இர்ஃபான் கான் யாருடன் நடித்தாலும் சிறந்த கெமிஸ்ட்ரியுடன் நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர் என்று சொல்கிறார் நடிகை கொங்கணா சென். “எனக்கு எப்போதும் இர்ஃபானுடன் சிறந்த கெமிஸ்ட்ரி உண்டு. அவர் யாருடன் நடித்தாலும் சிறந்த கெமிஸ்ட்ரியைத் திரையில் கொண்டுவந்துவிடுவார். ஆனால், ‘தல்வார்’ படத்தில் எனக்கும், அவருக்கும் நிறைய காட்சிகள் அமையவில்லை. அது எனக்கு வருத்தம்தான்” என்று தெரிவித்திருக்கிறார் கொங்கணா.
‘தல்வார்’ படத்தில் நீரஜ் கபியுடன் கொங்கணா நடித்திருந்தார். “நீரஜ்ஜும் தேர்ந்த நடிகர். ‘ஷிப் ஆஃப் தீசஸ்’ படத்தில் அவர்தான் துறவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. ஒரு நடிகராக அவரைத் தெரிந்துகொள்ள இந்தப் படம் உதவியது” என்று சொல்கிறார் கொங்கணா.
மீண்டும் பிரேம்
சல்மான் கான், சோனம் கபூர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பிரேம் ரதன் தன் பாயோ’ படத்தின் டிரைலருக்கு யூடியூபில் அமோக வரவேற்பு. வெளியாகிய நான்கே நாட்களில் எழுபது லட்சம் ஹிட்டடித்திருக்கிறது. இரண்டு நிமிடங்கள் ஓடும் படத்தின் டிரைலரே படம் எந்த அளவுக்குப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டிவிடுகிறது. சல்மான் இந்தப் படத்தில் இளவரசனாகவும், சாமானியனாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சல்மானின் காதலி கதாபாத்திரத்தில் சோனம் கபூர்.
இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யாவுடன் சல்மான் கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் திரைப்படம் இது. சல்மானின் புகழ்பெற்ற ‘பிரேம்’ கதாபாத்திரங்களுக்குச் சொந்தகாரர் இவர்தான். வரும் தீபாவளிக்குப் படம் வெளியாகிறது.
விரைவில் ‘ஃபிதூர்’
‘கை போ சே’ இயக்குநர் அபிஷேக் கபூரின் அடுத்த படமான ‘ஃபிதூர்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆதித்தியா ராய் கபூரும், கத்ரீனா கைஃபும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்’ நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஃபிதூர்’ படத்தில் நானும் ஆதியும் உற்சாகத்துடன் நடித்திருக்கிறோம். நான் இது ஒரு அழகான, தீவிரமான காதல் கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அபிஷேக் இதை முற்றிலும் புதுமையாக மாற்றியிருக்கிறார்” என்று சொல்கிறார் கத்ரீனா.
இந்தப் படத்தில் கத்ரீனா ‘ஃபிர்தவுஸ்’ கதாபாத்திரத்திலும், ஆதித்தயா ‘நூர்’ கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் ரேகா நடிப்பதாக இருந்தது. ஆனால், பாதியில் ரேகா விலகிவிட்டதால் அந்தக் கதாபாத்திரத்தில் தபு நடித்திருக்கிறார்.