இந்து டாக்கீஸ்

சினிமா தொழில்நுட்பம்: உலகப் பணக்காரர் ஆக்கிய கிராஃபிக்ஸ்!

திரை பாரதி

வேற்றுக்கிரகத்துக்குப் விண்வெளிப் பயணம், பூமிக்கு வரும் ஏலியன்கள், கால இயந்திரத்தில் கலர்ஃபுல் பயணம், சிந்திக்கவும் அன்பு செய்யவும் கோபம் கொள்ளவும் செய்யும் புதிய தலைமுறை ரோபோக்கள் உள்ளிட்ட அறிவியல் புனைவுக் கதைக் களங்கள் அமெரிக்க சினிமாவுக்கு புதிதல்ல. இவ்வகைப் படங்களை வசூல் மசாலாவாக அரைத்து வந்த ஹாலிவுட்டுக்குள் புயல் எனப்புகுந்தனர் ஃபிரான்சிஸ் கப்போலா, ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகிய மூவரும். 70-களின் தொடக்கத்தில் ஹாலிவுட்டில் புதிய அலையை உருவாக்கிய இவர்கள் அறிவியல் புனைவுக் களத்தில் மசாலாவை மீறிய முன்மாதிரிப் படங்களைப் படைத்து புதிய பாதையை அமைத்தனர்.

குறிப்பாக ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசைப் படங்களை இயக்கிய ஜார்ஜ் லூக்காஸ் 35 ஆண்டுகளுக்கு முன்பே டிஜிட்டல் ஒளிப்பதிவு, மினியேச்சர் செட்கள், மோசன் கண்ட்ரோல் படப்பிடிப்பு, 3டி மாடலிங் - அனிமேஷன் ஆகிய தொழில்நுட்பங்களில் துணிச்சலான சோதனை முயற்சிகளைச் செய்து கிராஃபிக்ஸ் உலகின் கில்லாடியாக வலம் வந்தார்.

உலக பணக்காரர் ஆக்கிய கிராஃபிக்ஸ்

38 ஆண்டுகளுக்கு முன்(1972) ஜார்ஜ் லூக்காஸ் எழுத்து, இயக்கத்தில் உருவான முதல் ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம் அக்காலகட்டத்தின் வசூல் சாதனையை நிகழ்த்தியது. கூடவே ஆறு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. அதில் ஒன்று சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருது.

கிரகங்களுக்கு இடையிலான போர்கள் என்ற மையக்கருவுடன் நன்மைக்கும் தீமைக்குமான கதாபாத்திரங்களுக்கு மத்தியில் மனிதர்களும் அபார ஆற்றல்கொண்ட தீயசக்திகளும் விநோத ஏலியன்களும் ட்ரைடுகளும் ரோபாக்களும் கதாபாத்திரங்களாக அறிமுகமாகி அமெரிக்காவின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது ஸ்டார் வார்ஸ். ஸ்டார் வார்ஸ் வரிசைப் படங்களின் ஃபாண்டஸியான கற்பனையை விஷுவல் எஃபெக்ட் காட்சிகளாக நம்பகத்தன்மையுடன் வடிப்பதற்காகவே ‘இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மாஜிக்’ (Industrial Light & Magic) என்ற தனி நிறுவனத்தைத் தொடங்கினார் லூக்காஸ். இந்த நிறுவனத்தின் மூலம் லூக்காஸ் செய்த கிராஃபிக்ஸ் ஜாலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ‘ஸ்டார் வார்ஸ்' வரிசையில் இதுவரை 6 படங்களை வெளியிட்டுள்ள லூக்காஸ் அறிவியல் புனைவு திரைப்படங்களில் யாரும் நிகழ்த்தமுடியாத சாதனைகளை நிகழ்த்தி அமெரிக்கப் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் சுமார் 4 பில்லியன் டாலர்களுக்கு வால்ட் டிஸ்னி நிறுவனத்திடம் தனது பட நிறுவனத்தை விற்றுவிட்டு “இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன். இனி ஸ்டார் வார்ஸ் படங்களை அவர்கள் இயக்கட்டும்” என்று அறிவித்தார். இருப்பினும் அவர் உருவாக்கிய நட்சத்திரச் சண்டைக்கு ஓய்வே இருக்கப்போவதில்லை. காரணம் ‘ஸ்டார் வார்ஸ்’ என்றாலே பைத்தியமாக அலையும் ‘கல்ட் ரசிகர்கள்’ அத்தகைய படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஜாலங்களுக்காக யார் இயக்கினாலும் விழுந்து விழுந்து பார்ப்பதற்கும் வியப்பதற்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வியாபித்திருக்கிறார்கள்.

