இந்து டாக்கீஸ்

நம் அனுபவத்தின் பிரதிபலிப்பு

களந்தை பீர் முகம்மது

தமிழ்த் திரையுலகை நம் வாழ்வுக்கு அருகில் கொண்டுவந்ததில் கண்ணதாசனின் பங்கும் அளப்பரியது. ஏனெனில், அவருடைய கவித்துவமான பாடல் வரிகள் வாழ்வின் எல்லா அனுபவங்களிலிருந்தும் திரண்டு வந்தவை. ஆனால் அவர் தன் பாடல்களால் தமிழ்த் திரையில் நிலைபெற வேண்டிய நெருக்கடி ஒன்று இருந்தது. அந்த நெருக்கடியைக் கொடுத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

அன்று இருந்த அரசியல் சூழ்நிலையையும், சுதந்திரம் பெற்றதன்பின் உண்டாகியிருந்த சில ஏமாற்றங்களையும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் திறம்பட வெளிப்படுத்தின. அவை சினிமா ரசிகர்களையும் தாண்டி பொது மக்களின் கவனத்துக்கும் வந்தபோது பட்டுக்கோட்டை பெரும்புகழைப் பெற்றார். அவர் மக்கள் மன்றங்களில் புகழ்பெற, கூடவே அவர் கையாண்ட எளிய பதங்களும், மக்களின் சொல்வழக்குகளும் துணைபுரிந்தன. பட்டுக்கோட்டையின் மறைவுக்குப் பின் கண்ணதாசன் மீது இந்தப் பொறுப்பு கண்ணுக்குத் தென்படாத சுமையாக இறங்கியது. கண்ணதாசன் அந்த நெருக்கடியை வென்றாரா?

இலக்கிய அதிர்ஷ்டம்

வென்றார். அதற்காக அவர் கல்யாணசுந்தரத்தின் முழுநகலாக ஆகிவிடவில்லை; தன்னுடைய தனித்துவத்தோடு திரையுலகை ஆக்கிரமித்தார். அவருடைய அரசியல் கருத்துக்களும் பொருளாதார நிலையும் திருகல்முருகல்களாகக் கிடந்தன. வெற்றியும் தோல்வியும் பெரிய ஏமாற்றங்களும் வஞ்சக வலைவிரிப்புக்களும் அவரைப் பின்தொடர்ந்தன. இது ஒருவகையான இலக்கிய அதிர்ஷ்டம் (என்று நாம் கருதிக்கொள்ள வேண்டும்). படங்களின் வாய்ப்புகள் குவிந்தபோது அவர் காட்சிகளுக்கேற்ற பாடல் வரிகளை எழுதினார். அவை நினைத்துப்பார்க்க முடியாத எளிமையும் ஆழமும் கொண்டவை. அதற்கு மேற்குறித்த கசப்பான அனுபவங்கள் உதவின.

கே.பாலசந்தரின் ‘அவர்கள்’ படத்திற்கான பாடல்கள் சாகாவரம் பெற்றவை. பொதுவாக, பாலசந்தரின் கதைகள் தந்திரமான உறவுச் சிக்கல்களைப் பேசுபவை. அதில் ஏற்கெனவே மணம்புரிந்து விலகியிருக்கிற முரட்டுக் கணவன், அலுவலகத் தொடர்பில் நெருங்கி வருகிற இன்னொரு அப்பாவி இளைஞன் ஆகிய இருவருக்கும் இடையில் ஒரு பெண். அவளின் மனம் அந்த அப்பாவி இளைஞனை அவளறியாமல் நாடிச் செல்லும் தருணத்தில் பழைய கணவன் மீண்டும் அவளிடம் குறுக்கிடுகிறான். அவனுடைய மனநிலை முன்புபோல இல்லை; மாறியிருக்கிறது. இது அப்பெண்ணை ஊசலாட்ட மனநிலைக்குத் தள்ளும்போது பின்னணியில் ஒலிக்கிற அந்தப் பாடலின் வரிகள்தான் எவ்வளவு அபாரமானவை!

