதும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கும்.

கிஷன் தவிர மற்ற நடிகர்கள்?

இரண்டு கதாநாயகிகள். ஒருவர் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் நாயகியான ஷ்ரிதா சிவதாஸ். மற்றொருவர், பிரபல தெலுங்குக் கதாநாயகி நந்தினி ராய். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் வில்லன் தரணி இதில் முக்கிய குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் வருகிறார். கே.வி.ஆனந்த் சாரின் ‘கவண்’ படத்தில் வில்லியாக நடித்த ப்ரியதர்ஷிக்கு இதில் அதிரடியான கதாபாத்திரம். ‘வின்னர்’ படத்தின் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். மற்ற அனைவரும் அறிமுக நடிகர்கள். அறிவியலால் மனிதகுலத்துக்கு எப்போதுமே விடியல் உண்டு என்பதைக் கூறும் படமாக ‘அஷ்ட கர்மா’வை உருவாக்கியிருக்கிறேன்.

SCROLL FOR NEXT