பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகிபாபு, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், விடிவி கணேஷ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு ‘நாங்க ரொம்ப பிஸி’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பத்ரி. ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிஸியான திரைக்கதை ஆசிரியர். கரோனா ஊரடங்குக்குப் பிறகு ஒரே மூச்சில் இந்தப் புதிய படத்தை முடித்திருக்கிறார். அது பற்றி அவருடன் உரையாடியதிலிருந்து..
கரோனா காலத்தில், மக்கள் பெரும்பாலும் முடங்கிக் கிடக்க, ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற தலைப்பு நேரெதிரான மனநிலையைப் பிரதிபலிக்கிறது. எதைப் பற்றிய கதை?
திருவிழா, பண்டிகை நாட்கள்ல வீட்ல இருக்கிற எல்லோரும் கூடி அமர்ந்து ஜாலியா ஒரு படம் பார்த்தா, அந்த அனுபவம் எப்படி இருக்கும்? அப்படி ஒரு படம் பண்ணனும்னு ஆசை. கரோனா அச்சுறுத்தல் தொடங்கினப்போ, கடந்த பிப்ரவரியில் ‘மாயாபஜார் 2016’ என்ற தலைப்போட ஒரு கன்னட படம் வந்துச்சு. அதோட ரீமேக்தான் இந்தப் படம். அதை அப்படியே எடுக்காம நம்ம ஊர் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாற்றி உருவாக்கி இருக்கோம்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு அறிவிப்பு வந்த 2016 காலகட்டத்துல நடக்குற கதைக்களம். காசு மட்டுமில்ல, மனுஷ வாழ்க்கையும் செல்லாமப் போனா எவ்வளவு காமெடியா இருக்கும்கிறதுதான் பிளே. அதாவது செல்லாத காசு பற்றி இதுவரை சொல்லப்படாத கதை. ஆக்ஷன், த்ரில், காமெடின்னு இந்த காலகட்டத்துல நாம இழந்துட்ட எல்லா சந்தோஷத்தையும் திரும்பக் கொடுக்கிற கலகலப்பு அதிகமுள்ள திரைக்கதை. என்ன... ? படப்பிடிப்பை நடத்துவதுதான் ரொம்ப சிரமமாப் போச்சு.
அப்படி என்ன பெரிதாக சிரமம்?
நல்லா கேட்டீங்க..! ‘கரோனா விதிமுறைகளோடு 75 நபர்களை வைத்து ஷூட் செய்யலாம்!’னு அரசு அனுமதி தந்த நேரத்துல, படப்பிடிப்பை தொடங்கினோம். ஒரு சாலையோர காட்சி எடுக்கப்போனால் அந்த இடத்தில், ‘மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்; கை, கால்களை சுத்தமாக வைத்திருங்கள்!’ என்கிற வாசகம் ஒட்டிய போர்டுகள் இருக்கும். கடைக்குப் போனால், விற்பனைக்காக முகக் கவசங்கள் தொங்கும். எங்களுக்கோ, இதெல்லாம் எதுவும் இல்லாம 2016-ன் பின்னணிபோல கட்டவேண்டிய கட்டாயம். அதனால, ரொம்பவே சிரமமப்பட்டு அதெல்லாம் கண்ணுல தென்படாதவாறு ஷூட் செய்ததுதான், பெரிய சவாலாக இருந்தது. இருந்தாலும், அதுலயும் ஒரு ஜாலியும், திருப்தியும், கலாட்டாவும் இருந்ததுதான் நிஜம்.
இவ்வளவு நடிகர்கள் இந்தக் கதைக்குத் தேவைபட்டார்களா?
இன்னைக்கு ஒரு படம் ஹிட் அடிக்கணும்னா, அதுல வர்ற நடிப்புக் கூட்டணி ரொம்பவே முக்கியம். ஆக்ஷனுக்கு பிரசன்னா, காதலுக்கு அஸ்வின், வில்லத்தனத்துக்கு ஷாம், நட்புக்கு சமுத்திரக்கனி, காமெடிக்கு யோகிபாபுன்னு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை கையில எடுத்துக்கிட்டாங்க. அதுபோக விடிவி கணேஷ், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், மொட்ட ராஜேந்திரன்னு கலகலப்பைக் கூட்ட ஒரு பெரிய பட்டாளமே இணைஞ்சாங்க. கதையை நகர்த்தவே இவ்வளவு நடிகர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள்.
இயக்குநர், இணை இயக்குநர், மீண்டும் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என நீங்கள் சினிமாவில் முன்பின்னாகப் பணியாற்றுவது புதிதாக இருக்கிறதே?
பொழுதுபோக்குத் துறை சார்ந்த தொழிலை கையில் எடுத்தாச்சு. கதை, எழுத்து, இயக்கம்னு மாறிமாறி அதுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒரு படத்தை இயக்கிட்டா, திரும்பவும் இணை இயக்குநராக வேலைசெய்யக் கூடாதுன்னு நினைக்கக் கூடாது. ஓர் இயக்குநருக்கு இணையான வேலை கொண்டதுதான் இணை இயக்கம். அதேபோலத்தான் திரைக்கதை வேலைகளும்.
அடுத்து?
எங்கள் அண்ணன் சுந்தர்.சி நடிக்க அடுத்த படத்தை ஜனவரியில் தொடங்குகிறோம். கதை, திரைக்கதை, லொக்கேஷன் என எல்லாமே தயார்.