ரகசியப் புதைமணல்

“கல்லைக் கண்டாள் / கனியைக் கண்டாள் / கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்/ கதை எழுதிப் பழகிவிட்டாள் / முடிக்க மட்டும் தெரியவில்லை.”

கல், கனி ஆகிய இரண்டு பொருள்களையும் அவர் கையாண்ட விதம், படத்தின் காட்சிகளோடு ஒன்றி நிற்கிற ஒரு ரசிகனின் மன ஓட்டத்துக்கு இசைந்து வருவது; அல்லது இயக்குநரின்தேவைக்கு அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தி நிற்பது. கல் கனியாகவும் மாறிவருகிற அந்த ரசவாதம் நாயகியின் குழப்பமும் தயக்கமும் கொண்ட ஊசலாட்டத்துக்குப் பொருந்தி நிற்பது. கல் கனியாக மாறிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்வில் இன்னொரு கனி தேவையா? இந்த நிலையில் கவனம் வைத்தால், வரிகள் அவ்வளவு சாதாரணமானவை! ஆனால் ஆழம் அவ்வளவு சாதாரணமானதா?

இந்தப் படத்தின் வளர்ச்சிப்போக்கில் அந்த முரட்டுக் கணவனின் தந்திரமான ஊடுருவல்கள் அவள் விரும்பும் இளைஞனின் ஸ்தானத்தைக் காலிசெய்துவிடும் அபாயம் நேர்கிறது. அதை இன்னமும் அற்புதமான கற்பனைகளோடுஎழுதுவார்; இதற்காக அவர் கையாளும் உருவகங்கள் இன்னும் சிறப்பானவை.

அன்பின் பரிமாணம்

ஒரு கவிஞனின் மனம், அனுபவத் தழும்புகள் ஏறி முதுமையடைந்த உடலையும் தாண்டி இளமையின் சுழற்சியில் மிதக்கக்கூடியது. அதற்கு பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்ற நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடல் நிறைவான உதாரணமாகும். அதில் இடம்பெறும் “பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் / மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்”. அன்றைய இளைஞர்களின் சொந்தப் பாடலாக இது மாறியிருந்தது. அதுவும்போக எண்ணற்ற தம்பதியரிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகளை இதுபோன்ற பாடல் வரிகள் மருந்தாக இருந்து மாற்றியமைத்திருக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. “நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்” என்கிற வரி அன்பின் பரிமாணத்தை மிக உயர்ந்த நிலையில் வெளிப்படுத்துகிறது.

குறையாத ஆற்றல்

பொதுவாகவே கண்ணதாசன் என்றதும் நாம் அவருடைய பாடல் வரிகளுக்குள் தாவிக்குதிக்கும் வேலையைத்தான் உடனடியாகச் செய்கிறோம். ஆனால் அவர் பன்மைத்துவம் மிக்கவர். அவரை ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிறுத்தி சாதனைகளை அளப்பது ஒருவகை அநீதி. அவரை ஆத்திகனாக எண்ணும் சமயத்தில் ஒரு நாத்திகனாகவும் அவரைக் கருத முடியும். அவர் வேதாந்தியாக இருக்கும்போதே சித்தாந்த வாதியாகவும் மாற்றிக்கொள்ள முடியும். பணத்தின் மடியில் புரண்ட அதே வேகத்தில் எல்லாவற்றையும் இழந்து கையேந்தாத யாசகனாகவும் தவித்திருக்கிறார்.

இன்னமும் பல உண்டு. தான் முன்பு எழுதிய பல கவிதைகளை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்து பாடலாக்கித் தந்தார். பல அரசியல் கட்சிகளுக்கும் மாறிமாறிச் சென்றாலும் கடைசிவரை யாராலும் அவரைப் பகைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் குழந்தைமைத் தன்மை கொண்ட ஆபத்தில்லாத எதிரி. ஆனால் கண்ணதாசனின் ரசிகர்கள் அவருடைய எல்லா பலவீனங்களையும் கழித்துவிட்டு அவரின் இலக்கிய உலகத்தோடு மட்டும் தொடர்புகளை வைத்துக் கொண்டனர்.

கண்ணதாசன் கோலோச்சிய காலத்தில் பலவகையான திரைப்படங்களும் தமிழ்க் குடும்பங்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தின. அவை மிக உயர்ந்த கலை வடிவத்தை எட்டாதது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களின் சொந்தப் பிரச்சினை. ஆனால் கிடைத்த காட்சியமைப்பைக் கண்ணதாசன் தன் அனுபவ ஞானத்தால் நன்றாக உள்வாங்கிக் கொண்டார். அதன் விளைவாக அவர் ஆழ்ந்த தத்துவங்களையோ, சிலுசிலுக்கும் காதலையோ, உறவுகளின் மோதலையோ அற்புதமான பாடல் வரிகளுக்குள் படம்பிடித்துத் தந்தார். ஆகவே நம்மனைவரின் வாழ்க்கைச் சிக்கல்களின் ஒவ்வொரு இழையிலும் கண்ணதாசனின் பாடல் வரி ஒன்று இசைந்து வந்தபடியே உள்ளது. “பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்தபாசமே ஏனடா? பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா”. இந்த நிலையை அனுபவிக்காத குடும்பமோ தனிமனிதனோ இன்றில்லை. இந்தத் துயரை விவரிக்கக் கண்ணதாசனை விட்டால் நமக்கும் வேறு ஆள் இல்லை.

“அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டான் / நிம்மதி இழந்தே நானலைந்தேன் / இந்த நிலையினில் ஏன் உன்னை தூதுவிட்டான்” என்ற வரிகள் பிரியமான மனைவியை இழந்தவனிடம் காலம் தன் அடுத்த கருணையை விரிக்கும் தருணம்; இதற்கான எளிய உவமையை நாம் எங்குபோய்த் தேடுவது?

ஒரு பெண்ணாகவும்...

இத்தனைக்கும் நடுவிலும் கண்ண தாசனிடம் ஓர் அற்புதம் இருந்தது. அவர் தன் மனதில் ஒரு காதலியை எப்போதும் குடிவைத்திருந்தார்; அல்லது அவரே பாலினம் மாறிய இன்னொரு பிம்பமாய் இருந்தார். நம் வாழ்வில் (சினிமாவில்தான் ) நம் காதலிகள் பட்ட மனத்துயரை - இழப்பை அவரைப்போல் பரிதவித்து அல்லது ஞானநிலை பெற்று வடித்த கவிஞன் வேறு யார்? பெண்மையின் தவிப்பென்ன, அதன் உச்சம் என்ன, காதலை இயற்கையோடு கலந்துறவாடும் தன்மை என்ன? எல்லாவற்றிற்கும் அவரிடம் விடை உண்டு; ஆறுதல் உண்டு. பாக்கியலட்சுமி திரைப்படத்தில் வரும் “காணவந்த காட்சியென்ன வெள்ளி நிலவே” பாடலும், பாலும் பழமும் படத்தில் வரும் “காதல் சிறகைக் காற்றினில் விரித்து பாடலும்” நேர் உதாரணங்கள்.

நம் அனுபவங்களின் பிரதிபலிப்பாக நம்முடன் எப்போதும் இருந்து வரும் கண்ணதாசனின் கவித்துவம்தான் நம் வாழ்வின் மீது கவிந்த இனிய சுமை.

அவர் தன் மனதில் ஒரு காதலியை எப்போதும் குடிவைத்திருந்தார்; நம் வாழ்வில் நம் காதலிகள் பட்ட மனத்துயரை - இழப்பை அவரைப்போல் பரிதவித்து வடித்த கவிஞன் வேறு யார்?

SCROLL FOR NEXT