டிசம்பரில் 7-ம் பாகம்

கடைசியாக ஸ்டார் வார்ஸ் பட வரிசையில் ஆறாவது படமாக ‘ரிவெஞ் ஆஃப் த சித்’ (Revenge of the Sith) கடந்த 2005-ல் வெளியானது. தற்போது பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் டிஸ்னி நிறுவனத் தயாரிப்பில் 7-வது பாகம் வரும் டிசம்பர் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்டார் வார்ஸ் 7-ன் காய்ச்சல் ஐரோப்பாவை கலங்கடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜார்ஸ் லூக்காஸ் நிகழ்த்திய தொழில்நுட்பச் சாதனைகளை கொஞ்சம் நோட்டமிடுவோம்.

டிஜிட்டல் கலை

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஓங்கி உயர்ந்து நின்றது தொண்ணூறுகளில்தான். ஆனால் டிஜிட்டலின் தரம் குறித்த முறைமைகள் வரையறுக்கப்பட்டு, 2002-ல் ஒரே தரத்தில் உலகெங்கும் டிஜிட்டல் சினிமாக்கள் திரையிடப்பட்டன. இப்படித் திரையிடப்பட்ட முதல் படம் என்ற பெருமையை ஸ்டார் வார்ஸ் இரண்டாம் பாகம் தட்டிச்சென்றுவிட்டது. டிஜிட்டல் கேமரா மூலம் இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து உலகின் முதல் முழுமையான டிஜிட்டல் படப்பிடிப்பு செய்யப்பட்ட படமாக இதை சினிமா வரலாற்றில் பதிவு செய்துவிட்டார் லூக்காஸ்.

விஷுவல் எஃபெக்ட்ஸ் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும் தற்காலத்தில் கூட மிகப்பெரிய செட்களை சிறிய மாடல்களாக செய்து படமாக்கும் மினியேச்சர் தொழில்நுட்பம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஜார்ஜ் லூக்காஸ் ஸ்டார் வார்ஸ் படங்களில் மினியேச்சர் தொழில்நுட்பத்தை தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டார். கட்டிடங்கள், விண்வெளிக் கலங்கள், உள்ளரங்குகள் ஆகியவற்றை மினியேச்சர்களாக வடிவமைத்து அவற்றை டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட பின்புலங்களுடன் திறமையாக இணைத்தார்.

கேமராவின் கடிவாளம்

இவையெல்லாவற்றையும் விட ஜார்ஜ் லூக்காஸ் அற்புதமான தொழில்நுட்பம் ஒன்றை தனது படங்களுக்காக உருவாக்கினார். அதுதான் கேமரா மோசன் கண்ட்ரோல். நிஜ நடிகர்களோடு 3டியில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களையும் ஒரேகாட்சியில் கச்சிதமாக இணைக்க இந்தத் தொழில்நுட்பம் அவருக்குத் தேவைப்பட்டது. பொதுவாக கேமராவின் நகர்வென்பது அதுபொருத்தப்பட்டிருக்கும் டிராலி(Track and Trally), தண்டவாளம் போன்ற டிராக் தேவைப்படாத சிறு டாலி வாகனம்(Dolly), கிரேன்கள்(Cranes) ஆகிவற்றைப்பொருத்து மாறுபடும். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரால் காட்சி மற்றும் கதாபாத்திரத்தின் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் விதமாக கேமராக்கோணமும் நகர்வுகளும் முன்னதாக முடிவுசெய்யப்படும். இப்படி முடிவு செய்யப்பட்ட நகர்வுகளையும் அசைவுகளையும் ஒளிப்பதிவில் கொண்டுவர ஆபரேட்டிவ் கேமராமேன், கிரேன்மேன், டிராக் அண்ட் டிராலியை தள்ளும் தொழிலாளர்கள் ஆகியோரின் மனித உழைப்பு தேவைப்பட்டது. இன்றும் மனித உழைப்பு இத்துறைக்குத் தேவைப்படுகிறது. ஆனால் கேமரா அசைவுகளை இயக்க மனிதசக்திக்குப் பதிலாக கம்ப்யூட்டர் மற்றும் ஹைட்ராலிக் சக்தியை இணைத்துப் பயன்படுத்தினார் லூக்காஸ். கம்ப்யூட்டரில் ஒளிப்பதிவாளர் உள்ளீடு செய்யும் இடம், வலம், மேல், கீழ் பின்தொடர்தல், பாய்ந்து செல்லுதல், கண்காணித்தல் உள்ளிட்ட கேமராவின் பல நகர்வுகளை கம்யூட்டரோடு இணைக்கப்பட்ட தானியங்கி கிரேன்களும் ரிமோட் ஹெட்(remote head) கருவிகளும் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தினார். இந்த அற்புதம் உலகம் முழுவதுமான திரைப்படமாக்கலில் பெரும் புரட்சியை உருவாக்கியது. இந்த வசதியால் என்னென்ன லாபம்? அடுத்துப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT